கொள்க: அவர் இயமதங்கியாரும், துரோணனும், கிருபனும் முதலாயினாரெனக் கொள்க' என்றது காண்க. பதினான்கு வித்தைகள் - ருக் யசுஸ் சாமம் அதர்வணம் என்ற வேதம் நான்கு, சிஷை வியாகரணம் சந்தஸ் நிருக்தம் சோதிடம் கல்பம் என்ற வேதாங்கம் ஆறு, மீமாம்சை தர்க்கம் புராணம் தர்மசாஸ்திரம் என்ற உபாங்கம் நான்கு என இவை. விஞ்சை = வித்யா: வடசொல் - பரசுராமன் - கோடாலியை ஆயுதமாகவுடைய இராமன். ராமனென்ற வடமொழி - (தனது குணஞ் செயல்களால் உலகத்தைக்) களிப்பிப்பவ னென்று காரணப்பொருள்படும். வில்லையும் கலப்பையும் ஆயுதமாகவுடைய தசரதராம பலராமர்களினும் வேறுபாடு விளங்கப் பரசுராமனென்று பெயர்பெற்ற இவன், விஷ்ணுவின் ஆறாம் அவதாரம்; ஜமதக்னி முனிவனது குமாரன்: மூவுலகையும் வென்ற இராவணனைச் சயித்திட்ட கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றவன்; உலகத்துச் செருக்குக்கொண்ட அரசர்பலரையும் அழித்தொழித்தவன். (307) 34.- வீடுமன் துரோணனை வரவழைத்தல். வெற்பின்வலியதிண்டோள் வேந்தனேவுந்தூதால் அற்பின்மிக்கசிந்தை யறஞ்சான்மொழியவ்வாசான் கற்பின்பன்னியோடுங் கையின்மதலையோடும் பொற்பினமராவதியே போலுநகரிபுக்கான். |
(இ-ள்.) அற்பின் மிக்க சிந்தை - அன்பினால் நிறைந்த மனத்தையும், அறம் சால் மொழி - தருமம்நிறைந்த சொல்லையுமுடைய, அ ஆசான் - அந்தத் துரோணாசாரியன், வெற்பின்வலிய திண் தோள்வேந்தன் ஏதும் தூதால் - மலையினும் மிகவலிய தோள்களையுடைய வீடுமராசன் அனுப்பின தூதனால்,- கற்பின் பன்னியோடுஉம் - கற்பையுடைய தன் மனைவியாளுடனும், கையின் மதலையோடுஉம்- சிறுமையையுடைய குழந்தையோடும், பொற்பின் அமராவதிஏ போலும் நகரி புக்கான் - அழகினால் அமராவதி நகரத்தையே போன்ற அஸ்திநாபுரியை அடைந்தான்; (எ-று.) இச்செய்யுள், கீழ் முப்பத்தோராஞ்செய்யுளோடு கதைத் தொடர்புடையதாதலால் இங்கே 'வேந்தன்' என்ற பொதுப் பெயர் - வீடுமனைக்குறித்தது. துரோணன்மனைவி கிருபி; மதலை அசுவத்தாமன். கை - சிறுமை மேலது: கையின் மதலை - சிறுவன்: மேல் 42, 59- ஆம் பாடல்களையூன்றிப்பார்த்தால், கையின் மதலை - கைக்குழந்தை யென்றல் பொருந்தாமை புலப்படும். குருகுலகுமாரர்களைப்பின்னும் பயிற்றுவித்தற்பொருட்டுத் துரோணனை வீடுமன் வரவழைக்க வேணுமென்று விரும்பியபோது, அந்தத்துரோணன் தானே அத்தினாபுரியைச்சேர்ந்தானென்று பிறநூல்கள் கூறும். ஆசான், பன்னி = ஆசார்யன், பத்நீ: வடசொற்கள். பொற்பு - பொன் பு எனப்பகுதியும் விகுதியுமாகப் பிரிந்து, பொன்னின் தன்மையெனக் காரணப்பொருள்படும். அமராவதீ என்பதற்கு - தேவர்களைத் தன்னிடத்தில் உடையதென்பது ஏதுப்பொருள்; இது, சுவர்க்கலோகத்து இராசதானி. (308) |