40. பன்னிரண்டாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

பொய்யாத தவ முனி பின் போயருளி,
                தாடகைதன்
மெய் ஆவம் நிகர் என்ன வெஞ் சரத்தால்
                அழுத்திய பின்,
மை ஆழி முகில் வண்ணன் வாங்கியன,
                பூங் கமலக்
கையாலும் ஒரு சாபம்; காலாலும்
                ஒரு சாபம்.
1
உரை
   


இரவில் துரியோதனன் துரோணனுக்கு உரைத்தவற்றை
ஒற்றரால் அறிந்த தருமன் கண்ணனுக்கும்
விசயனுக்கும் கூறி, போருக்கு எழுதல்

அல், தராபதி கருதி, ஆசானோடு
                உரைத்த எலாம்
ஒற்றரால் அக் கணத்தே உணர்ந்த முரசக்
                கொடியோன்,
மற்று அரா-அணை துறந்த மாயனுக்கும்,
                விசயனுக்கும்,
சொற்று, அராபதம் நெருங்கத் தொடைத்
                தும்பை புனைந்தானே.

2
உரை
   


கண்ணன் தருமனை நடுவில் வைத்து,
மண்டல வியூகம் வகுத்தல்

கருங் களவின் கனி வண்ணன், கனை கழற்
                கால் வேந்தரொடும்
பெருங் களம் சென்று எய்திய பின், பேணார்கள்
                வெருக் கொள்ள,
இருங் களிறு, தேர், பரி, ஆள், இரு மருங்கும்
                புடை சூழ,
வருங் களி கொள் வரூதினியை மண்டலமா
                வகுத்தானே.

3
உரை
   


பின் நிறுத்தி மாருதியை, பேர் அணியில்
                பல வகையாம்
மன் நிறுத்தி, இரு பாலும் மருத்துவர்
                மைந்தரை நிறுத்தி,
மின் நிறுத்து நெடு வாளி விசயனையும்,
                குமரனையும்,
முன் நிறுத்தி, நடு நின்றான் முரசம் நிறுத்திய
                கொடியோன்.

4
உரை
   


துரோணன் மகர வியூகமாகச் சேனையை வகுத்தல்

இப்பால், மற்று இவர் நிற்ப, இரவு உரைத்த
                மொழிப்படியே
தப்பாமல் திகத்த குலத் தலைவனும்,
                சஞ்சத்தகரும்,
துப்பு ஆர் வெஞ் சிலைத் தடக் கைத் துரோணன்
                முதல் அனைவோரும்,
அப்பால் வந்து, அணி மகர வியூகம் வகுத்து
                அணிந்தாரே.

5
உரை
   


திரிகர்த்தராசனும் நாரண கோபாலரும் விசயனை
அறைகூவி, வில் வளைத்துப் பொருதல்

கார் அணிபோல், பொருப்பு அணிபோல், காற்று
                அணிபோல்; களிற்று அணியும்,
தேர் அணியும், பரி அணியும்; திரிகத்த குலபதியும்,
நாரணகோபாலர் எனும் நராதிபரும், வாள் விசயன்
காரணமா அறைகூவி, கடுங் கொடுங் கார்முகம்
                வளைத்தார்.

6
உரை
   


தருமனைக் காக்குமாறு அருகு நின்ற அரசர்களுக்கு
உரைத்து, விசயன் வில் வளைத்து எதிர் பொருதல்

ஆர்த்து வரும் அவர் நிலை கண்டு, 'அரசனை
                நீர் இமைப்பொழுது
காத்திடுமின்' என நின்ற காவலரோடு உரைசெய்து,
கோத் தருமன் பணித்ததன்பின், கோதண்டம்
                உற வாங்கி,
பார்த்தனும், அன்று அவர் எதிர் போய், பல வாளி
                மழை பொழிந்தான்.

7
உரை
   


தூளியே அண்டம் உறத் தூர்த்து முதல்,
                அகல் விசும்பை
வாளியே தூர்க்கும்வகை மலை வாங்கு
                சிலை வாங்கி,
ஆளிஏறு அனையானும் அவனிபரும்,
                கவந்தமுடன்
கூளியே நடம் ஆட, கொடுஞ் சமரம்
                விளைக்குங்கால்,

8
உரை
   


சயத்திரதன் முதலிய முப்பதினாயிரர்
சூழத் துரோணன் வருதல்

தடித் தலை வேல் சயத்திரதன், சவுபலன்,
                குண்டலன், முதலா
முடித் தலை வாள் அடல் நிருபர்
                முப்பதினாயிரர் சூழ,
இடித் தலை மா முரசு இயம்ப, இப துரகப்
                படை சூழ,
கொடித் தலை மான் தடந் தேரான் குனி
                சிலையின் குரு வந்தான்.

9
உரை
   


திட்டத்துய்மன் பாஞ்சாலர் சூழ வந்து
துரோணனை எதிர்த்தல்

வந்த குரு, குருகுல மா மன்னுடன் போர்
                புரிவதன்முன்,
பந்தம் உறப் பாஞ்சாலர் பல் பதினாயிரர் சூழ,
முந்த வயப் பணை முழங்க, முழங்கு ஒலி
                நீர் கொதிப்பதுபோல்,
அந்த முனிக்கு எதிர் நடந்தான், ஐவர்
                சேனாபதியே.

10
உரை
   


இருவர் பெருஞ் சேனையும் உற்று, எதிர் எதிர்
                ஆயுதம் எடுத்து, அங்கு
ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத அமர்
                உடற்ற,
செருவில் அரிஏறு அனையான் திட்டத்துய்மனும்
                வெகுண்டு,
பொரு சிலை வெங் கணை பொழிந்தான்; போர்
                வேந்தர் பலர் மடிந்தார்.

11
உரை
   

துன்முகனைப் புறங்கண்டு, துன்மருடன்
                முனை சாய்த்து,
கல் முகம் ஆம் காந்தாரர், கலிங்கர்,
                கவுசலர், நிடதர்,
புன் முகராய் இளைத்து ஓட, பொருது
                அழித்தான்; பொருது அழிந்த
மன் முக வெம் பெருஞ் சேனை மறையவன்பால்
                அடைந்தனவே.
12
உரை
   


சேனையிலுள்ளோர் அழிந்து மீள்வது கண்டு,
துருபதன் முதலியோர் சிலையை அறுத்து,
தானையையும் துரோணன் அழித்தல்

மறை வாய் வெஞ் சிலை முனிவன் வரூதினி தன்
                நிலை அழிந்து
குறைவாய் வந்தமை கண்டு, கோதண்டம்
                எதிர் வாங்கி,
துறை வாய் வெங் கனல் போலும் துருபதன்
                கைச் சிலை துணிய,
பிறை வாய் வெங் கணை தொடுத்து, பிறைமுடியோன்
                எனச் சென்றான்

13
உரை
   


சத்தியகேதுவின் சாபம் சரம் ஒன்றால்
                இரண்டு ஆக்கி,
சித்திர வெஞ் சிலை ஆண்மைச் சிகண்டியையும்
                சிலை அறுத்திட்டு,
உத்தமபானுவை முதலா உள்ள கொடுந்
                திறல் வேந்தர்
தம் தம் உயிருடன் போகத் தானை
                எலாம் மடிவித்தான்.

14
உரை
   

தாண்டிய வெம் பரி நகுல சாதேவர் வென்னிட்டார்;
பாண்டியனும் முதுகிட்டான்; பாஞ்சாலர் புறமிட்டார்;
ஈண்டிய வெங் களத்து அவிந்தார் எத்தனை
                ஆயிரம் வேந்தர்!-
தூண்டிய வெம் பரி நெடுந் தேர்த் துரோணன்
                கைத் தொடையாலே.
15
உரை
   


துரோணனும் தருமனும் அடுத்து நின்று பொருதல்

வடுத் தரு வெஞ் சிலீமுகமும் வணக்கு கொடுஞ்
                சராசனமும்,
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து, ஒர்
                ஓர் நொடியின்
நடுத் தகைவு இன்றி வானவரும் நடுக்குறுகின்ற
                போர் முனையில்,
அடுத்தனர், வன் தபோதனனும் அடல் தருமன்
                குமாரனுமே.

16
உரை
   


அதிர்த்தன, சங்க சாலம் முதல் அனைத்து விதம்
                கொள் காகளமும்;
உதிர்த்தன, அண்டகோளம் உற ஒலித்து உடுவின்
                குழாம் முழுதும்;
விதிர்த்தன, செங் கை வாளொடு அயில்; விழித்தன,
                கண்கள் தீஉமிழ;
எதிர்த்தன, தங்கள் சேனைகளும், எதிர்ப் படு மைந்தர்
                போர் செயவே.

17
உரை
   


நாற்படைகளும் செருச் செய்த வகை

மதித்து மதங்கள் ஏழினும் மெய் வனப்பு உறு
                கொண்டல் மானுவன;
கதித்து நெடுங் கை வீசி, உடு கணத்தை
                முகந்து வாருவன;
மிதித்து, உரகன் பணா முடிகள் விதிர்த்து,
                வெகுண்டு, உலாவுவன;-
கொதித்து, இரு கண்களாலும் எரி கொளுத்தின
                கும்ப வாரணமே.

18
உரை
   


'வரைக் குலம் என்று கூறிடின், அவ் வரைக்கு
                வயங்கும் நேமி இல;
நிரைக்கும் நெடும் பதாகை இல; நிறத்த
                கொடிஞ்சி ஆதி இல;
உரைப் பட உந்து பாகர் இல; உகைத்த
                துரங்க ராசி இல;
இரைத்து விரைந்து உலாவல் இல' என, செரு
                மண்டு தேர் பலவே!

19
உரை
   

உகத்தின் முடிந்த நாள் அலையோடு ஒலித்து எழு
                சங்க வேலை என,
மிகப் புகை கொண்டு வானுலகும் வெடித்திட மண்டு
                தேயு என,
நகச் சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என,
இகல் செய்து, செம் பராகம்மிசை எழுப்பின-துங்க
                வாசிகளே.
20
உரை
   


விளைத்தனர், தொந்தமாக அமர்; மிகைத்தனர்,
                தம்தம் வீரமுடன்;
உளைத்தனர், சிங்க சாபம் என; உறுக்கினர்,
                சென்று மேல் முடுகி;
வளைத்தனர், கொண்ட வார் சிலைகள்; வடித்த
                சரங்களால் உழுது,
திளைத்தனர், வென்றி கூரும்வகை;-செருக்களம்
                எங்கும் ஆடவரே.

21
உரை
   


உதிட்டிரனும் துரோணனும் பொருத வகை

மிகைத்தனர்; தும்பை மாலை முடி மிலைச்சினர்;
                'இன்று சாலும்!' என
நகைத்தனர்; தங்கள் தேரும் எதிர் நடத்தினர்;
                சண்ட வேகமொடு
பகைத்தனர்; அங்கம் யாவும் மிசை படப் பட,
                நஞ்சு கால் பகழி
உகைத்தனர்;-அன்றை ஆடு அமரில், உதிட்டிரனும்
                துரோணனுமே.

22
உரை
   


துரோணன் தனது தேர் முதலியன
இழந்து, தளர்வுற்று மீளுதல்

சினத்து முனைந்த போரில் வரு சிலைக் குருவின்
                பதாகை அற,
மனத்தினும் முந்து மா துணிய, வயத்துடன் உந்து
                பாகன் விழ,
அனைத்து உருளும் சதாவியிட, அடுக்கு உற
                நின்ற தேர் அழிய,
இனத் தொடை ஐந்து பூபதியும் இமைப்பொழுதின்கண்
                ஏவினனே.

23
உரை
   


தனித்து மலைந்த போரில் எழு தலத்து அரசன்
                கை வாளிகளில்
அனத்தம் விளைந்து, நாணொடு வில் அறத்
                துணியுண்டது; 'ஆகவமுன்,
முனிக்குலம் என்றும், ஆதி மறை முதல் குரு
                என்றும், மேன்மை உற
இனிக் கணை ஒன்றும் ஏவுகிலம்; இளைப்பு அற,
                அஞ்சல், ஏகு' எனவே,

24
உரை
   


அறத்தின் மகன்தன் ஆண்மையினை அழித்து, உயிர்
                எஞ்சிடாவகை தன்
மறத்தொடு கொண்டுபோவல் எனமதித்து, எதிர் வந்த
                சாப முனி,
திறத்தின் இவன் கை ஏவு கணை செயித்தது கண்டு,
                நாணி, மெலிவு
உறத் தளர் சிந்தையோடு, தனதுஉடற் சுமை கொண்டு
                போயினனே.

25
உரை
   


துரோணன் மீண்டும் தேரில் வர, தருமன்
பக்கத்து வீரர்கள் வளைத்துப் பொருதல்

அதருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும்,
கருமம் நன்று பட நினைந்த கலசயோனி, பின்னையும்,-
முரண் மிகுந்து உடற்றவேகொல், முந்த ஓடவே கொலாம்-
விரைவுடன் சினம் கடாவ வேறு ஒர் தேரில் ஏறினான்!

26
உரை
   


தங்கள் மன்னன் அம் முனைத் தனித்து வென்ற வின்மையும்,
துங்க வென்றி இன்றியே துரோணனார் அழிந்ததும்,
அங்கு உளம் கனன்று மீள அணிகொள் தேரின் ஆனதும்,
சிங்கம் என்ன அருகு நின்ற சிறுவர் கண்டு சீறியே,

27
உரை
   


முந்தி முந்தி மச்ச ராசனோடு சேனை முதல்வனும்,
குந்திபோசன் ஆதியான குல மகீபர் யாவரும்,
வந்து சூழ, வேழமீது வய மடங்கல் செல்வபோல்,
அந்த வேத முனியை ஓடி அக் கணத்தில் வளையவே.

28

உரை
   


கன்னன் ஆதி, சகுனி ஆதி, கலிங்கதேசன் ஆதியா,
மன்னன் ஆதியாக அங்கு மறையவன் பெரும் படை;
தென்னன் ஆதி, நகுலன் ஆதி, திட்டத்துய்மனோடு அபி-
மன்னன் ஆதியாக இங்கு உதிட்டிரன் வரூதினி;

29
உரை
   


'நின்ற சேனை மன்னர்தாமும், நின்ற அந் நிலத்திடைச்
சென்ற சேனை மன்னர்தாமும், எங்கணும் செருச் செய்தார்'
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது;-
ஒன்று நூறு சின்னமா உடைந்தது, ஓர் ஒர் உடலமே!

30
உரை
   


வேல் விதத்தும், வாள் விதத்தும், வில் விதத்து விடு நெடுங்
கோல் விதத்தும், முடி துணிந்த கொற்ற மன்னர் சற்று அலார்-
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலைக் கைம் முனி படை,
கால் விதத்து, ரத துரங்க கய விதத்து, வயவரே.

31
உரை
   


குத்துவார், படைக்கலங்கள் கொண்டு; மல் குறிப்பினால்
மொத்துவார்; இரண்டு தேரும் முட்ட விட்டு, மொய்ம்பினால்,
ஒத்துவார்; களிற்றினின்றும் ஒரு களிற்றின் முதுகு உறத்
தத்துவார்; துரங்கமங்கள் தாரையாக ஏறுவார்.

32
உரை
   


கொற்ற வாளின் முடி இழந்த குறை உடம்பு வாளுடன்
கற்ற சாரி ஓடும் அக் கணக்கு அறிந்து புகழுவார்;
அற்ற கால்கள் அற்ற கைகள் ஆயுதங்களாகவே
எற்றுவார், படைக்கலன் இழந்து நின்ற வீரரே.

33
உரை
   


சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன;
கன்ன ஆறு சொரி மதக் களிற்றினங்கள் வீழ்ந்தன;
பின்ன ஆறு பட்டன பிறங்கு தேர்; பதாதிகள்
இன்னவாறு பட்டன எனக் குறித்து இயம்ப ஒணா!

34
உரை
   


'உங்கள் சேனை கெட்டது' என்று உதிட்டிரன் தளத்து உளார்
திங்கள் அன்ன கும்ப யோனி சேனைதன்னை இகழுவார்;
'எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன்
                வின்மையால்!' என,
தங்கள் சேனை அந்தணன் தளர்ந்ததற்கு இரங்குவார்.

35
உரை
   


இருபக்கத்தாரும் தொந்த யுத்தம் செய்தபொழுதில்,
கடோற்கசனும் அபிமனும் வர, பகைவர் சேனை பறந்தோடுதல்

இரு தளத்தும் நின்ற மன்னர் இருவராக இகலியே,
ஒரு தளத்து மன்னர் என்ன ஒத்து நின்று, உடற்றினார்;
பொரு தளத்தின் இங்ஙன் நின்று போர் புரிந்த பொழுதிலே,
வரு தளத்தொடு உதவினான், மருத்து வீமன் மைந்தனே.

36
உரை
   


நிருத கன்னி மகனும், நேமி நீல வண்ணன் மருகனும்,
கருதி நெஞ்சு அழன்று வந்த காவல் மன்னர் யாவரும்,
சுருதி அன்ன தூ மொழித் துரோணன்மேல் நடக்கவே,
பரிதி கண்ட பனி என, பகைத் தளம் பறந்ததே.

37
உரை
   


பறந்து போய் நெடும் பணிப் பதாகையானொடு எய்தினார்-
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும்,
துறந்து போய விதுரன் முன் துணித்த வில் எனத் துணிந்து
இறந்துபோன மன்னர் அன்றி, நின்ற மன்னர் எவருமே.

38
உரை
   


சேனையின் நிலை உணர்ந்த துரியோதனன் அரசர்களுடனும்
சேனைகளுடனும் வந்து அணி வகுத்துப் பொர,
அபிமனால் அச் சேனை உடைதல்

வதிட்டனும் துதிக்கும் வாய்மை வரி சிலைக்
                கைம் முனிவனோடு
உதிட்டிரன் புரிந்த போர் உரைக்கவே உணர்ந்துளான்,
'பதிட்டிதம் பிறந்தது, இன்று, பாண்டவர்க்கு ஞாலம்!' என்று,
அதிட்டம் ஒன்றும் உணர்கலானும், அனில வேகம் ஆயினான்.

39
உரை
   


விட்ட விட்ட ரத துரங்க வேழ வாகனத்தொடும்,
தொட்ட தொட்ட சிலையொடும், துணிந்து, வெங் களத்திடைப்
பட்ட பட்ட நிருபர்தங்கள் பாடு காண எண்ணியோ,
'முட்ட முட்ட ஏகுக' என்று, தன் படைக்கு முந்தினான்!

40
உரை
   


முந்த வந்த மன்னனும், முரண் கொள் வாகை அரசரும்,
வந்த வந்த சேனையும், வகுத்து அணிந்து முனையவே,
அந்த அந்த முனைகள்தோறும் அந்த அந்த வீரர் மெய்
சிந்த வந்து உடற்றினன், சிலைத் தடக் கை அபிமனே.

41
உரை
   


சிந்தி வாளி மழைகள், ஓடு சிலை வளைத்து, முடுகு தேர்
உந்தி, வாரி மேகம் என்ன, அமர் செய்தானும் ஒருவனே;
அந்தி வானம் ஒத்தது, உற்ற குருதிநீரில் அக் களம்;
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது, எண் இல் தானையே.

42
உரை
   


துரோணன் தருமன் முன் நிற்க ஆற்றாது, தப்பிச் செல்லுதல்

ஏறு தேர் அழிந்து, சாபம் இற்று, முற்றும் இன்றியே,
வேறு தேரும் இன்றி நின்று, வில் எடுத்த வேதியன்
கூறு தேர் உதிட்டிரன் குனித்த விற்கு உடைந்து, பல்
நூறு தேர்தனைப் புரக்க, நொய்தினில் கழற்றினான்.

43
உரை
   


பகதத்தன் தனியே வந்து, தருமன் சேனையை எதிர்த்தல்

முனியும், ஏனை யானை தேரில் முடுகி வந்த நிருபரும்,
குனி சிலைக் கை அபிமன் வெங் கணைக்கு
                வென் கொடுக்கவே,
'இனி நமக்கு நல்ல காலம்!' என்று சீறி எய்தினான்,
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே.

44
உரை
   


'அதி தவள மத்த வாரணமும், முதல் அமுத மதனத்தில்
                ஆழிமிசை வரும்
மத களிறு சுத்தமாக; இவனும் அம் மகபதி; எடுத்த
                கார்முகமும் அவன்
எதிர்தர எடுத்த சாபம்; இவனுடன் இகல்செய நினைக்க
                யாவர் உளா'?' என,
விதம் உற வகுத்த யானை அணியுடன் விருது பகதத்த
                ராசன் உதவவே,-

45
உரை
   


இருபது பதிற்று நூறு களிறு உள; இவனினும் மிகுத்த
                வீரர் கடவுவர்;
ஒருபது பதிற்று நூறு மழ களிறு உவமை என மிக்க
                வாகு வலியினன்;
முருகன் என, வெற்றி நேமி முகில் என, முரண்
                அவுணருக்கு வாழ்வு கெட, உயர்
சுரபதிதனக்கு வாழ்வு வரும் வகை சுரர் உலகு அளித்த
                தோழன் இவன்அரோ.-

46
உரை
   


எழில் அணி தடக் கை மேரு கிரி நிகர் இப சிரம்
                அதைக்க மோதி, உரும் என
மொழி உற அதிர்த்து, நீடு புய கிரி முறை முறை
                தடிக்க, வேகமொடு புகை
பொழி சினம் மனத்தின் மூள, அவிர் ஒளி புனை
                நுதல் வெயர்க்க, வாயு கதி என,
விழிவழி நெருப்பு வீழ, விரைவுடன் விறல் மிகு
                களத்தில் ஆன பொழுதிலே,

47
உரை
   


பகதத்தனுடன் பின்னிட்ட சேனையும் துரியோதனன்
முதலியோரும் வந்து கலக்க,
தருமனும் அபிமனும்
எதிர் ஏற்க, சேனைகள் பொருதல்

பொருது புறகிட்ட சேனை, இவன் வரு பொலிவொடு
                புறக்கிடாது திருகின;
அரவினை உயர்த்த கோவும், இளைஞரும், அவனிபரும்,
                ஒத்து மீள முடுகினர்;
முரசு எழுது பொன் பதாகை நிருபனும், முதல் அமர்
                செகுத்த வாகை அபிமனும்,
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள, இரு படையும்
                உற்ற பூசல் விளையவே,

48
உரை
   


வீமனும் பகதத்தனும் கைகலந்து நின்று பொருதல்

'நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு'
                எனா, முன் வரு கரி
விசையுடன் நடத்தி, 'வீமன் எவண்? அவன் விறல் முடி
                துணித்து மீள்வன் இனி!' என,
வசை பல பிதற்றி, வேகமுடன் வரும் வலிய பகதத்தன்
                வாகு கிரிகளை
ஒசிதர வளைத்து, மார்பு சுழிதர ஒரு கைகொடு குத்தி,
                வாயு குமரனே,

49
உரை
   


கதைகொடு, பனைக் கை வீசி எதிர்வரு கட கரியின்
                நெற்றி ஓடை அணியொடு
புதைபட அடித்து, மீள, விசையொடு புரவி இரதத்தின்மீது
                குதி கொள;
இதய மலர் செற்றம் மூள இவன், அவன் எதிர் சிலை
                வளைத்து, வாளி நிரைபட
உதைய, உதைபட்ட வாளி தனது கை உயர் கதை
                புடைத்து வீழ முனையவே,

50
உரை
   


'ஒருவரை ஒருத்தர் வேறல் அரிது அரிது, ஒருபடி செருச்
                செய்தாலும் இனி!' என,
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட, எதிர் எதிர் தொடுத்த
                வாளி நெடு மழை
ஒருவர் உடலத்தின் மூழ்கி முனை உற உருவு தொழில்
                அற்று, நூலின் முறைமையின்
இருவரும் விலக்க, ஓடி விலகின, எதிர் எதிர் கடித்து,
                வானம் மறையவே.

51
உரை
   


மகரிகை மருப்பு நாலும் உள எனில், வலிய குண திக்கில்
                வாரணமும் இனி
நிகர் அல இதற்கு; நாமம் உரைசெயின், நிலை உடைய
                சுப்ரதீகம்; இதன் வலி
பகரில், இபம் எட்டும் நாணும்; எதிர் எறி படைகள்
                உலவுற்ற போரில், எரி வரு
புகர் முக கரக் கபோல மத கரி பொரு தொழில்
                உரைக்கலாகும் அளவதோ?

52
உரை
   


கரிகளை எடுத்து வானின் இடை இடை கர நுதி கொடு
                எற்றும்; நீடு பிறை நிகர்
இரு பணை மருப்பினாலும், அவர் அவர் எதிர் எதிர்
                உடைக்கும், நேமி இரதமும்;
உரனுடைய சித்ர வால்கொடு ஒருபடி ஒலியொடு
                புடைக்கும், வாசி விழ விழ;
அரவு அபயம் இட்டு வீழ நடை பயில் அடிகொடு
                துகைக்கும், வீரர் அணியையே.

53
உரை
   


பகதத்தனாலும் அவனது யானையாலும் நேர்ந்த
தளர்ச்சி கண்டு தருமன் கண்ணனை நினைத்தல்

அமர் செய் பகதத்தனாலும், அவன் விடும் அருவிமத
                வெற்பினாலும், அணி கெழு
தம படை இளைத்ததாக, விரகொடு தருமன் உணர்வுற்று,
                வேறு ஒர் திசையினில்
இமிர் முரசம் எற்று பூசல் புரிதரும் இளையவன் நடத்து
                தேரின் வலவனை,
நிமலனை, அனைத்தும் ஆன ஒருவனை, நினையினன்,
                மனத்தினோடு பரவியே.

54
உரை
   


'தருமனுக்கும் பகதத்தனுக்கும் கடும்போர்
விளைந்துள்ளது; அங்கு விரைந்து செல்ல வேண்டும்'
என விசயனுக்குக் கண்ணன் கூறுதல்

நினைவுற்ற பொழுது, எழுது முரசு உற்ற கொடி நிருபன்
                நியமித்தபடி தரியலார்
முனை மட்க அமர் பொருது, செயம் முற்றி, உவகை பெறு
                முகில் ஒத்த வடிவின் நெடுமால்,
புனை விற் கை அடு பகழி திசை சுற்றும் மறைய நனி
                பொழி கொற்ற விசயனுடனே
வினை முற்றி, 'உயர் தருமனுடன் இற்றை அரிய அமர்
                விளைவுற்றது' என உரைசெய்தான்:

55
உரை
   


'ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது
                உடை எட்டு நிருபர் உயிர் நீ
தெரிவித்த பகழிகொடு மடிவித்து, வலிமையொடு சிலை
                வெற்றி உற அமர் செய்தாய்;
முரண் அற்றது இவண்; இனி உன் உயிர் ஒத்த தமையனொடு
                முனை புக்கு விரைவின் அணுகா,
வரை ஒத்த களிறு உடைய பகதத்தன் உயிர் கவர வருகிற்றி
                நொடியில்' எனவே,

56
உரை
   


கண்ணன் விசயனோடு பகதத்தனை அணுக, அவன்
வீமனுடன் செய்த போரை விட்டு, விசயனை எதிர்த்தல்

அரி ஒத்த பரி கடவி, மனம் ஒத்த இரதமிசை அமரர்க்கு
                முதல்வன் மகனோடு,
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ்
                வைத்து, அவ் ஒரு நொடியிலே
கிரி முற்றும் அரிவது ஒரு கிளர் வச்ரம் என, உதய கிரி
                உற்ற பரிதி எனவே,
கரி சுற்றும் வர விகட கரடக் கைம் மலையில் வரு கணை
                விக்ரமனை அணுகினான்.

57
உரை
   


அனிலத்தின் மதலையொடு வயிரத்து மலையும் முனை அமர்
                விட்டு, முகிழ் நகை செயா,
'இனி இற்றை அமரில், அரிது, எளிது ஒட்டி எதிர் பொருதல்'
                என, மத்த கரியின் மிசையான்,
மனம் முற்றும் அழல் கதுவ, மொழி முற்றும் இடி நிகர, வலி
                பட்ட சிலையை வளையா,
மினல் ஒத்த கணை பலவும் வசை அற்ற புகழுடைய
                விசயற்குமிசை உதவினான்.

58
உரை
   


அவன் விட்ட சுடுகணைகள் கொடி மற்கடமும் நடுவண்
                அற வெட்டி, அதி தவள மா
கவனத்தின் முடுகி அடு பரி கொத்தி, உடலில் இடு
                கவசத்தை மறைய நுழையூ,
சிவனுக்கும் மலரில் உறை பிரமற்கும் உணர்வு அரிய
                திகிரிக் கை வலவனையுமே
சவனத்தில் மிகு துயரம் உறுவிக்க, அவசம் மிகு தளர்வு
                உற்ற தனு விசயனே,

59
உரை
   


உரம் மிக்க தனது சிலை குனிவித்து, மதியின் வகிர்
                உவமிக்கும் அடு பகழியால்,
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு
                வெற்றி அவனிபதி நீள்
கரம் உற்ற சிலை, கவசம், அற வெட்டி, விடு கணைகள்
                கணை விட்டு விலக, அவன் மா
சரம் விட்டு, ஒர் அயில் விசயன் இரதத்தின் வலவன்மிசை
                தமரத்தினுடன் எறியவே,

60
உரை
   


கஎறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை
                எதிர் முட்ட விடு பகழியால்
தறிவித்து, மகபதிதன் மகன், முக்கண் இறைவனொடு சரி
                ஒத்து முறுவல் புரியா,
வெறி மத்த கரட முகபட சித்ர புகர் கொள் முக விகடக்
                கைம்மலை அணி எலாம்
முறியத் தன் வரி வில் உமிழ் முனை பட்ட பகழி மழை
                முகில் வர்க்கம் என முடுகினான்.

61
உரை
   


விசயன் எய்த அம்பு மழையால் பகதத்தனது
யானைகளின் அணி குலைதல்

அணி கெட்டு, மத கரிகள் கரம் அற்று விழ, முதிய சிரம்
                அற்று விழ, அருகு தாழ்
மணி அற்று விழ, நெடிய குடல் அற்று விழ, முழை கொள்
                வயிறு அற்று விழ, உடல் எலாம்
துணிபட்டு விழ, விசிறு செவி அற்று விழ, வலிய தொடை
                அற்று விழ, மகரிகைப்
பணி பெற்ற பணைகளொடு பதம் அற்று விழ, உழுது
                படுவித்த பல பகழியே.

62
உரை
   


பகதத்தன் விசயன்மேல் எறிந்த வேலைக் கண்ணன் தனது
உடம்பில் ஏற்க, அது மாலையாக அமைந்து விடுதல்

பெயர் பெற்ற கரி வயவர் பிணம் மிக்க அமரினிடை
                பிறகிட்டு முறியும் அளவே,
சய சக்ரதரனை இவன் வழிபட்ட பொழுது தரு தழல்
                உக்ரம் உடையது ஒரு வேல்
வயம் உற்ற சிலை விசயன் உடலத்தின் எறிவது தன்
                வடிவத்தில் உற உதவினான்,
அயர்வு உற்ற உணர்வின் நலம் என-முத்தி முதல்வன்
                என அருகு உற்ற ரத வலவனே.

63
உரை
   


பருமித்த களிறு விடு பகதத்தன் எறியும் முது பகை செற்று
                வரு கொடிய வேல்
மருமத்தினிடை முழுகு பொழுதத்தில், அது புதிய மணி
                வர்க்கம் மிகு தொடையலாய்
நிருமித்தபடி தனது புய வெற்பின்மிசை ஒளிர, நிகர் அற்ற
                கருணை வடிவைக்
கருமத்தின் முதலை இமையவர் சித்தமொடு தொழுது கரை
                அற்ற புகழ் உரைசெய்தார்.

64
உரை
   


பகதத்தன் உயிர் போக்கத் தக்க தருணம் என்று கூறிக்
கண்ணன் அம்பு கொடுக்க, விசயன் தொழுது
வாங்கி, அவன்மேல் செலுத்துதல்

இது நிற்க, யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர, இது
            பக்வம்' என, விசயனோடு
உதரத்தின் முழுது உலகு குடி வைத்த புயல் உரைசெய்து,
            உறுதிக்கண் விடு பகழிதான்
இதயத்தினுடன் அருள, உயர் வச்ரன் மதலை தொழுது,
            இரு பொற் கைம் மலர்கொடு கொளா,
அதிரத் தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில், அவன்
            அகலத்தின் உருவ விடவே,

65
உரை
   


பரி தத்த வரும் இரதமிசை தத்த, எதிர் முடுகு பகதத்தன்
                உடல் முழுதும் நீடு
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை
                தத்த, வலி கெழுவு தோள்-
கிரி தத்த, மகுடமொடு தலை தத்த, ஒரு ரசத கிரி தத்தி
                விழுவது எனவே
கரி தத்த, மறி அலகை கடை தத்தி உவகையொடு களம்
                முற்றும் நடம் நவிலவே,

66
உரை
   


பகதத்தன் பட்டு வீழ, மன்னர்கள் விசயனையும்
கண்ணனையும் புகழ்தல்

பகதத்தனும் பட்டு, அவன் ஊர்ந்த பகடும் பட்டு,
                புடை சூழச்
சிகரக் கிரிபோல் அணி நின்ற சேனைக் களிறும்
                பட்டமை கண்டு,
இகலின் பொழி கார் வெஞ் சிலைக் கை இமையோர்-
                தலைவன் குமரனையும்,
புகழ்தற்கு அரிய பாகனையும், புகழார் இல்லைப் பூபாலர்.

67
உரை
   


காந்தாரர் விசயனைச் சூழ்ந்து பொருதபோது,
சகுனி புதல்வர் இருவர் இறத்தல்

விருதும், சங்கும், பல்லியமும், மேன்மேல் அதிர,
                'வில் போரில்
பொருது இன்று இவனைக் கொன்று அன்றிப் போகோம்'
                என்னப் புடை சூழ்ந்தார்-
மருதும் சகடும் விழ உதைத்த வலவன் கடவ, வாயு எனக்
கருதும் புரவித் தேர் ஊரும் கழற் காவலன்மேல் காந்தாரர்.

68
உரை
   


காந்தும் தறுகண் காந்தாரர் கடு வெங் கனல்போல் கண்
                சிவந்து, அங்கு
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து, எழிலிக் கணம்போல்
                எதிர் ஊன்றி,
சாந்தும் புழுகும் கமழ் வாகுச் சகுனி தனயர் தலைப்போரில்
சேர்ந்து அன்று இறந்தார், விடசெயனும் செயனும் எனும்
                போர்ச் செய வீரர்.

69
உரை
   


சஞ்சத்தகர் விண் குடியேறத் தானே அடர்த்தான்;
                பகதத்தன்
விஞ்சைக் கடவுள் சிகரம் நிகர் வேழத்துடனே
                விழப் பொருதான்;
வஞ்சச் சகுனி மைந்தரையும் மலைந்தான்; விசயன்
                வடிக் கணையால்
எஞ்சப் பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது, அன்று
                அங்கு எண்ணுதற்கே!

70
உரை
   


சகுனி அரசர் பலருடன் கூடித் தருமனோடு
போர் செய்து, பின்னிடுதல்

இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன்
                கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசு ஒழிய, படாத அரசர் பலரோடும்,
சிங்கத் தனி ஏறு எனச் செம் பொன் தேர்மேல்
                நின்ற தருமனுடன்
புங்கப் படையால் அமர் புரியப் புகுந்தான், மதுகைப்
                புலி போல்வான்.

71
உரை
   

'சோரத்துடன் நீ பொருது அடர்த்த சூது அன்று; இவை
                மெய் துளைத்து உருவும்
வீரப் பகழி; உனை இவற்றால் வெல்வேன்!' எனப்
                போர் வில் வாங்கி,
ஈரக் கருணை முகத்து அண்ணல் எய்தான்; அவற்றுக்கு
                எட்டாமல்
பேரப் பேரத் தேர் கடவி, பின்னிட்டவர்க்கு முன் இட்டான்.

72
உரை
   

உடனே வந்து பொரு நிருபர் ஒருவர்க்கு ஒருவர்
                உதிட்டிரன் கை
விடம் நேர் கணையால் ஏவுண்டு விளிந்தார்; ஒழிந்தார்,
                'வெஞ் சமத்தில்
கடன் ஏது எமக்கு!' என்று ஊர் புகுந்தார்; காலைச்
                செந்தாமரை மலர்ந்த
தடம் நேர் என்ன நிறம் பெற்றது, அப்போது
                அந்தச் சம பூமி.

73
உரை
   


துரோணன், துரியோதனன், முதலியோர்
வீமனுடன் பொருதல்

ஆசாரியனும், திருமகனும், அடல் வேல் அங்கர்
                பெருமானும்,
தூசு ஆர் உரகக் கொடி நெடுந் தேர்த் துரியோதனனும்,
                தம்பியரும்,
வீசாநின்ற மாருதம்போல் மேல் வந்து அடுத்த வீமனுடன்
கூசாது எதிர்ந்து, வெம் பகழி கோத்தார், விசும்பைத் தூர்த்தாரே.

74
உரை
   


வீமன் தனது போர் வன்மையால்
பகைவரைக் கலக்குதல்

கெடுமோ கருடன் உரகர்க்கு? கிரி வெஞ்
                சரபம்தனை அரிகள்
அடுமோ? சக்ரபாணியுடன் அமர் உந்துவரோ
                அசுரேசர்?
நெடு மேருவின் முக் குவடு ஒடித்தான் நேயப்
                புதல்வன் பேர் உடலில்
படுமோ, தொடுத்த பகழி? பருப்பதம் சேர்
                மழைபோல் பாறினவே!

75
உரை
   


பொல்லா அவுணர் வைகிய முப்புரம் நீறு எழ,
                அன்று அரன் வளைத்த
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து,
                விறல் வீமன்,
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும்
                இமைப்பின்
வல்லான் எறிந்த பம்பரம்போல் சுழலும்படி, கால்
                வளைத்தானே.

76
உரை
   

ஒன்று முதலாப் பல பகழி ஓர் ஓர் தொடையில்
                தொடுத்து ஏவி,
அன்று முதன்மை உற மலைந்த அரசர்
                உடலம்தொறும் மூட்டி,
'இன்று முதல் ஆயோதனத்தில் ஏறோம்'
                என்னும் படியாகக்
கொன்று, முதல், பின் வரும் உரகக் கொடியோன்
                மனமும் கொதிப்பித்தான்..

77
உரை
   


'கொதித்தான் அரசன்' என வரி வில் குனித்தார், இளைஞர்;
                குனித்தது கண்டு,
அதிர்த்தான், வீமன் தன் கணையால் அறுத்தான், வில்லும்
                அணி நாணும்;
'விதித்தான் வரினும் வீமனுடன் விற் போர் புரிதல்
                அரிது!' என்று
மதித்தார், தம்முன் நினைத்த எல்லாம் முடிக்கும் சமர
                வரி வில்லார்.

78
உரை
   


நின்றார் நின்றபடி, கொடித் தேர் நிருபன்தனையும்,
                இளைஞரையும்,
வன் தாள் வரி வில் குருவினையும், மைந்தன்தனையும்,
                கன்னனையும்,
பொன் தாழ் மார்பின் பல் படைக் கைப் பூபாலரையும்,
                கொல்லாமல்
கொன்றான்-வாயுகுமரன் தன் கோலாகல வெங் கொடுங்
                கணையால்.

79
உரை
   


வீமன் முன் நிற்கலாற்றாது, எதிர்ந்தோர்
தம்தம் பாசறை புகுதல்

'இளைத்தது அடையப் பெருஞ் சேனை; இனி நாம்
                ஒன்றுக்கு ஈடு ஆகோம்;
வளைத்த சிலையோடு இவன் நிற்க, மாயன்தன்னோடு
                அவன் நிற்க,
துளைத்த கணையால் துரோணன் வலி தொலைத்தோன்
                நிற்க, மலைந்து இவரைத்
திளைத்தல் அரிது!' என்று, அக் களத்தில் பொன்றா
                அரசர் சென்றாரே.

80
உரை
   

பெரும் பேர் அறத்தின் திருமகவைப் பிடிப்பான்
                எண்ணி, முடிப்பான்போல்
பொரும் போர் அரசருடன் வந்த பொன்-தேர்
                முனியும் புறம் போனான்;
'பரும் பேர் உரகக் கொடி வேந்தன் பட்டான்
                மிகவும் பரிபவம்!' என்று
அரும் போர் அரசர் களித்து ஆட, அவரும்
                தம் பாசறை அடைந்தார்.

81
உரை
   

பாண்டவரும் பாசறை புக, தினகரன்
மேல்பால் அடைதல்

காரின் குளிர்ந்து குழைந்த செழுங் கானம் பூத்தது
                எனக் கவினிப்
பாரில் பிறந்து சிறந்த இந்தப் பல் மா நிறத்த
                பரி அனைத்தும்
போரில் புகுந்து மடிந்ததற்குப் புறந்தந்து அஞ்சிப்
                போவான்போல்,
தேரில் துரகம் கொண்டு ஓடி, குடபால் அடைந்தான்,
                தினகரனும்.

82
உரை
   

துரியோதனன் பக்கத்தில் பலரும் கூடியிருக்க,
கன்னன் துரோணனை இகழ்ந்து சிரித்தல்

அறம் தந்த மைந்தற்கும், வீமற்கும், விசயற்கும்,
                அபிமற்குமே,
புறந்தந்த வய வீரர் எல்லாரும் அரசன் புறஞ்
                சார்பு இருந்து,
இறந்து அந்த யூகத்து வாராத மன்னர்க்கு
                இரங்கா, அழா,
மறம் தந்த வேழத்துடன் பட்ட பகதத்தன்
                வலி கூறினார்.

83
உரை
   


மன்னர்க்கு மன்னன்தன் முன் வைகும் முனிதன்னை
                மதியாமல்,
'நீ நென்னல் கலங்காமல் உரைசெய்த உரை இன்று
                நிலையானதே!'-
கன்னப் பெயர்க் காளை,-'மறை அந்தணர்க்கு என்ன
                கட்டாண்மை உண்டு?'
என்னச் சிரித்தான், வணங்காதவர்க்கு என்றும் இடிஏறு
                அனான்.

84
உரை
   


துரோணன் சினந்து மொழிதல்

தெருமந்த சிந்தைச் சிலைக் கைக் குரு, கண்
                சிவப்பு ஏறவே,
உருமும் திகைக்கக் கொதித்து, அங்கர்பதியோடு
                உறக் கூறுவான்:
'கருமம் தவா வில் விறல் கன்னனே அல்ல;
                கழல் மன்னரில்
தருமன்தன் முன் நிற்க வல்லார்கள் யார், இத்
                தளம்தன்னிலே?

85
உரை
   


'இன்று அல்ல நாளைக்கும் ஆம்; நின் அவைக்கண்
                இருந்தோர்களில்
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனைத் தங்கள்
                சிலை ஆண்மையால்
வென்று அல்லது அணுகாத வீரர்க்கு விடை நல்கு,
                விறல் மன்ன! நீ;
நன்று அல்ல, வீரத்தில் ஓரம் சொலுவது!' என்று
                நனி சீறினான்.

86
உரை
   

'ஐவரை ஒப்பார் வேறு இலர்!' என்று கூறித்
துரோணன் தன் பாடிவீடு செல்ல, துரியோதனன்
மன்னர்க்கு விடைகொடுத்துத் துயிலுதல்

' 'வில் ஆண்மை யாவர்க்கும் இன்று' என்று
                எனைப் போல மிகு வஞ்சினம்
சொல்லாமல், அறன் மைந்தனைப் போர் மலைந்து
                உங்கள் தோள் ஆண்மையால்
வல்லார் இனிக் கொண்டு வம்மின்கள்; வந்தால்,
                இம் மண் ஒன்றுமோ,
அல்லாத உலகிற்கும், இரு-நாலு திக்கிற்கும்,
                அவர் வீரரே.

87
உரை
   


' 'எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர்?'
                எனும் வீரரும்,
வெம் போரில் வந்தால் ஒர் அணுவுக்கும் நில்லாது
                விளிகிற்பரால்;
வம்பு ஓதி என் பேறு? வல் ஆண்மை புனை அந்த
                வில்லாளி கூர்
அம்போடு இராமன் கை அடல் அம்பும் உவமிக்கில்
                அதி பாவமே.

88
உரை
   


'கொத்து ஒத்த, தொடை ஒத்த, அளவு ஒத்த, சிறகு
                ஒத்த, குதை ஒத்த, வந்து,
ஒத்து ஒத்து முனையோடு முனை தத்தி விழுமாறு
                உடன்று ஏவினான்;
தத்து ஒத்த புரவித் தடந் தேர் மன் என்னோடு
                சாதித்ததும்,
வித்து ஒத்தது, என் வாளி; அவன் விட்ட வடி வாளி
                விளைவு ஒத்ததே.

89
உரை
   


' 'வன்மைக்கு வய வீமன், வின்மைக்கு முகில் ஊர்தி
                மகன், அன்றி வேறு
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி' என்பர்
                எம் மன்னரும்;
வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை
                மிக எண்ணலாம்;
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார், தனித்து
                எண்ணவே?

90
உரை
   

'அதிர்வார்கள் அதிர்மின்கள்; அதிரப் பொரும் போரில்
                அறன் மைந்தனோடு
எதிர்வார்கள் உண்டாகில், இக் கங்குல் சென்றால் இனிக்
                காணலாம்; முதிர்
வாய்மையால் என்ன பயன்?' என்று வெஞ் சாப
                முனி ஏகினான்;
கதிர் வார் முடிக் கோவும் அரசர்க்கு விடைதந்து
                கண் துஞ்சினான்.
91
உரை
   


பாண்டவர்கள் துயிலுதல்

மகதத்தரில் சூர சஞ்சத்தகரில் உள்ள மகிபாலரும்,
பகதத்தனும், துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும்,
தகதத்த என வெங் களத்தூடு விழ வென்ற தனுவேதியும்,
சுக தத்தம் உற ஓட வென்றோர்களும், கண்துயின்றார்களே.

92
உரை
   


கதிரவன் உதயஞ்செய்தல்

நிலையான வய வீரரும் தேவராய் நின்ற நிலை கண்டு, வெண்
கலையால் நிரம்பும் செழுந் திங்கள் ஏக, கடைக் கங்குல்வாய்
அலை ஆழி முழு நீல உறைநின்றும் மாணிக்க மணி ஆடிபோல்
உலையாத ஒளி கொண்ட கதிர் ஆயிரத்தோனும் உதயஞ்செய்தான்.

93
உரை