பெட்டியிலிருக்கும் மதலைக்குக் கூட்டிலிருக்கும் சிங்கக்குட்டி யுவமை: "க்ரமேணமஞ்ஜூஷிகயா த்ருதம்தயா - சிசும் ஹரே. பஞ்ச ரவர்த்திநம்யதா தரங்கடோலாந்தரலாலிதம் சநை:- நிநாய தம்ஸூ தபுராந்திகம் நதீ" என்ற பாலபாரதம் காண்க. சஞ்சரத்திரை என்றும் பாடம்.அன்றே - அசையுமாம். (195) 41.-கரைமருங்கையடைந்த சாரதியும் அவன்மனைவியும் நதிப்பெருக்கில் வந்தபெட்டியிற் குமரனைக்கண்டு பெருமகிழ்ச்சியடைதல். கோடகப்படவரும்புனல்விழைவினாற் குளிர்துறைமருங்குற்றோர் பேடகத்திடையொழுகியதினபதி பெருங்குமரனைக்கண்டு சூடகக்கையம்புயமலரிராதையுஞ் சூதபுங்கவன்றானும் ஆடகக்குலமடைந்ததொத்தரும்பெற லாதரத்தொடுகொண்டார். |
(இ - ள்.) கோடு அகம்பட - இரு கரையும் தன்னுட்பொருந்த, வரும் - வந்த, புனல் - நீர்ப்பெருக்கைக்காண்பதில், விழைவினால் - விருப்பினால், குளிர்துறை மருங்கு - குளிர்ந்தநீர்த்துறையினருகே, உற்றோர் - அடைந்தவராகிய, சூடகம் கை அம்புயம் மலர் இராதை உம் சூதபுங்கவன் தான்உம் - சூடகமணிந்த கையாகிய தாமரை மலரையுடைய இராதையென்பவளும் பாகர்தலைவனாகிய அதிரத னென்பானும், ஒழுகிய - (நதிப்பெருக்கிலே) அடித்துக்கொண்டு வரப்பெற்ற, பேடகத்திடை - பெட்டியிலே, தினபதி பெருங் குமரனை கண்டு - சூரியனுடைய சிறந்தகுமாரனைப் பார்த்து, ஆடகம் குலம் அடைந்தது ஒத்து - (வறியோர்) பொற்குவியலைப்பெற்றாற் போன்று, அரும்பெறல் ஆதரத்தொடு.பெறுதற்கு அரிய பிரீதியோடு, கொண்டார் - (அந்தப்புதல்வனையெடுத்து வளர்க்குமாறு) கொண்டார்கள்; இராதை - அதிரதன்மனைவி. பெட்டியில் குழந்தையுடனே ரத்னங்களையும் வைத்து நதிப்பெருக்கிற் குந்திதேவி விட, அதிரதன் அந்தப் பெட்டியை எடுத்தபோது இரத்தினங்களுடனே பெற்றானாதலால், அந்தப்புதல்வனுக்கு வஸு ஷேணன் [சம்பத்தின்தொகுதியையுடையவன்] என்று பெயரிட்டான். குண்டலக்காதனாய்த் தோன்றியதனால், கர்ணனென்று பெயர். இப்பெயர் சூரியன் அசரீரிவாணியாய் வழங்கியதென்பர், மேல் கிருட்டிணன் தூது சருக்கம் செய்யுள் 154-இல். (196) 42.-அதிரதன்மனையில் வளர்ந்த கர்ணன் பரசுராமனிடம் வில்முதலியன கற்று விளங்குதல். அதிர தன்றிரு மனையினில் விழைவுட னரும்பிய பனிக்கற்றை மதியெ னும்படி வளர்ந்துதிண் டிறல்புனை மழுவுடை வரராமன் பதயு கந்தொழூஉ வரிசிலை முதலிய பலபடை களுங்கற்றுக் கதிர வன்றரு கன்னனென் றுலகெலாங் கைதொழுங் கவின்பெற்றான். |
(இ-ள்.) அதிரதன் திரு மனையினில் - அதிரதனுடைய சிறந்த வீட்டிலே, விழைவுடன் - விருப்போடு, அரும்பிய பனி கற்றை மதி எனும்படி - தோன்றிய குளிர்ச்சியின் தொகுதியையுடைய பிறைச் சந்திரனென்னுமாறு, வளர்ந்து-, திண் திறல் புனை - மிக்கவலிமை |