இனத்தில் மிக்க கிருபற்கு இளையாள் இவளை வேட்டேன் - குலத்திற் சிறந்த கிருபனது தங்கையாகிய இவளை விவாகஞ் செய்து கொண்டேன்; (எ-று.) பிரமசாரி வாநப்பிரஸ்தன் ஸந்யாஸீ என்ற மற்றை மூன்று ஆச்சிரமத்தார்க்கும், கதியற்றவர் ஏழைகள் முதலானவர்களுக்கும் உணவு இடம் முதலிய வேண்டுவன கொடுத்து உதவுதற்கு உரிமை கிருகத்தாச்சிரமத்தினர்க்கே இருக்கின்றமையைக்கருதி அதனிமித்தம் இல்வாழ்க்கை பூண்டேனென்பான், 'சனத்திலருளால்' என்றான். "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல், மற்றையவர்கள் தவம்" என்ற குறளை நோக்குக. (315) 42. | கந்தமகவையீன்ற காளகண்டனருளால் வந்தமகவிம்மகவும் வறுமைவளரவளர்ந்தான் இந்தமகவுமையாண் டிளமையறியாதெனலால் தந்தமகவைநோக்கித் தாயும்பெருகத்தளர்ந்தாள். |
(இ-ள்.) இ மகவுஉம் - இந்தக் குழந்தையும், கந்தன் மகவை ஈன்ற காள கண்டன் அருளால் வந்த மகவு - முருகக்கடவுளாகிய மைந்தனைப் பெற்ற சிவபிரானது கருணையினாற் பிறந்த குழந்தை: இந்த மகவுஉம் - இக்குமாரனும், வறுமை வளர - தரித்திரம் அதிகப்பட, ஐ ஆண்டு - ஐந்து பிராயமளவும், இளமை அறியாது - இளமைப் பருவத்துக்கு உரிய யாதோரின்பத்தையும் அறியாமலே, வளர்ந்தான்-: எனலால் - இக்காரணத்தால், தந்த மகவை நோக்கி தாய் உம் பெருக தளர்ந்தாள்- (தான்) வளர்த்துவந்த பிள்ளையைப் பார்த்துத் தாயும்மிகவருந்தினாள்;(எ-று.) குழந்தைப்பருவத்துக்கு இன்றியமையாத பசுவின்பால் முதலிய. நுகர்ச்சியொன்றையும் அறியானென்பதுபட 'இளமையறியாது வளர்ந்தான்' என்றது. இளமை - அப்பருவத்து நுகர்ச்சிக்குப் பண்பாகுபெயர். காளகண்டன் - வடசொல்: (விடமுண்டதனாற்) கறுத்த கழுத்தையுடையவன். மூன்றாமடியில் 'இன்மையறியாது' என்றும் பாடம். துரோணன் மனைவியாகிய கிருபியின் கட்டழகைக்கேட்டும் ஒரு கால் கண்டும் அவளிடம் மிகக்காமுற்ற சிவபிரானது அருளினால் ஒரு குதிரையினிடமாக ஒரு ஆண்குழந்தை தோன்றிற்றென்றும், அதன்பெயர் அசுவத்தாமனென்றும் அறிக. துரோணனுக்குக் கிருபியினிடம் சிவாமிசமாகப்பிறந்த பிள்ளை அசுவத்தாமனென்றும் நூற்கொள்கை உண்டு. கந்தன் + மகவு= கந்தமகவு: "சிலவிகாரமாமுயர்திணை." கந்தன் - ஸ்கந்தனென்ற வடசொல்லின் திரிபு: இதற்கு - (பகைக்கடலை) வற்றச்செய்பவ னென்றும், உமாதேவியினாற் சேர்க்கப்பட்டவனென்றும், பிறவாறும் பொருள் உரைக்கப்படும்: சூரபதுமன் முதலிய அசுரர்கள் செய்துவந்த உபத்திரவங்களைப் பொறுக்க மாட்டாத தேவர்கள் முதலியோரது வேண்டுகோளால் அவ்வசுரர்களை அழிக்கும்பொருட்டுச் சிவபிரான் தனது அமிசமாகக் குமாரக்கடவுளைத் தோற்றுவித்தன னென அறிக. தருதல் -வளர்த்தற்பொருளதாயிற்று. (316) |