37.-இதுமுதல் ஒன்பது கவிகள் - ஒருதொடர்: துருபதன் செய்தியைத் துரோணன் வீடுமனுக்குக் கூறல். வேதமுனிவனிருந்த வேத்துமுனியைநோக்கிப் பூதந்தன்னினிகழ்ந்த புன்மைமொழியொன்றுரைப்பான் ஏதமெய்பெற்றனைய யாகசேனனென்பான் போதமில்லானென்பாற் பூட்டுநண்புபூண்டான். |
(இ-ள்.) வேதம் முனிவன் - வேதம்வல்ல அந்தணனாகிய துரோணன், இருந்த வேந்து முனியை நோக்கி - (தனது) அருகிலிருந்த ராசருஷியான வீடுமனைநோக்கி, பூதந்தன்னில் நிகழ்ந்த புன்மை மொழி ஒன்று உரைப்பான் - கழிந்தகாலத்தில் நடந்த எளிமையைப் புலப்படுத்தும் ஒருசொல்லைச் சொல்பவனானான்:- ஏதம் மெய் பெற்று அனைய - தீமைதானே ஒருவடிவ மெடுத்தாற் போன்ற, யாகசேனன் என்பான் - யாகசேன னென்னும் பெயரினனான, போதம் இல்லான் - அறிவில்லாதவன், என்பால் - என்னிடத்தில், பூட்டும் நண்பு பூண்டான் - தொடர்பையுண்டாக்கும் நட்பைப்பொருந்தினான்; யாகசேனன் - பாஞ்சாலதேசத்து அரசன்: துருபதனென்னும் மறுபெயருடையவன்; சோமகனது மகனான பிருஷதனென்பவனது குமாரன். பரத்துவாசமகாமுனிவனும் பிருஷதமகாராஜனு ஒருவர்க்கொருவர் மனங்கலந்த நண்பராதலால், பரத்துவாசகுமாரனான துரோணனிடத்துப் பிருஷத குமாரனான துருபதன் இளமையில் நண்புகொண்டிருந்தானென அறிக. (311) 38. | யானுமவனுமுறையா லிளையோமானவெல்லைப் பானுநிகர்தொல்லங்கி வேசன்பாதம்பணிந்து வானுமண்ணும்வியக்க மறவெம்படைகள்கற்றுத் தானும்வல்லனாகித் தன்போலென்னைவைத்தான். |
(இ-ள்.) யான்உம் அவன்உம் - நானும் அந்த யாகசேனனும், இளையோம் ஆன எல்லை - இளமைப்பருவமுடையோமா யிருந்தகாலத்தில், பானு நிகர் தொல் அங்கிவேசன் பாதம் பணிந்து - (பிரமதேஜசினால்) சூரியன்போல விளங்குகின்றபழைய அக்கினிவேசனென்னும் முனிவனது திருவடிகளை வணங்கி, வான்உம் மண்உம் வியக்க - விண்ணுலகத்தோரும் மண்ணுலகத்தோரும் கண்டு அதிசயிக்கும்படி, மறம் வெம் படைகள்- வலிமையையுடைய கொடிய படைக்கலங்களை, முறையால் - முறைமைப்படி, கற்று - பயின்றுவர,- (அவ்யாகசேனன்), தான்உம் வல்லன் ஆகி - (என்னைப்போலவே) தானும் வல்லவனாய், தன்போல் என்னை வைத்தான் - (இராசகுமாரனாகிய) தன்னைப் போலவே (எளியவனாகிய) என்னையும் பாவித்தான்; (எ-று.) அங்கிவேசன் - வடமொழித்திரிபு; இவன் அக்கினியினின்று பிறந்தவ னென்றும், பரத்துவாச முனிவனிடமிருந்து ஆக்நேயாஸ்திரம் பெற்றுப் பின்பு அந்த அஸ்திரத்தைத் துரோணனுக்குக் கொடுத்தன னென்றும்வடநூலால் விளங்கும், 'சொல்லங்கிவேசன்,' 'மறைவெம்படைகள்' என்றும் பாடம். (312) |