75.-அதனையறிந்தபாண்டு குந்தியைமீண்டுபலமுறை இரந்துவேண்ட, அன்னாள்மீண்டும் மந்திரத்தால் வாயு தேவனை வரவழைத்துக்கூடுதல். ஈண்டுறுநிகழ்ச்சிகேட்டே யாதவன்மகளைநோக்கிப் பாண்டுமனிரந்துபல்காற் பணித்தலும்பவனன்றன்னை மீண்டும்மறையாலுன்னி யழைத்தனள்விரைவினோடி ஆண்டுவந்தவனும்பூத்த கொடியனாளாகந்தோய்ந்தான். |
(இ-ள்.) ஈண்டு - இங்கே [காந்தாரியிடத்தில்], உறு - நடந்த, நிகழ்ச்சி - செய்தியை, கேட்டு - கேள்வியுற்று,- பாண்டு மன் - பாண்டுராசன்,- யாதவன் மகளை நோக்கி - யதுகுலத்தில் தோன்றிய [சூரன் மகளான] குந்தியைப்பார்த்து, பல் கால் இரந்து பணித்தலும் - பல முறை வேண்டி (த் தன் கருத்தை)ச் சொல்லுதலும்,- (குந்திதேவி), - பவனன் தன்னை - வாயுதேவனை, மீண்டுஉம்-, அ மறையால் - (முன்பு தருமராசனையழைத்த) அந்தமந்திரத்தினால், உன்னி- நினைத்து, அழைத்தனள்-: ஆண்டு - அப்போது அங்கே, அவன் உம் - அந்தவாயுதேவனும், விரைவின் ஓடி வந்து-, பூத்த கொடி அனாள் - பூத்தக்கொடிபோன்றவளான குந்தியின், ஆகம் - மார்பில், தோய்ந்தான் - படிந்தான்; (எ-று.) (230) 76.- நல்லமுகூர்த்தத்தில் வீமனைப் பெறுதல். நெஞ்சுறமணந்துமீள நெடுங்கலைவாகனேகச் செஞ்சுடருச்சியெய்திச் சிறந்ததோர்முகூர்த்தந்தன்னில் அஞ்சனையளித்தபொற்றோ ளனுமனேயுவமையென்ன வெஞ்சினவீமன்றன்னைப் பயந்தனள்விரதமிக்காள். | (இ - ள்.) நெஞ்சு உற - மனம்பொருந்த, மணந்து - (அந்தக் குந்தி தேவியைக்) கூடி, நெடுங் கலை வாகன் - பெருமைபெற்ற ஆண்மானை வாகனமாகவுடைய அந்தவாயுதேவன், மீள ஏக - மீண்டு செல்ல,- விரதம்மிக்காள் - சிறந்தநோன்பினை நோற்றிருப்பவளான குந்திதேவி,- செஞ் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம் தன்னில் - செவ்வியசுடரையுடைய சூரிய தேவன் உச்சியையடைந்ததனாற் சிறந்த ஒரு முகூர்த்தத்தில், அஞ்சனை அளித்த பொன்தோள் அனுமன்ஏ உவமை என்ன - அஞ்சனாதேவி பெற்ற அழகிய தோள்வலிமையுடைய அனுமனே உவமையாவனென்று (உலகோர்) சொல்லுமாறு, (பெருவலிபடைத்த), வெம்சினம் வீமன் தன்னை - கொடிய சினத்தையுடைய வீமசேனனை, பயந்தனள் - பெற்றாள்; (எ-று.) செஞ்சுடருச்சி யெய்திச்சிறந்த முகூர்த்தம்- 'அபிஜித்' எனப்படும்: "அபிஜித் ஸர்வதோஷக்ந:" என்ற மேற்கோள் இங்குக்காணத்தக்கது.அஞ்சனை - கேசரியென்னும் வானரராசன் மனைவி: அந்த அஞ்சனையோடு வாயுதேவன் கலந்துபெற்ற வானரப்புதல்வன் அனுமான். இவன் பிறந்தபோது பசியால் இளஞ்சூரியனைக் கனியென்று கருதிப் பாய்ந்து இந்திரனால் தாக்கப்பட்டு முறிந்த கவுளையுடைய னானதனால், 'அனுமான்' எனப்பட்டான். (231) |