பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்13

10.- இதுமுதல் மூன்றுகவிகள் - அசுரர்கவர்ந்துசென்ற உருப்பசியைப்
புரூரவா மீட்டு, இந்திரன் தூதினாற் பூமியில் மணந்திருந்தமை கூறும்.

பொருப்பினைச்சிறகரிந்தவன் புரத்துமங்கையருள்
உருப்பசிப்பெயரொண்டொடி யுருவினிற்சிறந்தாள்
தருப்பொழிற்பயில்காலையிற் றானவர்காணா
விருப்புறக்கவர்ந்தேகின ரவளுடன்விசும்பில்.

     (இ - ள்.) பொருப்பினை சிறகு அரிந்தவன் - மலைகளின் சிறகை
(வச்சிராயுதத்தினால்) அரிந்திட்டவனான தேவேந்திரனுடைய, புரத்து -
அமராவதிபட்டணத்திலே வாழ்கின்ற, மங்கையருள் - அப்ஸரஸ்
ஸ்திரீகளுக்குள்ளே,உருவினில் சிறந்தாள்-வடிவழகினால் மேம்பட்டவளான
உருப்பசி பெயர்ஒள் தொடி - உருப்பசியென்று பேர்பெற்ற
அழகிய தொடியினைப்பூண்டவளாகிய பெண், தரு பொழில் பயில் காலையில் -
மரங்களைக்கொண்டசோலையிலே சஞ்சரிக்கும்போது, தானவர் காணா - சில
அசுரர்கள் (அவளைக்)கண்டு, விருப்பு உற - (அவளிடத்து)
விருப்பந்தோன்றியதனால், கவர்ந்து- (அவளைக்)கவர்ந்துகொண்டு, விசும்பில் -
ஆகாயவழியே, அவளுடன் ஏகினர்-அவளுடன்சென்றார்கள்; (எ-று.)

     முற்காலத்தில் மலைகளெல்லாம் சிறகுடையனவாயிருந்து, ஊர்களின்
மேலிருந்துஅழித்துவருதல்கண்டு முனிவர் முதலியோர் முறையிட, இந்திரன் தன்
வச்சிராயுதத்தால்அவற்றின் சிறகுகளை யறுத்திட்டானென்ற கதைபற்றி,
'பொருப்பினைச் சிறகரிந்தவன்' என்றது. உருப்பசி உருவாற் சிறந்திருந்தது,
அன்னாளை அசுரர் கவர்தற்கு ஏதுவாயிற்றென்க. உருப்பசி - ஊர்வசீயென்ற
வடசொல்லின் திரிபு. பதரிகாச்சிரமத்தில் திருமால்நாராயணரூபியாயிருந்து
தவஞ்செய்ய அத்தவத்தைக் கெடுக்கும்படி மேனைமுதலியதேவமாதர் வர,
நாராயணமுனிவர் தமது ஊருவினின்றும் [தொடையினின்றும்] ஓர்
கட்டழகியைப் படைத்தனுப்ப, அங்ஙனம் படைக்கப்பட்ட அம்மாதின்
கட்டழகைக்கண்டு அத்தேவமாத ரெல்லாம் வெள்கிப் பின் அவளைத் தம்முடன்
சேர்த்துக்கொண்டன ரென்பது வரலாறு. அங்ஙனம் நாராயண முனிவரின்
உருவினின்று தோன்றிய காரணம்பற்றி, அம்மாது ஊர்வசி யென்று பேர்பெற்றாள்.
மித்திரனென்ற சூரியனது சாபத்தால் இவள் பூமியில் புரூரவஸோடு வசிக்குமாறு
நேர்ந்ததென்ப. ஒண்டொடி - பண்புத்தொகையன்மொழி. தானவர் -
கசியபமுனிவர்மனைவியருள் தனு என்பாளிடம் தோன்றியவர்.          (18)

11.கொண்டுபோதலுமபயமென் றுருப்பசிகூவ
அண்டர்யாவருமஞ்சின ரவருடனடுபோர்
வண்டுசூழ்குழலணங்கையிம் மதிமகன்மகனும்
கண்டுதேர்நனிகடவின னசுரர்மெய்கலங்க.

     (இ - ள்.) கொண்டு போதலும் - (அசுரர்கள் உருப்பசியை அவ்வாறு)
கொண்டுபோனவளவிலே, உருப்பசி - உருப்பசியென்ற அந்தத் தெய்வமங்கை,
அபயம்என்று-, கூவ - கதற,- (அதுகேட்டு),