55.- இரண்டுகவிகள் - பாண்டுவின் தவநிலைமை கூறும். ஆரக்குழம்பிலளைந்தார மணிந்துவிம்மும் பாரக்குசங்கள்பலதைவரும் பான்மைநீங்கி நாரக்கமலகரசோதி நகங்கண்மீள ஈரக்குசங்கள்கிழிக்குந்தொழிற் கேற்றவாலோ. |
(இ-ள்.) ஆரம் குழம்பில் - சந்தனக்குழம்பிலே, அளைந்து - துழாவி, ஆரம் அணிந்து - முக்தாஹாரத்தை யணிந்து, விம்முன்- பருக்குந் தன்மையுள்ள, பாரம் குசங்கள் பல - பலவான பாரமாகிய கொங்கைகளை, தைவரும்-திளைக்கிற, பான்மை-தன்மையை,நீக்கி-,நாரம் கமலம் கரம் சோதி நகங்கள் - நீரிலுள்ள தாமரைபோற் பொலிகின்ற கையிலேயுள்ள சோதியுள்ள நகங்கள், மீள - மீண்டும், ஈரம் குசங்கள் கிழிக்கும் - ஈரமுள்ள தருப்பைப்புற்களைப் பறிக்கின்ற, தொழிற்கு-, ஏற்ற - ஏற்பனவாயின; (எ-று.)- ஆல் - வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்: நிலைமாறியது குறித்து வியந்தபடி. இதுவும், கீழ்ச்செய்யுளிலுள்ள அணியே, குசும் - தருப்பை. (210) 56. | நாமக்கலவிநலங்கூர நயந்துநாளும் கானக்கனலைவளர்க்கின்ற கருத்துமாற்றித் தாமக்குழலாரிருவோரொடு தானுமொன்றி ஓமக்கனலேவளர்த்தா னுணர்வுண்மைகண்டான். |
(இ-ள்.) நாமம் - பிரசித்தமான, கலவி நலம் - கலவியின்பம், கூர - மிக,- நயந்து - விரும்பி, நாள்உம் - நாடோறும், காமம் கனலை - காமாக்கினியை, வளர்க்கின்ற-, கருத்து- எண்ணத்தை, மாற்றி - நீக்கி,- தாமம் குழலார் இருவோரொடு - மாலையணிந்த கூந்தலையுடையரான (குந்தி மாத்திரி என்ற) இருமனைவிமாருடனே, தான்உம்-, ஒன்றி - கூடியிருந்து, ஓமம் கனல்ஏ வளர்த்தான் - ஓமஞ் செய்தற்குரிய அக்கினியையே வளர்த்தவனாய், உண்மை உணர்வு - தத்துவ ஞானத்தை, கண்டான் - பெற்றிருந்தான்; (எ-று.) கனலைவளர்த்தது - அதனிடையிலிருந்து தவஞ்செய்ய என்னலாம்: இனி, யோகத்துக்கு அங்கமாகச் செய்யப்படுஞ் சடங்குக்கு என்பாரு முளர். (211) 57.- இங்ஙன் தவம்புரிந்துவருகையில், ஒருகால் குந்தியை நோக்கிப் பாண்டுமன்னவன் கூறத்தொடங்குதல். இவ்வாறரியதவநாடொறு மேறுமெல்லைக் கைவாளொழிந்துசமித்தேந்திய காவன்மன்னன் மைவாணெடுங்கண்வரசூரன் மகளைநோக்கிச் செவ்வாய்மலர்வான் புவிமேலுறை தெய்வமன்னான். |
(இ-ள்.) புவிமேல் உறை தெய்வம் அன்னான் - பூமிமீதுவாழ்கின்ற தெய்வத்தை யொப்பவனான, கை வாள் ஒழிந்து சமித்து ஏந்திய - கையிலே வாட்படையை நீங்கிச் சமித்தைத் தாங்கிய, காவல் மன்னன் -காத்ததற்றொழிலை யுடைய பாண்டுராசன்,- இ ஆறு - இவ்விதமாக, அரிய தவம் - அருமையான தவம், நாள் தொறும் ஏறும் |