(கணவனுடன்) மகிழ்ந்து, மத்திரிஎனும் - மாத்திரியென்கிற, கொடியவாள் கண் விடம் அன்னாள் - கொடியவாள்போன்ற கண்களையுடைய விடத்தையொத்தவள், முத்திரை உணர்ந்திலள் - (பாண்டுவுக்கு) இறப்புக்குறிதோன்றியதை யறியாதவளாய், (இந்நிலை), முயக்கம் உறும் இன்பம் நித்திரை கொல் ஆம் - தழுவுதலா லுண்டான இன்பவசத்தால் தோன்றிய நித்திரைபோலும், என - என்று, நினைந்து-, அருகு இருந்தாள் - சமீபத்திலேயிருந்தாள்; மத்திரி - குறுக்கல். மன்னவனிறப்புக்குக் காரணமானதனால், 'விடமன்னாள்' என்றது. (256) 102.- பின்புகணவன் இறந்தான்போலுமென்று மாத்திரி அரற்றுதல். செயிர்த்தவரையாவிகவர் தீயுமிழும்வேலான் உயியர்த்திலன்விழித்தில னுணர்ந்துமிலனென்னா அயிர்த்தனளழைத்தன ளரற்றினளிரங்கா வயிர்த்தனணிலத்தினுயர் வானமினிதென்பாள். |
(இ-ள்.) 'செயிர்த்தவரை - பகைவரை, ஆவி கவர் - உயிரைக் கவர்கின்ற, தீ உமிழும் வேலான் - நெருப்பைக்கக்குகின்ற வேற்படையையுடையவனான பாண்டுராசன், (இத்துணைநேரமாயும்), உயர்த்திலன் - மூச்சுவிட்டானில்லை: விழித்திலன் - கண்களைத் திறந்தானில்லை, உணர்ந்துஉம் இலன் - உணர்ச்சிபெற்றானுமில்லை, என்னா - என்றுகருதி, அயிர்த்தனள் - (உயிரொழிந்தானோ என்று) சந்தேகித்தாள்: அழைத்தனள் அரற்றினள் - கூவியழுதாள்: இரங்கா - இரக்கமிக்கு, நிலத்தின் உயர் வானம் இனிது என்பாள் - மண்ணுலகில் தான்இருப்பதைவிட மேலிடத்துள்ள வானத்திற்செல்வதை இனிதெனக்கருதுபவளாகி, வயிர்த்தனள்- (இறப்பதாகத்) தீர்மானங்கொண்டாள்; (எ-று.) மாத்திரி ரிஷியின் சாபத்தை நினைந்து தடுக்கவும், வலியக் கூடிப் பாண்டு உயிரிழந்தானாக, உணர்ந்த மாத்திரி கோவென்று கதறி யழுததாகப் பாலபாரதம் கூறும். (257) 103.- அரற்றொலிகேட்டகுந்தி புத்திரருடன் அங்குவருதல். புத்தியிலண்மன்றல்பெறு பூவைகுரல்கேளா முந்தியகடும்பழி முடிந்ததுகொலென்னாக் குந்தியும்விரைந்துதன் குமாரரொடுபுக்காள் அந்தியரவிந்தமென வணிகுலைமுகத்தாள். |
(இ-ள்.) புந்தி இலள் - (சாபத்தைப்பற்றிய) அறிவு இல்லாதவளாய், மன்றல் பெறு - (கணவனோடு) சேர்க்கையைப்பெற்ற, பூவை - நாகணவாய்ப் பறவைபோன்ற மாத்திரியின், குரல் - குரலை, கேளா - கேட்டு,- 'முந்திய - முற்பட்டுநேர்ந்துள்ள, கடும்பழி - கொடிய சாபம், முடிந்தது கொல் - (இன்று) பயனைவிளத்திட்டதோ?' என்னா - என்று சங்கைகொண்டு,- குந்திஉம் - குந்திதேவியும், விரைந்து-, தன் குமாரரொடு - தன்புத்திரிருடனே, அந்தி அரவிந்தம் என அணிகுலை முகத்தாள் - மாலைக்காலத்துத்தாமரை போல அழகுகுறைந்த முகத்தையுடையவளாய், புக்காள் (அங்கு வந்து) சேர்ந்தாள்; (எ-று.) (258) |