33. ஐந்தாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும்
                  கருத்து எய்துமேல்,
அரு மாதவன்தானும் அவன்; முத்தி தருகைக்கும்
                   அவனே குரு;
தரு மாலை மணம் நாறு தாளானை, வண்டு ஏறு
                   தண் அம் துழாய்
மரு மாலை புனைகின்ற திருமாலை, அல்லாது,
                   வல்லார்கள் யார்?
1
உரை
   


இரு மன்னர் தானைகளும் திரண்டு
போருக்கு எழுதல்

வர சங்கமும், தாரையும், சின்னமும், பொன்
                   மணிக் காளமும்,
முரசங்களும், துந்துபியும், எங்கும் எழ விம்ம,
                   முழ விம்மவே,
கரை சிந்து, திரை சிந்து, நுரை சிந்து, விரை சிந்து,
                   கணம் என்னவே,
அரசன் பெருஞ் சேனை வெள்ளம் புறப்பட்டது,
                   அணியாகவே.

2
உரை
   

விருது ஆயிரம் கோடி, முரசு ஆயிரம் கோடி,
                   மேன்மேல் எழ,
பொரு தானையுடன் வந்து அணைந்தார்,
                   புறந்தந்த பூபாலரும்;
கருதா அரக்கன் கொடுந் தானை, இறைவன் கடுந்
                   தானை, என்று
இரு தானையும் போல, எதிருற்ற, இரு மன்னர்
                   இரு தானையும்.
3
உரை
   


கண்ணனுடன் தேரில் விசயன் புறப்படுதல்

'அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர்;
                   இன்றும் அவர்போல் உமைத்
துரக்கைக்கு நின்றேன்' எனத் தெவ்வர் தம்மொடு
                   சொல்லிற்று என,
குரக்குக் கொடித் தேரின்மிசை ஏறி விசையோடு
                   கூத்தாடவே,
புரக்கைக்கு நின்றோனுடன், செங் கண் விசயன்
                   புறப்பட்டனன்.

4
உரை
   


விசயன் வீடுமனை அடுக்கும் எல்லையில், எதிர்த்த
கலிங்கர் அவன் அம்பினால் புண்ணுறுதல்

அரன் நின்றனன் போல, அவன் நின்ற தேர் ஒத்த
                   அணி தேர்மிசை,
பொர நின்ற நதிமைந்தனொடு சென்று, முனை நின்று
                   பொர எண்ணியே.
சரம் நின்ற குனி சாப விசயன்தனைக் கொண்டு,
                   சங்கம் குறித்து,
உரம் நின்ற அவன் நெஞ்சுடைப் பாகன் மான் தேர்
                   உகைத்து ஊரவே,

5
உரை
   

ஊர்கின்ற தேர் ஓடி, உயர் கங்கை மகன் நின்ற
                   ஒரு தேருடன்
சேர்கின்ற எல்லை, கலிங்கேசர் முதலான
                   தெம்மன்னர் போய்,
நேர்கின்ற விசயன்தனுடன் மோதி, அவன் ஏவு
                   நெடு வாளி பட்டு,
ஈர்கின்ற புண் வாயில் வார்கின்ற செந்நீரினிடை
                   மூழ்கினார்.
6
உரை
   


அது கண்டு வீடுமன் அம்பு தொடுக்க, விசயன்
அவனது வில் முதலியவற்றைத் துணித்தல்

செல்லும் கலிங்கேசர் அலையுண்ட நிலை கண்டு,
                   சிவன் என்று பார்
சொல்லும் பெருஞ் செம்மல் பல்லங்கள் அவன்மேல்
                   தொடுத்து ஏவினான்;
கொல்லும் கொடும் பாணம்அவை ஐந்து விசயன்
                   கொதித்து ஏவினான்,
வில்லும், தன் வில் நாணும், விறல் அம்பும், உடன்
                   அற்று விடை கொள்ளவே.

7
உரை
   


இவர்கள் இங்ஙனம் பொர, வீமனைத் துச்சாதனன்
முதலியோர் வளைந்து பொருது தோற்று ஓடுதல்

இவர் கொண்ட செற்றத்தொடு இவ்வாறு போர் செய்ய,
                   இகல் வீமனைப்
பவர் கொண்ட நெடு வேலைபோல் வந்து மொய்த்தார்கள்,
                   பல மன்னரும்;
கவர் கொண்ட முனை வாளி அவர் மார்பு தோறும்
                   கழன்று ஓடவே,
தவர் கொண்டு செற்றான், முன் அளகேசன் அமர் வென்ற
                   தனி ஆண்மையான்.

8
உரை
   

துச்சாதனன், தம்பிமார், மைந்தர், மற்றும் சகுனி,
                   சல்லியன்,
எச் சாப முடி மன்னரும், பின்னரும், துன்னி
                   எதிர் சீறினார்;
அச் சாபம் ஒன்றாலும், அன்று, அவ் அவர்க்கு
                   அம்பு அநேகம் தொடுத்து,
உச்சாசனம் சொல்லி நின்றான், அவ் அடல்
                   மன்னர் உடன் ஓடவே.
9
உரை
   


தம்பியர் நிலைகண்டு, துரியோதனன் சினத்துடன்
தேரில் வந்து வீமனுடன் பொருதல்

செருத் துப்பு உடைந்து ஓடிவரு தம்பியர்க்
                   கண்டு, செற்றத்துடன்
கருத்துப் புகைந்து, உள் கலங்கி, கடைக் கண்கள்
                   கனல் காலவே,
'மருத்துத் தரும் காளை நின்றானை இன்று ஆவி
                   மலைவேன்!' எனா,
உருத்துத் தடந் தேரின்மிசை வந்து அடுத்தான்,
                   உரககேதனன்.

10
உரை
   

பேராத நிலை நின்று, வன்போடு சாபம் பிடித்து,
                   எங்கணும்
சோராத வய வாளி ஈர்-ஐந்து சேரத் தொடுத்து
                   ஏவினான்;
ஆர் ஆவமுடன் இட்ட கவசம் பிளந்து ஓடி,
                   ஆண்மைக்கு எலாம்
வீராபிடேகம் செய் வய வீமன் அகல் மார்பில்
                   மிக மூழ்கவே,
11
உரை
   

ஈமந்தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன்,
                   எதிராய் வரும்
காமன்தன் உடல்மேல் விழித்திட்ட நுதலில்
                   கனல் கண் என,
தாமம் புனைந்து ஆர மணம் நாறும் மார்பத்
                   தடம் தோயவே,
வீமன் தொடுத்தான், ஒர் எதிர் அம்பு பார்
                   மன்னன் மிடல் சாயவே.
12
உரை
   


துரியோதனன் ஓர் அம்பு பட்டு அலமர, பூரிசவா
வந்து வீமன்மேல் இரண்டு அம்பு தொடுத்தல்

ஓர் அம்பின் உளைந்து, ஏழ் உலகு உடையான் அலமரவே,
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க,
போர் அம்பர உலகு ஆள்பவர் புகழ் பூரிசவா வந்து,
ஈர்-அம்பு தொடுத்தான், ஒரு தேர்மேலினன் இவன்மேல்.

13
உரை
   


அது கண்டு, சாத்தகி பூரிசவாவை எதிர்த்து நின்று,
வில், வாள், முதலியவற்றால் பொருதல்

'இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான '
                   என, வெய்தின்,
பவனாகதி பெறு தேரினன், நளினாபதி இளவல்,
'அவன் ஆர் உயிர் கவர்வேன்!' என, அம்பு
                   ஒன்று தொடுத்தான்;
தவனால் மறை தெரி பூரிசவாவும், சரம் விட்டான்.

14
உரை
   

ஏண் அற்று உயர் வரை மார்பினர் இருவோர்களும்,
                   ஒருவோர்
காணல் தொழில் அரிது ஆம் முறை, கடிதின்
                   கணை தொடவே,
நாண் அற்றன; வெஞ் சாபமும் நடு அற்றன;
                   எனினும்,
கோண் அற்றன புகல்வான், ஒரு குறை
                   அற்றது, அவர்க்கே.
15
உரை
   

ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என, அமரில்,
பொரு கேடக நடவும் கன பொன்-தேர் மிசை இழியா,
முருகு ஏடு அவிழ் தார் மார்பினர் முனை
                   வாளம் இரண்டோடு,
இரு கேடகம், இரு கையினும், இருவோரும் எடுத்தார்.
16
உரை
   

படிவாய், உடுபதியும் தினபதியும் பொருதெனவே,
தொடி வார் கரதலம் ஒன்றிய துறு தோலிடை மறையா,
வடி வாள் முனை அசையா, விசை வரு சாரிகள் பயிலா,
இடிவாய் முகில் அதிரா, எதிர் எதிர் சீறினர், இப்பால்,
17
உரை
   

தோலாது அடலொடு சீறின, துரகத்தொடு துரகம்;
மேலாளொடு மேலாள்; வரி வில்லாளொடு வில்லாள்;
ஏலா முடி அரசோடு அரசு; இரதத்துடன் இரதம்;
காலாளொடு காலாள்; மத கரிமாவொடு கரிமா.
18
உரை
   


போர்க்களக் காட்சிகள்

நீடும் கட கரியின் கர நிரை அற்றன, நதியாய்
ஓடும் குருதியின் வாளைகள் என, ஓடின, ஒரு சார்;
கோடும் சிலை அம்பின் தலை அரியுண்டன குறை நின்று
ஆடும்தொறும், உடன் ஆடுவ அலகைக் குலம், ஒரு சார்.

19
உரை
   

கோல் கொண்டவை, சிலை கொண்டவை, வாள்
                   கொண்டவை கூர் வாய்
வேல் கொண்டவை, அவைதம்முடன் விழு
                   கைக் குலம், ஒரு சார்;
கால் கொண்டு உகு செந்நீர் விரி களமே ககனமதா,
மால் கொண்ட கரிக் கோடு இள மதி ஆவன, ஒரு சார்.
20
உரை
   

முந்நீர் தரு பவளம் கொடு முன்னம் சமைவனபோல்,
செந்நீரின் மிதந்து ஓடுவ தேர் ஆழிகள் ஒரு சார்;
நல் நீர் மழை பொழி செம் புனல் நதிவாய்
                   வரு நுரைபோல்,
அந் நீரிடை புகும் மூளைகள் அலை பாய்வன,
                   ஒரு சார்.
21
உரை
   

வை ஆர் அயில், கணை, தோமரம், வாள்,
                   கப்பணம், முதலாம்
கை ஆயுதம் முழுகும் துளைவழி செம்புனல் கால,
மெய் ஆயிரம் விதமாய் விழ, வெம் போரிடை
                   இருபத்து-
ஐஆயிரம் முடி மன்னவர் அகல் வானம் அடைந்தார்.
22
உரை
   


சூரியன் குடபால் மறைய, யாவரும் பாசறை சேர்தல்

இவ்வாறு முனைந்து, ஆர் உயிர் இரு
                   சேனையும் மடிய,
மை வான் உலகு இடம் அற்றது, வய
                   வீரர் நெருக்கால்;
அவ் வானவர்தமது ஆலயம் வலம்
                   வந்த அருக்கன்
செவ் வான் உறு குடபால் வரை இடம் என்று,
                   அது சேர்ந்தான்.

23
உரை
   

எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார்,
கைப் போது உறு படை செம்புனல் வழியே
                   உயிர் காய்வார்,
ஒப்பு ஓதுதல் அரியார், இரு திற மன்னரும் ஒருவா,
அப்போது, அனிகத்தோடும், அகன் பாசறை புக்கார்.
24
உரை
   


சூரியன் கீழ்த்திசையில் கிளர்ந்து எழுதல்

இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள்
                   எயிற்று ஓர்
அரவு உண்டு, அதுதான் மீள உமிழ்ந்தென்ன,
                   அருக்கன்
உரவும் குட திசை நீல் நிற உததிக்குள்
                   ஒளித்தோன்,
விரவும் குண திசை வேலையின்மிசை வந்து,
                   கிளர்ந்தான்.

25
உரை