எனை - ஏனை யென்னும் இடைச்சொல்லின் குறுக்கல். கீழ்க்கவியில் வில் கூறியதனால், மற்றையபடைக்கலங்களைக் குறித்தற்கு 'ஏனை' என்றார். 'மாடநிலைதோ' றவையிருந்தவர் ' என்ற பாடத்துக்கு - மாடங்களினிடந்தோறும் கூடியிருந்த பெரியோர்களென்க. மனித்தர் = மநுஜர்: வடசொல். தெற்றி - சித்திரகூடமுமாம். (331) 58.- துரியோதனனும் வீமனும் கதைப்போர் தொடங்குதல். ஒத்தவலியோர்வலியுமொத்ததிறலோர்திறலு மொத்தவினையோர் வினையும்வன், சித்தமனன்மூளமுகவம்புயமலர்ந்தரசன்மகனுமனிலன் சிறுவனும், கைத்தலமமர்ந்தகதைகொண்டெதிர்நடந்தனர்களிப்புடனி ரண்டுதறுகண், மத்தகயம்வேரொடுமராமரமெடுத்தமர்மலைந்தனைய கோலமறவோர். |
(இ-ள்.) வலிஉம் - உடல்வலிமையைக் குறித்து நோக்கினாலும், ஒத்த வலியோர் - (ஒருவர்க்கொருவர்) சமமான தேகபலமுடையவர்களும், திறல்உம் - பராக்கிரமத்தை யுடையவர்களும், வினைஉம் - படைக்கலத் தொழில்வகைகளைக் குறித்து நோக்கினாலும், ஒத்த திறலோர்-சமமான பராக்கிரமத்தை யுடையவர்களும், வினைஉம்- படைக்கலத் தொழில்வகைகளைக் குறித்து நோக்கினாலும், ஒத்த வினையோர் - சமமான தொழில்திறமுடையவர்களும் ஆகிய, அரசன் மகன்உம் அனிலன் சிறுவன்உம் - திருதராட்டிர மகாராசனது புத்திரனான துரியோதனனும் வாயுகுமாரனான வீமனும், தறுகண் மத்த கயம் இரண்டு - அஞ்சாமையையுடைய மதம்பிடித்த யானைகள் இரண்டு, களிப்புடன் - அம்மதக்களிப்புடனே, மராமரம் வேரொடு எடுத்து - மராமரங்களை வேருடனே (துதிக்கையாற்) பெயர்த்து எடுத்துக்கொண்டு, அமர் மலைந்து அனைய - (ஒன்றோடொன்று) போர்செய்தாற்போன்ற, கோலம் மறவோர் - காட்சியையும் யுத்தாவேசத்தையுமுடையவர்களாய்,- வல் சித்தம் அனல் மூள - வலிய தங்கள் மனத்திலே கோபாக்கினி எழுந்துபொங்க, முக அம்புயம் மலர்ந்து - (தங்கள்) முகமாகிய தாமரைமலர்கள் மலரப்பெற்று, கைத்தலம் அமர்ந்தகதைகொண்டு எதிர்நடந்தனர் - கைகளிற் பொருந்திய கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு (ஒருவரையொருவர்) எதிர்த்துச் சென்றார்கள்; இருவரும் பதினாயிரம் யானைபலம்கொண்டவராதலால், 'ஒத்த வலியோர்' எனப்பட்டனர்: (துரியோதனன், வீமன், கீசகன், சராசந்தன், பகாசுரன் என்ற இவ்வைவரும் சமபலமுடையவரென்பதை அறிக.) கதாயுதத்தைக்கொண்டு நிற்கும் இவ்விருவர்க்கு, ஸாலவ்ருட்சத்தைக்கொண்டு நிற்கும் மதக்களிறுகள்உவமை. (332) 59.- அவர்கள் போரில்மிகுதலை அசுவத்தாமன் விலக்குதல். தண்டின்முனையொன்றினுடனொன்றுருமெறிந்தனையதன்மையொ டுடற்றவிலகு, மண்டலவிதங்களும்வியப்புறநடந்தபின் மறத்தொடு செயிர்த்துவயிரம், கொண்டிருவரும்பொருதலுன்னுபொழுதத்தவர்குறிப்பினையிமைப் பளவையிற், கண்டுகுருவின் சிறுவன் வன்பொடுவிலக்கினன்மெய் கல்விகரைகண்டபெரியோன். |
|