பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்133

தொட்ட - (மன்மதன்) தொடுத்துவிட்ட, அரு தழல் கணைகள் போல - அரிய
ஆக்நேயாஸ்திரத்தைப்போல, அலர்ந்தன - மலர்ந்தன;

     மோகனச்சுண்ணம் - மேலேபட்டமாத்திரத்தில் மோகத்தை யுண்டாக்குஞ்
சூர்ணமெனினுமாம். அசோகம் யோகிகட்கும் காமத்தை யுண்டாக்கிற்றென்பது
பின்னடிகளின் பொருள். இனி, யோகம் என்பதை வியோகமென்பதன் முதற்குறை
எனக்கொண்டு, பிரிவு என்று உரைப்பினுமாம்: பாலபாரதத்தில் "புஷ்பம்
அசோகசாகிந: ப்ரஸூநபாணேந ருஷா வியோகிஷி - ப்ரயுக்தம் ஆக்நேய
மிவாஸ்த்ரம் ஆபபௌ" என்றது காண்க. யோகம் -
புணர்ச்சியென்பாருமுளர். இதுவும் - தன்மைத்தற்குறிப்பேற்றவணியே.   (249)

95.-அப்போது மாத்திரியினிடத்துப் பாண்டு
காதல்பூணுதல்.

வேனிலின்விளைவினாலும்  வேனிலான்விழவினாலும்
மாநலந்திகழுமூரன் மாத்திரிவனப்பினாலும்
தானலமுறுதலெண்ணிச் சாபமுமறந்துமற்றப்
பானலங்கண்ணாளோடும் பாண்டுவும்பரிவுகூர்ந்தான்.

     (இ-ள்.) வேனிலின் விளைவினால்உம் - இளவேனிற்காலந்
தோன்றியதனாலும், வேனிலான் விழவினாலும் - மன்மதன் காதல் நோயை
விளைத்தலாலும், மா நலம் திகழும் மூரல் மாத்திரி வனப்பினால்உம் - மிக்க
அழகினால் விளங்குகின்ற புன்சிரிப்பையுடைய மாத்திரியின் அழகினாலும்,- தான்
நலம் உறுதல் எண்ணி - தான் காமவின்பத்தையடையவெண்ணி,- சாபம்உம்
மறந்து - (கிந்தம முனிவன்) சாபத்தையும் மறந்து, மற்று - பின்னும், அ பானல்
அம் கண்ணாளோடுஉம் - கருங்குவளை மலர்போன்ற அழகிய
கண்களையுடையவளான அந்த மாத்திரியினிடம், பாண்டுவும்-, பரிவு கூர்ந்தான் -
காதல்மிகுந்தான்; (எ-று.) - பாண்டுவும் என்ற உம்மை -  உயர்வுசிறப்போடு
எச்சப் பொருளுமுடையது.                                   (250)

96.- சோலையில் பாண்டுவும் மாத்திரியும் மாதவிப்பந்தர் சேர்தல்.

அருந்தளிர்நயந்துநல்கி யலகுடனலகுசேரப்
பொருந்துமுன்னவசமாகிப் போகமென்குயிலும்பேடும்
இருந்துமெய்யுருகுங்காவி லிரதியுமதனுமென்ன
வருந்தியகாதலோடுமாதவிப்பந்தர்சேர்ந்தார்.

     (இ-ள்.) அருந் தளிர் - அருமையான தளிரை, நயந்து நல்கி - விரும்பி
(த்தன்) பேடைக்குக் கொடுத்து, அலகுடன் அலகுசேர - (பெட்டையின்)
அலகுடனே (ஆண்பறவையின்) அலகுசேரா நிற்க, பொருந்து முன் - கூடும்
முன்னே, [கூடியவுடனேயென்றபடி], அவசம் ஆகி - பரவசமாகி, போகம் மெல்
குயில்உம் பேடுஉம் - போகத்தினால் இளகிய ஆண்குயிலும் அதன் பேடையும்,
இருந்து-, மெய் உருகு- உடலுருகுகின்ற, காவில் - சோலையிலே, இரதிஉம்
மதன்உம் என்ன - ரதிதேவியும் மன்மதனும்போல, வருந்திய காதலோடு -
வருத்தமுறுதற்குக்காரணமான காமவிச்சையுடனே, மாதவிபந்தர் -
குருக்கத்திக்கொடி பந்தர்போற் படர்ந்திருந்த இடத்தை, சேர்ந்தார் - (பாண்டுவும்
மாத்திரியும்) அடைந்தார்கள்; (எ-று.)