39. | பின்னையிரவும்பகலும் பிரியேமாகித்திரியத் தன்னையடைந்தநண்பின் றகவான்மிகவாதரியா என்னைவானமெய்தி யானேயிறைவனானால் உன்னையாளவைப்பே னுலகிற்பாதியென்றான். |
(இ-ள்.) பின்னை - பின்பு, இரவுஉம் பகல்உம் - எப்பொழுதும்' பிரியேம் ஆகி திரிய - (நாங்கள் ஒருவரையொருவர்) பிரியாதவர்களாய் ஒழுக,- (அவ்யாகசேனன்), தன்னை அடைந்த நண்பின் தகவால் - தன்னை (நான்) அடைந்த சிநேகத்தின் விசேடத்தால், மிக ஆதரியா - (என்னிடத்து) மிகவும் அன்புகொண்டு, (என்னைநோக்கி), 'என் ஐ வானம்எய்தி - என்தந்தை சுவர்க்கமடைய [இறந்த பின்பு], யான்ஏ இறைவன் ஆனால் - நானே அரசனானால், (அப்பொழுது), உலகில் பாதி ஆள உன்னை வைப்பேன் - (எனது) நாட்டிற் பாதியை (நீ) அரசாளும்படி உன்னை அரசனாக்கிவைப்பேன்,' என்றான் - என்று சொன்னான்; (எ -று.) 40. | நன்றுநன்றுன்வாய்மை நன்றாநண்புக்கினியாய் என்றுபோந்துநானு மியன்றதவத்தினிருந்தேன் வென்றுகொண்டபுவியை வேந்தன்மகவுக்களித்துச் சென்றுவானம்புகுந்தான் சிறுவன்றலைவனானான். | (இ-ள்.) (அப்பொழுது), நானும்-, (அவனைநோக்கி) 'நன்று ஆம் நண்புக்கு இனியாய் - நல்லதான சினேகத்திற்கு இனியவனே! உன் வாய்மை நன்று நன்று - உன்வார்த்தை நல்லது நல்லது!' என்று - என்று (உபசாரமொழி) கூறி, (பின்பு), போந்து - (குருவினிடத்தை விட்டுத் தனியே) சென்று, இயன்ற தவத்தின் இருந்தேன் - (எனதுசாதிக்குப்) பொருந்தின தவத்தைச் செய்தலில் இருந்து விட்டேன்: வேந்தன் - (யாகசேனனுடைய தந்தையான) பிருஷதமகாராசன், வென்று கொண்ட புவியை- (பகைவரை) வென்ற அரசாண்டுவந்த இராச்சியத்தை, மகவுக்கு அளித்து - (தன்) மகனுக்குக் கொடுத்து, சென்று வானம் புகுந்தான் - இறந்து சுவர்க்கத்தை யடைந்தான்: (ஆகவே), சிறுவன் தலைவன் ஆனான் - யாகசேனன் அரசனானான்; (எ-று.)- சிறுவனென்றது, அவனது இளமையோடு இழிகுணத்தையும் உணர்த்தும். (314) 41. | தனத்திலாசையின்றித் தவமேதனமென்றெண்ணி வனத்திலுண்டிகொண்டே மகிழ்வுற்றொருசார்வைகிச் சனத்திலருளாலில்வாழ் தருமந்தவறாவண்ணம் இனத்தின்மிக்ககிருபற் கிளையாளிவளைவேட்டேன். |
(இ-ள்.) தனத்தில் ஆசை இன்றி - செல்வத்தினிடத்து ஆசை இல்லாமல், தவம்ஏ தனம் என்று எண்ணி - தவத்தையே செல்வமென்று நினைத்து, வனத்தில் உண்டி கொண்டே - காட்டிற்கிடைக்கிற உணவுகளை உட்கொண்டே, மகிழ்உற்று - திருப்தியடைந்து, ஒருசார் வைகி - (அக்காட்டில்) ஓரிடத்திலிருந்து, சனத்தில் அருளால் - சனங்களிடத்தில் நிகழ்ந்த கருணையினால், இல் வாழ் தருமம் தவறா வண்ணம் - இல்லறவாழ்க்கை தவறாதபடி, |