53.கலைவருத்தமறக்கற்றகன்னனென்னுங் கழற்காளையரனிருந்த
                                    கயிலையென்னும்,
மலைவருத்தமறவெடுத்தநிருதனென்னமன்னவை
                           யின்வலியுடனேவந்துதோன்றி,
நிலைவருத்தமறநின்றுபரியகோலநீள்வரிநாண்மயிர்க்கிடைக்கீழ்
                                     நின்றதென்னச்,
சிலைவருத்தமறவளைத்துவளைந்தவண்ணச்சிலைக்காறன்
                        முடித்தலையைச்சிந்தவீழ்ந்தான்.

     (இ-ள்.) கலை - நூல்களை, வருத்தம், அற கற்ற-வருத்தமில்லாமல் கற்றறிந்த,
கன்னன் என்னும் - கர்ணனென்கிற, கழல் காளை - வீரக்கழலையுடைய இளவீரன்,-
அரன் இருந்த-சிவபிரான் வீற்றிருக்கிற, கயிலை என்னும் மலை - கைலாசமென்னும்
மலையை, வருத்தம், அற எடுத்த -வருத்தமில்லாமல் (எளிதில்) பெயர்த்தெடுத்த,
நிருதன் என்ன- அரக்கனாகிய இராவணன் போல, மன் அவையின் வலியுடன்ஏ
வந்து தோன்றி - இராசசபையினின்று  வலிமையோடு எழுந்து முன்வந்து, நிலை
வருத்தம் அற நின்று - (வில்வீரர்க்குஉரிய) நிலையிலே வருத்தமில்லாமல்
நிலைநின்று, பரிய கோலம் நீள் வரி நாண்-பருத்த அழகையுடைய
நீண்டமுறுக்குள்ளநாணி, மயிர்க்கிடை கீழ் நின்றதுஎன்ன-ஒருமயிரினளவுதூரத்தின்
கீழ்நின்றதென்றுசொல்ல, (அதுவரையிலும்), சிலை வருத்தம் அற வளைத்து -
வில்லைவருத்த மில்லாமல் (எளிதில்) வளைத்து  நின்று, (அவ்வளவிலே), வளைந்த
வண்ணம்சிலை கால் தன் முடி தலையை சிந்த-வளைத்த அழகிய அவ்வில்லின்
கால்(நிமிர்ந்து) தனது கிரீடமணிந்த தலையைத் தாக்க, வீழ்ந்தான்-; (எ- று.)

     கர்ணன் அவ்வில்லை எளிதில் எடுத்துவளைத்து நாணேற்றி விரைவாக
அம்பைத்தொடுத்து எய்யச் சித்தனானவளவில் திரௌபதி உரத்தகுரலோடு 'நான்
பாகன்மகனை விவாகஞ்செய்துகொள்ளேன்' என்று மறுத்துக் கூறவே, அவன்
உடனேவருத்தத்தோடு வில்லை எறிந்துவிட்டு மீண்டன னென  முதனூல்கூறும்.
"சாபம்மஹாந்தம் தபநஸ்யஸூநௌ - அதிஜ்யமாதந்வதி ரோமமாத்ரே ஸ தம்
விசிக்ஷேப" என்றது, பாலபாரதம். நிருதன் - நிருருதியென்னுந் திக்பாலகியினது
மரபினன். மகாபலசாலியான கர்ணனுக்கு ராக்ஷசராசனான இராவணனும், இவன்
எளிதாக எடுத்தபருத்த பாரமான வில்லுக்கு  அவன் எளிதில் எடுத்து பெரிய
கைலாசகிரியும்உவமை. இராவணன் தனது பலத்தால் அலட்சியமாகக்
கைலாசத்தைப்பெயர்த்துஎடுத்தபொழுது உடனேபங்கப்பட்டமை போல, இவனும்
அலட்சியமாகவில்லையெடுத்து வளைத்தபொழுது உடனே பங்கப்படுதலால்,
உவமை ஏற்கும். நிலை- அம்புஎய்வார் நிற்றற்குஉரிய நிலை: அது-பைசாசம்,
மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு. இவற்றுள், ஒருகால்நின்று
ஒருகால்முடக்கல்-பைசாசநிலை: இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் -
மண்டலநிலை; வலக்கால் மண்டலித்து இடக்கால்  முந்துறல் - ஆலீடநிலை;
வலக்கால்முந்துற்று இடக்கால்மண்டலித்தல்-பிரதியாலீடநிலை             (528)