பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்153

    (இ-ள்.) வாசுகிதனக்கு இவன் வரவு உணர்த்தலும் - (நாகராசனான)
வாசுகிக்கு இந்த வீமனது வருகையை (நாகங்கள்) அறிவித்தவுடனே,- அவன்-
அந்த வாசுகி, ஆசுகன் மதலை என்று அறிந்து - (இவனை) வாயுவின்
குமாரனென்று அறிந்துகொண்டு, தேசு உறு பொன்குடம் தெரிந்து - ஒளிமிக்க
பொன்மயமான (அமிருத) கலசங்களைத் தேர்ந்தெடுத்து, பத்தினால் -
அக்குடங்கள் பத்திலேயுள்ள, ஏசு அறும் அமுது எலாம் - குற்றமில்லாத
அமிருதம் முழுவதையும், இனிதின் ஊட்டினான்-இனிமையாக உண்பித்தான்;
(எ-று.)

     குந்தியின் தாய்மரபினரோடு வாசுகிக்கு உறவுமுறைமை உள்ளதனால்,
ஆர்யகனென்ற நாகமாதாமகனான அரசன் மொழிப்படி, வாசுகி வீமனுக்கு
ஆயிரம்யானைவலிமைதரவல்ல திவ்யரசத்தைப் பானஞ் செய்வித்தனனென்று
வியாசபாரதத்திற் கூறியுள்ளது. தன்சாதியாகிய பாம்புகளுக்கு உணவாய் அவற்றை
வளர்க்கிற வாயுவின் மகனென்ற சம்பந்தத்தாலும், பல நாகங்கள் கடித்தும்
விஷம் உறைக்காத அவனது உடல் வலிமையைக்  கண்டதனாலாகிய
ஆச்சரியத்தாலும், வீமனுக்கு வாசுகி அமிழ்து ஊட்டின னென்பாருமுளர்.
'பற்றினால்' என்றும் பாடம்.                                     (289)

16.- அமிருதமுண்டதனால் வீமனது உடல் எழிலுறுதல்.

வெங்கனல்கொளுத்தலின் வெந்தவான்புலம்
மங்குல்பெய்மாரியால் வயங்குமாறுபோல்
அங்கெரிவிடநுகர்ந் தழிந்தபேருடல்
இங்கமுதருத்தலா லெழில்புரிந்ததே.

     (இ-ள்.) வெம் கனல் கொளுந்தலின் வெந்த - வெவ்வியநெருப்புப்
பற்றுதலால் எரிந்துபோன, வான் புலம் - பெரிய காடு, மங்குல் பெய் மாரியால் -
மேகம்பொழிந்த மழையால், வயங்கும் ஆறுபோல் - தழைத்து
விளங்குந்தன்மைபோல,- அங்கு ஏரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் -
அவ்விடத்தில் [துரியோதனனிடத்தில்] கொடியவிஷத்தை யுண்டதனால் தன்
நிலைகுலைந்த (வீமனது) பெரிய உடம்பு, இங்கு அமுது அருத்தலால் எழில்
புரிந்தது - இவ்விடத்தில் அமிருதம் உண்பிக்கப்பெற்றதனால் அழகுசெய்தது;

     முதலிரண்டடிக்கு - உஷ்ணமான நெருப்புப்போன்ற சூரியகிரணஞ்
சுடுதலால் தீந்துபோனபெரியபயிர்நிலம் மழையால் தழைத்துச் செழித்தல்போல என்றுமாம். 'கொளுத்தலின்' எனவும்பாடம்.                      (290)

17.-வீமன் வாசுகியின் மாளிகையில் எட்டுநாள்
தங்கியிருத்தல்.

ஆயிரம்பதின்மடங் கரசுவாக்களின்
மாயிருந்திறல்வலி மலிந்தமேனியான்
ஏயிருந்தவப்பய னென்னவெண்பகல்
மேயிருந்தனன்பணி வேந்தன்கோயிலே.

     (இ-ள்.) ஆயிரம் பதின் மடங்கு அரசு உவாக்களின் - பதினாயிரம்
அரசயானைகளினுடைய, மா இரு திறல் வலி - மிகவும் அதிகமான பெரிய
வலிமை, மலிந்த - பொருந்திய, மேனியான் - உடம்பை யுடைய