பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்161

30.-கிருபன் கௌரவர்க்கும் பாண்டவர்க்கும் வில்வித்தை பயிற்றல்.

மற்றிவன்சந்தனு மைந்தனேவலால்
கொற்றவரருள்குரு குலகுமாரரை
வெற்றிகொள்சிலையும்வெவ் வேலும்வாளமும்
பற்றலர்வெருவரும் படிபயிற்றினான்.

     (இ-ள்.) இவன் - இந்தக்கிருபன்,- சந்தனுமைந்தன் ஏவலால் -
சந்தனுவென்னும் அரசனது குமாரனான வீடுமனது கட்டளையால், கொற்றவர்
அருள் குருகுல குமாரரை - வெற்றியையுடைய (திருதராட்டிரன் பாண்டு என்ற)
அரசர்கள் பெற்ற குருகுலத்துக்கு உரிய மக்களாகிய நூற்றைவரையும்,
வெற்றிகொள் சிலைஉம் வெம் வேல்உம் வாளம்உம் - சயத்தைக் கொள்ளுகிற
விற்படையையும் கொடிய வேற்படையையும் வாட்படையையும்,
பற்றலர்வெருவரும்படி பயிற்றினான் - பகைவர்கள் அஞ்சும்படி கற்பித்தான்;
(எ-று.)                                                    (304)

31.- வீடுமன் கிருபனினுஞ் சிறந்த ஒரு குருவை நாடுதல்.

பரிவுட னிவன்படை பயிற்றப் பின்னருங்
குருபதி வேறொரு குருவைத் தேடினான்
இருளற மதிநில வெறித்த தாயினும்
பரிதியை நயக்குமிப் பரவை ஞாலமே.

    (இ-ள்.) இவன் - இந்தக்கிருபன், பிரிவுடன் - அன்புடனே, படை பயிற்ற -
ஆயுதவித்தையைக் கற்றுக் கொடுத்துவரவும், பின்னர் உம் - பின்பும், குருபதி -
குருகுலத்துக்குத் தலைவனான வீடுமன், வேறு ஒரு குருவை தேடினான் -
(இவனினுஞ் சிறந்த) வேறோராசிரியனைத் தேடுபவனானான்; மதி - சந்திரன்,
இருள் அற நிலவு எறித்தது ஆயின்உம் - இருளொழியும்படி (தனது) ஒளியை
வீசிவந்ததாயினும், இ பரவை ஞாலம் - கடல்சூழ்ந்த இந்நிலவுலகம், பரிதியை
நயக்கும் - (அச்சந்திரனினும் மிக்க வொளியையுடைய) சூரியனை விரும்பு
மன்றோ! (எ-று.) - இச்செய்யுள் - எடுத்துக்காட்டுவமை.             (305)

வேறு

32.- இதுவும், அடுத்த கவியும் - துரோணன்வரலாறு.

பரத நாத வேத பரத்து வாச னென்பான்
விரத வேள்வி தன்னின் மேன கையா லான
சுரத தாது வீழ்ந்த துரோண கும்பந் தன்னில்
வரத னொருவன் வந்தான் வசிட்ட முனியை யொப்பான்.

    (இ-ள்.) பரதம் - தாளவகையோடு சம்பந்தமுடைய, நாதம்-
இசையோடுபொருந்திய, வேதம் - வேதங்களைவல்ல, பரத்துவாசன் என்பான் -
பரத்துவாச னென்னும் முனிவன், விரதம் வேள்வி தன்னில் -
விரதானுட்டானத்தோடு கூடிய யாகஞ் செய்துகொண்டிருக்கையில், மேனகையால்
- மேனகையென்னுந் தேவமாதைக்கண்டு காமுற்றதனால், ஆன - ஆகிய, சுரத
தாது - இன்பமயமான வீரியம், வீழ்ந்த - விழப்பெற்ற, துரோணகும்பந்தன்னில் -
பதக்களவு கொண்டதொரு பாத்திரத்தினின்று, வசிட்டமுனியை ஒப்பான்