38. பத்தாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு
              வந்த பேர்
நலிவு எலாம் அகற்றும் நாமம்; நால்-இரண்டு
              எழுத்துடன்
பொலியும் நாமம்; மறைகள் சொன்ன பொருள்
              விளக்கும் நாமம்-முன்
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட
              நாமமே.

1
உரை
   


முந்திய நாளிற்போல, தருமன் படை பற்ப
வியூகமும், துரியோதனன் படை சருப்பதோபத்திர
வியூகமுமாக அணிவகுத்து நிற்றல்

வர சங்கமும், தாரையும், சின்னமும், பொன்
              மணிக் காளமும்,
முரசங்களும், துந்துபியும், எங்கும் எழ விம்ம,
              முழ விம்மவே,
கரை சிந்து, திரை சிந்து, நுரை சிந்து, விரை சிந்து,
              கணம் என்னவே,
அரசன் பெருஞ் சேனை வெள்ளம் புறப்பட்டது,
              அணியாகவே.

2
உரை
   

திரண்டு பல் இயங்கள் தேவர் செவி புதைக்க, வானிடைப்
புரண்டு எழுந்த தூளி கண் புதைக்க, மெய் பதைக்கவே,
முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே
அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே,
3
உரை
   


வீடுமன் எனும் தடக் கை வீர மன்னும், வெஞ் சுடர்க்
காடு மன்னு பரிதியைக் கரம் குவித்து இருந்த பின்,
தோடு மன் வலம்புரித் துலங்கு தாம நிருபனும்,
நீடு மன்னர் பலரும், வாயில் இரு புறத்தும் நிற்கவே,

4
உரை
   


வனைந்து இலங்கு கழலும், முத்து வடமும்,
              வாகு வலயமும்,
புனைந்த செம் பொன் மவுலியோடு பொற்பின்மீது
              பொற்பு எழ,
'முனைந்து அடங்க இன்று நாம் முடித்தும், வெய்ய
              போர்!' எனா
நினைந்து, தன் பனைப் பதாகை நீடு தேரில் ஏறினான்.

5
உரை
   

சுற்று அறாத வில்லினன்; தொடை மிடைந்த தூணியன்;
கொற்ற வாகை வாளினன்; கூர வீர வேலினன்;
மற்றும் ஆயுதங்களோடும், மன்னரோடும், வார் முரசு
எற்றும் ஆரவத்தினோடும், அடு களத்தின் எய்தினான்.
6
உரை
   


'வீடுமனுக்கு இன்று வானுலகு அளித்தி'
என்ற கண்ணனுக்கு விசயன், 'எவர்
எதிர்ப்பினும் நான் வெல்வேன்' எனல்

தானும் முன் அணிந்தவாறு தானையை நிறுத்தி, அச்
சேனை மன்னன் வந்து நின்ற நிலைமை கண்டு,
              செங் கண் மால்,
'வானின் நின்று இழிந்த கங்கை மைந்தனுக்கு வான் உலாம்
யானம் இன்று அளித்தி' என்று விசயனோடு இசைக்கவே,

7
உரை
   


போரின் அண்டர் பகையை முன்பு பொருது
              வென்ற வின்மையான்,
மூரி வெங் கொடிக் குரங்கு முன் நடக்கும் மேன்மையான்,
வாரிதம் கொள் மேனியான், வனம் புகுந்து வருதலான்,
யாரும் இன்று இராமன் என்ன இசைய நின்ற விசயனே,

8
உரை
   

'சிலை, பதாகை, இவுளி, தேர், செழுங் கனல் அளித்தன;
வலவன் யார் எனில் குறிப்பொடு என்னை ஆள வந்த நீ;
தல மகீபர் அல்ல; தேவர் தானவர் எதிர்ப்பினும்,
கொலை படாமல் ஏவர் போவர்? குன்று எடுத்த கோவலா!
9
உரை
   


'எந்தை ஆக; துணைவர் ஆக; தனயர் ஆக; எந்தைதன்
தந்தை ஆக; நீ உரைக்கில், யாரையும் தறிப்பன் யான்-
முந்தை ஆரணங்களுக்கும் முடிவில் நின்ற பொருளை என்
சிந்தை ஆர முற்றுவித்து, வினை அறுத்த செம்மலே!'

10
உரை
   


விசயனும் வீடுமனும் விற்போர் புரிதல்

என்ற போது, உவந்து, தேவவிரதன் நின்ற எல்லையில்
குன்றம் அன்ன தேர் கடாவி, அருகு அணைந்த
              கொற்றவர்
ஒன்றுபட்ட சேனையோடு யாவரும் உடன்று போய்,
நின்ற சேனை நிருபன்மேல் நிரைத்து வாளி தூவவே,

11
உரை
   

பலரும் எய்த வாளி மெய் படப் படப் பனித்து, நாப்
புலர நொந்து, கங்கை மைந்தன் இதயமும் புழுங்கினான்,-
மலருகின்ற வார் பனிக்கு உடைந்து, சால மாழ்கி, நீடு
அலரும் அந்த நிறம் அழிந்த அம்புசாதம் என்னவே.
12
உரை
   

துன்னிமித்தமும் பல தொடர்ந்து செய்ய, வெய்ய ஆம்
அந் நிமித்தம் நல் நிமித்தம் ஆகும் என்று அகம் தெளிந்து,
உன்னி, மித்திரர்க்கு நாளும் உதவி செய்யும் உறுதியோன்,
வில் நிமித்த வாளியால், அவ் வாளிகள் விலக்கினான்.
13
உரை
   


வீடுமன் வாளியால் பகைவர்
சேனை பட்ட பாடு

துருபதேயர், மகத நாடர், வெங் குலிங்கர், சோனகர்,
கருநடேசர், சிங்களர், கடார பூபர், கௌசலர்,
தருமராசன் மதலை சேனை முதுகிட, சரங்கள் போய்
ஒருவர் போல அனைவர்மேலும் உருவ, எய்து
              உறுக்கினான்.

14
உரை
   

முடி துணிந்து பின்பு வீழ, முன் நடந்து உடற்றுவார்
அடி துணிந்து விழ, இருந்து அலங்கல் வில் வணக்குவார்,
கொடி துணிந்து, வில் துணிந்து, கோல் தொடுத்த கையுடன்
தொடி துணிந்து, சோரி வெள்ள நதியினூடு சுழலுவார்.
15
உரை
   

மருத்து எறிந்த பூழி என்ன வந்தவா மடங்குவார்;
உருத்து எறிந்த உருமின் நொந்த உரகம் என்ன உட்குவார்;
ஒருத்தர் ஓட, 'என் இது!' என்று, அநேகர் அஞ்சி ஓடுவார்;-
விருத்தன் வில் வளைத்த ஆண்மை விசயனுக்கும்
              இசையுமோ?
16
உரை
   


வீடுமனுக்கு உதவியாக மன்னர் பலரும்
வந்து சரங்கள் விட, அவற்றை
விசயன் விலக்குதல்

வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய
              வீடுமனை, நீடு முனைவாய்,
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம்
              என வந்து, அணுகினார்-
செம்பியனும், மா கிருபனும், செறி துரோணனொடு,
              சேயொடு, செயத்திரதனும்,
தம்பியரும், மாமனும், சயிந்தரொடு, வெய்ய பகதத்தனொடு,
              சல்லியனுமே.

17

உரை
   

மனம் செய் வலி கூர் கச துரங்கம பதாதி இரதத்துடன்
              வளைந்து பலரும்,
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து, எதிர்
              சரங்களும் உகைத்து, அமர் செய்தார்;
கனம் சலதி மொண்டுகொடு எழுந்தனைய வண்ணன்,
              ஒரு கார்முகம் வணக்கி, ஒரு நூறு
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி, அவர் ஏவு சரம்
              யாவும் எதிரே விலகினான்.
18
உரை
   


வீமன் தண்டுகொண்டு பொருதல்

தேர் உதய பானு என நின்ற விசயன்தன் எதிர் தெவ்வர்
              பனி என்ன அகல,
தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற, தனது தண்டு
              தனி கொண்டு குதியா,
ஓர் உதவி இன்றி முடியோடு அவர் சிரங்களும் உடைந்து,
              முதுகிட்டு உடையவே,
மாருத சகாயன் என, மாருதன் என, கடவுள் மாருத
              சுதன் கடுகினான்.

19
உரை
   

ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும், சிலரை; இரு
              பணைகள் பற்றி, இறுகச்
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும், சிலரை;
              ஐந்து கதியும் சிவணவே
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும், சிலரை;-
              வஞ்சினமும் வெஞ் சினமுடன்
கூறி வரும் வாள் அரசர் ஏறி அணி நின்ற ரத குஞ்சர
              துரங்கம் விழவே.
20
உரை
   


வீமனுக்குத் தன் படை வீரர் முதுகிடுதல் கண்டு,
துரியோதனன் வில் வல்லோர் பலரை ஏவுதல்

முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர்
              முதுகிடுதல் கண்டு, முனியா,
ஐந்து உறழும் நூறுபடி ஆயிரவர், வின்மையில்
              அருச்சுனனை ஒத்த அடலோர்,
உந்து உரக கேதனன் உரைப்ப, முகில் ஏழும் உடன்
              ஊழி இறுதிப் பொழிவபோல்,
வந்து, வடி வாளி மழை சிந்தினர், பராக்கிரம வாசி,
              இபம், மா இரதரே.

21
உரை
   


விசயன் அவர் விடும் அம்புகளை விலக்கி,
அவர்தம் கை முதலியவற்றைத் துணித்தல்

வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும்,
              அவ் வில்லொடு எதிர் போய்,
அவ் அவர் தொடுத்து விடும் அம்புகள் எனைப் பலவும் அவ்
              அவை தொடுத்து விலகி,
கை வரி வில் அற்று, நெடு நாணின் நடு அற்று, வளர்
              கைத்தலமும் அற்று விழவே,
வை வரி வடிக் கணைகள் ஏவினன், மணித் திகிரி வலவன்
              விடு தேரில் வருவோன்.

22
உரை
   


'தருமன் முதல் ஐவரையும் வென்றிடுதும்!' என்று,
              துச்சாதனனொடு ஐவர் இளையோர்
பொரு முனையின் வீடுமன் முன் நின்றவர்கள் அல்லது,
              புகன்ற நரபாலர் எவரும்
பரும மத மா புரவி தேர்கொடு பறந்தனர், படாதவர்-
              கெடாத கதையும்,
செரு முனை சராசனமும், உடைய இருவோரும் நனி சீறி,
              அமர் செய்த பொழுதே,

23
உரை
   


வீடுமனும் தன் காலம் நெருங்கியது
என்று எண்ணியவனாய், அம்பு எய்து,
பகைவரை நடுங்கச் செய்தல்

விண்ணவரில் உற்று எழுவர் கண்டு களி கூர, விறல்
              வீடுமன் விருப்பினுடனே,
கண் இணை நெருப்பு எழ உடன்று, 'இனி நமக்கும் இது
              காலம்!' என, மாலை புனையும்
வண்ண வரி வில் தலை வணக்கி,விதமான பல வாளிகள்
              தெரிந்து, தருமற்கு
எண்ணும் இரதத் தலைவர் அனைவரையும் விட்டிலன்,
              இமைப்பொழுதின் எய்தனன் அரோ.

24
உரை
   


எத்தனை முடித் தலைகள், எத்தனை புயக் கிரிகள், எத்தனை
              கரக் கமலம், வேறு
எத்தனை உடற் சுமைகள், எத்தனை உறுப்பின் நிணம்,
              எத்தனை கொடிக் குடர்களோடு
எத்தனை நிணத் தடிகள், எத்தனை நரப்பு வகை, எத்தனை
              எலுப்பு நிரை, மேல்
எத்தனை மணித் தொடைகள், எத்தனை மலர்க் கழல்கள்,-
              இற்றன களத்தினிடையே!

25
உரை
   


விரிந்தன, உரங்களும்; வெகுண்டன, மனங்களும்;
              விழுந்தன, பசுங் குருதிநீர்;
நெரிந்தன, எலும்புகள்; அழிந்தன, கொழுந் தசை;
              நிமிர்ந்தன, நரம்பின் விசியும்;
சரிந்தன, பெருங் குடர்; துணிந்தன, சிரம்; கடை
              தவழ்ந்தன, நெடும் புருவமும்;
எரிந்தன, முகங்களும்; எழுந்தன சிரங்களும்; இறந்தனர்,
              கடுங் கண் இளையோர்.

26
உரை
   


சோமகரில், மச்சரில், தென்னரில், துளுவரில், துருபதேயரில்,
              வளவரில்,
தே மருவு அலங்கல் குலிங்கரில், சேரரில், சிஞ்சியரில்,
              வெஞ் சமர் விடா
மா மகுடவர்த்தனரில், மண்டலிகரில், பட்டவர்த்தனரில்,
              மற்று இவ் உரவோன்
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம்
              மன்னர் என்று மொழிவாம்?

27
உரை
   


தம் படையை வீடுமன் அடுவது கண்டு,
விசயன் சிகண்டியை முன் வைத்து,
வீடுமன் எதிரே பொர வருதல்

வெம் புய விசால வடமேரு ஒர் இரண்டு உடைய
              வீடுமனை, நீடு முனைவாய்,
அம்புதம் எழுந்து பொழிகின்ற வழி ஓடிவரும் அனிலம்
              என வந்து, அணுகினார்-
செம்பியனும், மா கிருபனும், செறி துரோணனொடு,
              சேயொடு, செயத்திரதனும்,
தம்பியரும், மாமனும், சயிந்தரொடு, வெய்ய பகதத்தனொடு,
              சல்லியனுமே.

28
உரை
   


ஓதம் வந்து எழுந்தது என, மேகம் நின்று அதிர்ந்தது என,
              ஊழியும் பெயர்ந்தது எனவே,
மாதிரங்களும் செவிடுபோய், அகண்டமும் பொதுளி,
              வாய் பிளந்தது அண்ட முகடும்-
சீதரன், செழுந் துளப மாதவன், தயங்கு அருண சீத
              பங்கயம் கொள் திருவின்
நாதன், வெஞ் சமம் கருதி, ஊதுகின்ற சங்கின் முழு நாதம்
              வந்து எழுந்த பொழுதே.

29
உரை
   


தூரியம் கறங்க, நரபாலர் சங்கு இனங்கள் அணிதோறும்
              நின்று நின்று குமுற,
தேர்களும் துரங்கமொடு வேழமும், கலந்து வருசேனை
              மண்டலங்களுடனே,
பேர் பெறும் சிகண்டி தலையாக முன்பு கொண்டு, 'உலகு
              பேரும் அன்றும் இன்றுகொல்?` என,
போர் தொடங்கி, வென்றி புனை வீடுமன் தடங் கண்
              எதிர் போயினன், தனஞ்சயனுமே.

30
உரை
   


சிகண்டியைக் கண்டு வீடுமன் போர்
செய்யாதிருக்க, துச்சாதனன் எதிரியின் வில்
துணியுமாறு அம்பு எய்தல்

காதி வெங் கொடும் பகழி ஏவு திண் சிகண்டி தலை
              காணலும், குனிந்து நகையா,
'ஆதி அம்பை இன்று பகை மீள வந்தது!' என்று, தனது
              ஆயுதம் துறந்து, விரை தேர்-
மீது கங்கை மைந்தன் ஒருதான் வெறுங் கை நின்றளவில்,
              மேல் நடந்து சென்று பொரு துச்-
சாதனன் சரங்கள் பல தூவினன், பரிந்து, எதிரி
              சாபமும் துணிந்து விழவே.

31
உரை
   


சிகண்டி எதிர் நிற்கலாற்றாது மீள, வீடுமன்
கண்ணன் மேனியும் சிவக்குமாறு அம்பு விடுதல்

சாக நின்றிலன் துருபதேயன், நெஞ்சம் இன்றி, வரி சாபம்
              இன்றி, வண் கொடி கொள் தேர்
வாகம் இன்றி, வந்த வழி மீள, நின்ற சந்தனு குமாரனும்
              சரங்கள் விடவே,
யூகமும் பிளந்து, சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற
              செங் கண் நெடுமால்,
மேகமும் கருங் கடலும் நீலமும் கலந்த, திரு மேனியும்
              சிவந்தது அறவே.

32
உரை
   


சிகண்டியை விசயன் மீண்டும் கொண்டு
வந்து நிறுத்தி, தானும் அவனுமாக
வீடுமனோடு பொருதல்

போன திண் சிகண்டிதனை மீளவும் கொணர்ந்து, 'பல
              பூசலும் கடந்து இரதம்மேல்
நீ நில்; அஞ்சல்; நின் கணையும் ஏவுக!' என்று, வெஞ்
              சமரில் நேர் நடந்து சென்று, விசயன்,
கூனல் அங்கி தந்த சிலை கோலி, அம்பொடு அம்பு பல
              கூட நெஞ்சு அழன்று உதையினான்,
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன்
              வரை மேனி எங்கணும் புதையவே.

33
உரை
   


தன் மேல் உறுவது விசயன் அம்பு என்பது
அறிந்து வீடுமன் மகிழ்தல்

தோளும், நெஞ்சமும், சிரமும், மார்பமும், தொடங்கி
              நிலைதோறும் வந்து வந்து உருவவே,
சாளரம் கொள் அங்க வழி ஓடுகின்ற இந்து முக சாயகம்
              கை கொண்டு பிடியா,
'நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று;
              முதல் நாமமும் சிகண்டி; இவன் எய்
வாளி ஒன்றும் இங்கு எமை உறா; தனஞ்சயன் செய் பெரு
              வாழ்வு இது!' என்று அறிந்து மகிழா,

34
உரை
   

அருகு நின்ற துரியோதனன் தம்பியரை, 'தமையனிடம்
சென்று, போர் அறிந்து பொருக!' என வீடுமன்
பணித்து, அம்பாகிய அணையில் சாய்தல்

'நாம வெங் கொடுங் கணையின் நாமும் நொந்தனம், சமரம்;
              நாளும் இன்று; முந்த இனி நீர்
போம், அடங்க, நும் தமையன் நீள் பதம் பொருந்தி, உறு
              போர் அறிந்துகொண்டு பொருவீர்!
ஆம் அது அன்றி என் செயினும் ஆவது ஒன்றும் இன்று;
              அருகு சேர் தனி ஆண்மை பொன்றல்!' என்று,
அருகு சேர் கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு
              கூறினன், பனங்கொடியனே.
35
உரை
   


கோடு கொண்ட செம் பவள நாதம் வந்து வந்து செவி கூட,
              முன்பு நின்ற நிலையே
நாடி, நெஞ்சு அழிந்து, திருநாமம் அன்புடன் தனது நா
              குழன்று கொண்டு நவிலா,
ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர
              நின்ற அம்பு ஓர் அணையா,
வீடுமன் கிடந்த கிடை தேவர் கண்டு உவந்தனர்கள்; மேல்
              விழுந்தது, அம் பொன் மலரே.

36
உரை
   


இரு திறத்தாரும் வீடுமனை அடுத்து
நின்று, நொந்து நைதல்

'போரில் எஞ்சினன் குருகுலேசன்!' என்று கண்ட புருகூதன்
              மைந்தனும், புனை துழாய்
வீரனும், துனைந்து வரு தேரினின்று இழிந்து, இரு கண்
              வீழும் அம்பினில் முழுகினார்;
சேர வந்து இரண்டு வகை ஆகி வெங் களம் குறுகு
              சேனையும் திரண்டு அலறவே,
யாரும் நெஞ்சு அழிந்தனர்கள்; யாரும் நொந்து நைந்தனர்கள்;
              யாரும் நின்று இரங்கினர்களே.

37
உரை
   


அம்பின் அணைமேல் உயிர் ஓடாவண்ணம் நிறுத்தி
வீடுமன் ஞானத்தோடே கிடக்க, தருமன் முதலியோரும்
துரியோதனாதியரும் அழுது புலம்புதல்

ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணைமேல் வீழ்வான்
யோகம் கொண்டே உயிரை ஓடாவண்ணம் நிறுவி,
'மாகம் சூழும் பரிதி வடபால் எய்தும் அளவும்
நாகம் காணேன்' என்ன, ஞானத்தோடே வைக,

38
உரை
   


இங்கும் தருமன் முதலா உள்ள மன்னர் எவரும்,
அங்கும் துரியோதனனை ஆதியான அரசர்,
பொங்கும் கடலால் உலகம் பொன்றும் அன்று போலே
சிங்கம் அன்னான் பாதம் சென்னிமேல் கொண்டு அழுதார்.

39
உரை
   


'மறமும், வாகு வலியும், வல் வில் முதல் எப் படையின்
திறமும், தேசும், வாழ்வும், சீரும், கேள்விச் செலவும்,
நிறமும், உண்மை அறிவும், நெறியும், புகழும், திகழ் பேர்
அறமும், பொன்றும் நின்னோடு, ஐயா! அந்தோ, அந்தோ!

40
உரை
   


'தந்தை இன்பம் எய்த, தவமே இன்பமாகச்
சிந்தை தெளியும் ஞானச் செல்வா! செஞ் சேவகனே!
முந்தை மரபுக்கு எல்லாம் முதல்வா! ஞாலம் முழுதும்,
எந்தை! ஆள வைப்பார் இனி யார்? கோவே!' என்றார்.

41
உரை
   


அழுத மைந்தர்க்கு ஆறுதல் கூறி, தன் தலையின்
தாழ்வு தீர்க்குமாறு விசயனுக்கு
வீடுமன் கூற,
அவன் அங்ஙனமே செய்தல்

'சரத்தின் சயனம் பஞ்ச சயனங்களினும் இனிது; என்
சிரத்தின் தாழ்வு தீர்ப்பாய்; திண் தோள் விசயா!' என்ன,
வரத்தின் பயனால் உயிரை நிறுத்தும் மன்னன் மகிழ,
உரத்தின் அம்பால் முடியை உயரும்வண்ணம் உயர்த்தான்.

42
உரை
   


வீடுமன் துரியோதனனது கண்ணீரை
மாற்றி, 'கன்னனைத் தானைத் தலைவனாக்கிப்
போர் புரியுங்கள்!' எனக் கூறுதல்

சொரியும் கண்ணீர் துடைத்து, துரியோதனனை நோக்கி,
'வரியும் சாபக் கன்னன், மன்னர்க்கு உரும்ஏறு அன்னான்,
தெரியும் காலத்தவனைச் சேனைத் தலைவன் ஆக்கி,
புரியும் போரும் நாளைப் புரிமின்' என்று புகன்றான்.

43
உரை
   


தருமன் அமைத்த கோயிலில், வீடுமன் தன் உயிர்
விடும் காலம் நோக்கி, அம்புப் படுக்கையில் இருத்தல்

கோயில் தருமன் செய்ய, கூர் வெஞ் சரமே அணையா,
நோய் இல் அயர்வும் மெய்யில் நுழைய, காலம் நோக்கி,
'வீயின், முத்தி இல்லை' என்ன இருந்தான்-விருந்தா,
சேயின் முனிவர் கேள்வித் தெள் ஆர் அமுதம், நுகர்வான்.

44
உரை
   


சூரியனது மறைவும் செக்கர் வானத்தின் எழுச்சியும்

'இன்று உன் மைந்தன் பட்டான்' என்று தந்தைக்கு
              இசைப்பான்
சென்று, பரிதி மேலைத் திக்கின் எல்லை சேர்ந்தான்;
அன்று அவ் வருணன் அன்பால் அழுத செந்நீர் ஆறாய்
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும், செக்கர் வானம்.

45
உரை
   


இரு திறத்தாரும் பாடி எய்துதலும்,
துரியோதனன் தந்தைக்கு வீடுமன் விழுந்த செய்தி
சொல்லச் சஞ்சயனை அனுப்புதலும்

பாண்டு மன்னன் புதல்வர் படையும் பாடி புக்கது;
ஆண்டு பாடி புக்கது, அரவத் துவசன் படையும்;
'ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரைமின்' என்று,
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான்.

46
உரை
   


முனிவனால் செய்தி தெரிந்த திருதராட்டிரன் நிலை

முனியும் நகரில் சென்று, முகுரானனனுக்கு உரைப்ப,
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகிச் சொரிய,
'இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை!' என்று என்று ஏங்கி,
பனி வெண் மதியம் கண்ட பங்கயம்போல் ஆனான்.

47
உரை
   


மண்மேல் விழுந்தான்; எழுந்தான்; 'மானம் போனது!' என்றான்;
கண்மேல் எற்றி, 'இன்றே கண்ணும் இழந்தேன்!' என்றான்;
'விண்மேல் உள்ளோர் செல்வம் வீறு பெற்றது!' என்றான்;
புண்மேல் அயில் உற்றென்னப் புலந்தான்,
                    முதல்வன் புதல்வன்.

48
உரை
   


துரியோதனன், 'நாளைச் சேனைத் தலைவர் யார்''
என்று ஆராயும்பொழுது,
கன்னன் வீடுமனசொன்னபடி
தானே தலைவன் ஆவதாகக் கூறுதல்

செங் கண் அரவக் கொடியோன், 'சேனாபதியாய் நாளை
இங்கு முனையில் நிற்பார் யார்?' என்று எண்ணும் எல்லை,
அங்கர் பூபன், 'யானே அமரில் தலைவன் ஆகி,
கங்கை மைந்தன் சொன்ன பரிசே காப்பன்' என்றான்.

49
உரை
   


தனக்குத் துணை வேறு இல்லை என்று அவனுக்குக் கூறி,
துரியோதனன் துரோணனைத் தலைவனாக்குதல்

'தானாதிகனே! நீ வெஞ் சமரில் சேனைத் தலைவன்
ஆனால், அரசாய் நிற்பார் யார்?' என்று அவனை விலக்கி,
'மீன் ஆர் கொடியோன்தன்னை வென்ற வேதக் கொடியோய்!
சேனாபதியாக!' என்றான், தீ வாய் நாகக் கொடியோன்.

50
உரை
   


சிலை ஆசிரியன் வேந்தர் வேந்தன் சேனைக்கு எல்லாம்
தலையாய், மன்னர் யாரும் தன்னை வந்து சூழ,
கொலை ஆர் பகழி வெள்ளம் மார்பம்தோறும் கோத்து,
தொலையா வெம் போர் தொலைக்கத் துணிந்தான்;
              எவரும் துயின்றார்.

51
உரை
   


அருக்கன் குணபால் அடைதல்

வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து, மீளத்
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப,
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட,
அருணன் பொன்-தேர் தூண்ட, அருக்கன் குணபால்
              அடைந்தான்.

52
உரை