பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்157

அவ்வாயுவையே உவமை கூறினார். இனி, ஊதையில் பூதமொத்த சிறுவர் -
உயிர்ப்பில்லாத பிராணிகள் போன்று வீமனை யிழத்தலால் அழிவடைந்த
மற்றைநால்வரென்றலும் ஒன்று. 'தாதைதாதைபால் சிறுவரைக் கொண்டு சேறலும்'
என்றமையால், வீமனில்லாக் குறையைத் தெரிவித்தமை பெறப்படும்.                (296)

23.- பலருந் தேற்றவும் குந்தி தேறாதுநிற்றல்.

தருமமன்னனுநகர்ச் சனங்கள்யாவையும்
தெருமரறேற்றவுந் தெய்வங்கூறவும்
பெருமிதநிமித்தங்கள் பெற்றிபேசவும்
வரும்வருமெனமனம் மறுகிவைகினாள்.

     (இ-ள்.) வரும் வரும் என - (வீமன்) வருவான் வருவானென்று கூறி,
தருமமன்னன்உம் - யம தருமராசனது அமிசமான விதுரராசனும், நகர் சனங்கள்
யாவைஉம் - பட்டணத்துச் சனங்களெவையும், தெருமரல் தேற்றஉம் -
மனக்கலக்கத்தைத் தெளிவிக்கவும், தெய்வம் - தெய்வங்கள், கூறஉம் -
ஆவேசப்பட்டுச் சொல்லவும், பெருமிதம் நிமித்தங்கள் - நல்ல சகுனங்கள்,
பெற்றி பேசஉம்- (அவன் வருவதற்கு உரிய) அடையாளங்களைக் கூறவும்,
(குந்திதேவி), மனம் மறுகிவைகினாள் - (தேறாமல்) மனங்கலங்கியே இருந்தாள்;
(எ-று.)

     விதுரன் யம தருமராசனது அமிசமாதலைக் கீழ்ச் சம்பவச் சருக்கத்தில்
வந்ததனால் அறிக. சனமென்றது - பொருளால் உயர்திணையாயினும் சொல்லால்
இருதிணைக்கும் பொதுவாதலால், 'சனங்கள் யாவையும்' என
அஃறிணைப்பாற்படுத்துக் கூறினார். பெரும் இதம் நிமித்தங்கள் எனப்பிரித்து -
மிக்க நன்மைக்கு உரிய சகுனங்களெனினுமாம். பேச - உணர்த்த என்றபடி: இது
- ஒருவகை உபசாரவழக்கு. வரும்வரும் என்ற அடுக்கு - துணிவையும்
விளக்குவது. 'வைகுநாள்', 'வைகினார்' என்றும் பாடம்.                (297)

24.-வீமனை நாகங்கள் சுமந்து கங்கைக்கரையிற்கொண்டு சேர்த்தல்.

இருந்திளைப்பகன்றபி னிவனைமற்றைநாள்
அருந்திறற்போகிக ளரசனேவலால்
வருந்தியுற்றெடுத்துமுன் வந்தநீர்வழிப்
பொருந்திரைக்கங்கையின் கரையிற்போக்கவே.

இதுமுதல் மூன்று கவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) இருந்து - (வீமன் வாசுகியின் மாளிகையில் எட்டுநாள்)
தங்கியிருந்து, இளைப்பு அகன்றபின் - இளைப்பாறியபின்பு, மற்றைநாள் -
அடுத்தநாளில், அரு திறல் போகிகள் - (பிறவுயிர்க்கு) அரிய
வலிமையையுடையநாகங்கள், அரசன் ஏவலால் - (தங்கள்) அரசனான
வாசுகியினது கட்டளையினால், இவனை வருந்தி உற்று எடுத்து - இவ்வீமனை
வருந்திச் சுமந்தெடுத்து, முன் வந்த நீர் வழி - முன்பு (இவன்) வந்த நீரின்
வழியாய்க் (கொண்டுவந்து), பொரும் திரை கங்கையின் கரையில் போக்க -
மோதுகின்ற அலைகளையுடைய கங்கா நதியின் கரையிலே செலுத்திவிட,-
(எ-று.) -"மேனியான் [வீமன்] ஆயினான்" என 26- ஆங் கவியோடு முடியும்.