துரியோதனனோடு ஆலோசித்து, (பிறகு), பாவகன் நண்பன் மெய் புதல்வனை - அக்கினியின் தோழனான வாயுவினது மெய்யன்புக்கு உரிய மகனாகிய வீமனை, நார்கொள் வல்லியால் - கயிற்றின் தன்மையைக்கொண்ட நீண்டகொடிகளால், திண் பதத்தொடு புயம் சிக்க யாத்தபின் - வலிய கால்களும் கைகளும் இறுகும்படி கட்டிய பின்பு,- (எ-று.)- 'பெருநதியூடு வீழ்த்தினான்' என வருங்கவியோடு முடியும். கண்படை - கண்டுபடுதல், கண்மூடியுறங்குதல். எண்படைக்குமரன் என்பதற்கு - எண்ணத்தக்க தம்பிமாரின் தொகுதியையுடைய துரியோதனனென்று உரைத்தலுமொன்று. நெருப்புப் பற்றியெரிதற்குக் காற்று உதவியாதல்பற்றி, காற்றுக்கு அக்கினிசகாய னென்று ஒருபெயர் வழங்கும். சிக்க - திசைச்சொல். 'ஆர்த்தபின்' என்றும் பாடமுண்டு. (279) 6.- துரியோதனன் வீமனைக் கங்கையில் எறிதல். அரவினிற்பிணித்தெழு மரவம்பொங்கிட உரனுடைப்பொருப்பையன் றும்பர்நாயகன் பரவையிற்செறித்தெனப் பயனில்செய்கையான் விரவுமப்பெருநதி யூடுவீழ்த்தினான். |
(இ-ள்.) உம்பர் நாயகன் - தேவர்களுக்கெல்லாந் தலைவனான திருமால், அன்று - முன்னொருகாலத்தில், உரன் உடைபொருப்பை - வலிமையையுடைய மந்தரமலையை, அரவினில் பிணித்து - (வாசுகி யென்னும்) பாம்பினாற் கட்டி, எழும் அரவம் பொங்கிட - மிக்க ஓசை யுண்டாம்படி, பரவையில் செறித்து என - (பாற்) கடலில் இட்டாற்போல,- (வீமனை), பயன் இல் செய்கையான் - பிரயோசன மற்ற செயலையுடைய துரியோதனன், விரவும் அ பெருநதியூடு வீழ்த்தினான் - பொருந்திய அந்தப் பெரிய கங்கை நதியின் நடுவிற் போகட்டான்; (எ-று.) "ஆயதாபிரஹிதம் ஸு யோதந:-தம்ஸு ஸு ப்தமவபத்யவல்லிபி; போகிபத்தமிவ மந்தரம் ஹரி:- ஸிந்துகர்ப்பபயஸிந்யபாதயத்" என்றதற்கு ஏற்ப - உம்பர்நாயகன்-திருமால் எனப்பட்டது. மேல் வீமன் தனது வலிமையால் தப்பியெழுதலின் 'பயனில் செய்கையான் வீழ்த்தினான்' என்றரென்னலாம். 'ஆர்வம்பொங்கிட' 'பயனில்செய்கையால்', 'வீழ்த்தினார் என்றும் பாடம். (280) 7.- வீமன் கட்டு விடுவித்துக் கரையேறுதல். வீழ்ந்தவனந்தர நிமிர்ந்துமெய்யுறச் சூழ்ந்தனபிணிகளைத் துணிகளாக்கியே ஆழ்ந்திலனேறிமீண் டவசத்தோடவண் தாழ்ந்தனனிராகவன் றம்பிபோன்றுளான். |
(இ-ள்.) இராகவன் தம்பி போன்றுஉளான் - இராமனது தம்பியான இலக்குமணனையொத்துள்ளவனாகிய, வீழ்ந்தவன் - (கங்கைப் பெருக்கில்) விழுந்தவீமன்,- அந்தரம் நிமிர்ந்து - மேலெழுந்து, மெய் உற சூழ்ந்தன பிணிகளை துணிகள் ஆக்கி - (தன்) உடம்பை அழுந்தச்சுற்றியுள்ள கட்டுக்களை (த் தன் உடல்வலியால்) துண்டுக |