பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்139

108.- திருராஷ்டிரன் வணங்கிய புத்திரரையெடுத்துத் தழுவிமகிழ்தல்.

இறந்ததுணைவற்குள மிரங்குநிலமன்னன்
சிறந்தசரணத்தில்விழு சிறுவரையெடுத்துப்
புறந்தழுவியப்பொழுது புண்ணியநலத்தால்
பிறந்தபொழுதொத்துமகிழ் பெற்றியினனானான்.

     (இ-ள்.) இறந்த - உயிர்நீங்கிய, துணைவற்கு - தம்பியான பாண்டுவின்
பொருட்டு, உளம் இரங்கும் - மனத்தில் இரக்கங்கொண்ட, நிலம் மன்னன் -
நிலத்துக்குஉரியமன்னனான திருதராட்டிரன்,- சிறந்த சரணத்தில்-(தன்னுடைய)
சிறப்புற்ற பாதங்களிலே, விழு - வீழ்ந்து வணங்கிய, சிறுவரை - புதல்வரை,
எடுத்து-, அப்பொழுது-, புறம் தழுவி- (அவர்களுடைய) முதுகைத்
தடவி,புண்ணியம் நலத்தால் பிறந்த - புண்ணியப்பயனால் அவர்கள் பிறந்த,
பொழுது - வேளையை, ஒத்து - ஒப்ப, மகிழ் பெற்றியினன் ஆனான் -
மகிழ்ச்சியுற்ற தன்மையனானான்; (எ -று.)

     தம்பியின்மரணத்தால் வருந்துகின்ற அந்தத்திருதராஷ்டிரன்
அத்தம்பியினுடைய குமாரர் தன்பாதங்களில் விழ, அவர்களை யெடுத்து
அணைத்து அவர்கள் பிறந்தபோது பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியொப்ப
மகிழ்ச்சி  யடையலாயின னென்பதாம். மகிழ் - முதனிலைத் தொழிற்பெயர்.
                                                          (263)

109.-வீடுமன் முதலியோர் பாண்டுவையும் அவன்
மக்களையும் நினைந்து இருவகைக்கண்ணீரைச் சொரிதல்.

வியனதிமகன்சிலைவல் விதுரன்முதலுள்ளோர்
பயனுடைவிசும்புபயில் பாண்டுவைநினைந்தும்
சயநிலைபெறுந்தகைய தனயரையுகந்தும்
நயனமிருபைம்புனலு நல்கினர்நயந்தார்.

     (இ-ள்.) வியன் நதி மகன் - கங்கைநதியின் மகனாகிய வீடுமன், சிலை வல்
விதுரன் - வில்லில்வல்ல வலியவிதுரன், முதல் - முதலாக, உள்ளோர்-,- பயன்
உடை விசும்பு - புண்ணியப்பயனாக அடைதலையுடைய சுவர்க்கத்தில், பயில் -
சென்ற, பாண்டுவை நினைந்துஉம் - பாண்டுவைச் சிந்தித்தும், சயம் நிலைபெறும்
தகைய தனயரைஉகந்து உம் - வெற்றிநிலைபெறுந் தன்மையையுடைய
(அந்தப்பாண்டுவின்) புதல்வரைக்கண்டு மகிழ்ந்தும், நயனம்- (தம்) கண்களில்,
இரு பைம் புனல்உம் நல்கினர் - (சோகக்கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்ற)
இருவகையான புதிய கண்ணீர்களையும் விட்டவராய், நயந்தார் - (தம்முடைய)
விருப்பத்தைக் காட்டினார்; (எ-று.)

     ஆகாசம் என்று பொருளுள்ள வியத் என்பது வியன் என்று திரிந்தது:
வியன்+நதி = வியனதி: வானதி கங்கை. வியன் - பெருமையெனக்கூறித்
தமிழ்ச்சொ லென்றலும் ஒன்று.                               (264)

110.-பாண்டுபுத்திரரும் திருதராட்டிரன் புத்திரரும்
ஓரிடத்துவளர்தல்.

அனுசநிரு பன்புதல்வ ரைவரு மகீபன்
தனயரொரு நூற்றுவரு மன்பினொடு தழுவிக்
கனகுல முகந்துபெய் கருங்கய நெருங்கும்
வனசமல ருங்குமுத மலருமென வளர்வார்.