பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்185

யுடைய அரசாட்சி பூண்டவர்களுக்கும், உண்மை ஆனகோது இல் ஞானசரிதர்
ஆம் நல் தவர்க்குஉம் - உண்மையானகுற்றமற்ற தத்துவ ஞானத்தையும்
(அதற்குஏற்ற) ஒழுக்கத்தையும் உடையவர்களாகிய நல்ல தவஞ்செய்யும்
முனிவர்களுக்கும், ஒன்று சாதி - சாதி ஒன்றே;  நன்மை தீமை இல்லை -
(அதில்) உயர்வு தாழ்வு என்னும் பகுப்பு இல்லை; (எ-று.)- ஆல் - ஈற்றசை;
தேற்றமுமாம்.

     எந்தச்சாதியிற்பிறந்திருப்பினும் கற்றவர் முதலியோர் மேன்மைபெறக்
கல்லாதவர் முதலியோர் கீழ்மையுறுவராதலால் இவர்கட்குச் சாதிவேற்றுமை
குறிக்கத்தக்க தன்றென்பது இதன் கருத்து.                         (342)

69.-இதுவும் அது: பிறப்பினால் இழிவின்மைக்குச் சில உதாரணம்.

அரிபிறந்ததன்றுதூணி லரனும்வேயிலாயினான்
பரவையுண்டமுனியுமிப் பரத்துவாசன்மைந்தனும்
ஒருவயின்கண்முன்பிறந்த தொண்சரத்தினல்லவோ
அரியவென்றிமுருகவேளு மடிகளும்பிறந்ததே.

     (இ-ள்.) அன்று - முற்காலத்தில், அரி பிறந்தது - திருமால் அவதரித்தது,
தூணில் - தூணினிடத்தேயாம்; அரன்உம் - சிவபிரானும், வேயில் ஆயினான் -
மூங்கிலில் தோன்றினான்; பரவை உண்ட முனிஉம் - கடலைப்பருகிய
அகத்தியமகாமுனிவனும், இ பரத்துவாசன் மைந்தன்உம் - பரத்துவாசமுனிவனது
குமாரனான இந்தத்துரோணாசாரியனும், முன் பிறந்தது - முன்பு தோன்றினது,
ஒருவயின்கண் - (கும்பமாகிய) ஓரிடத்திலேயாம்; அரிய வென்றி முருகவேள்உம்
- (பிறரால்வெல்லுதற்கு)அரிய வெற்றியையுடைய முருகக்கடவுளும், அடிகள்உம்
- தேவரீரும், பிறந்தது - தோன்றினது, ஒள் சரத்தின் அல்லஓ - விளங்குகின்ற
நாணலிலே யன்றோ?

     மேன்மையுடைய திருமால் முதலியோர் பிறந்த இடங்காரணமாக
இழிக்கப்படாமை போலவே, இக்கர்ணனும் சாதிபற்றிஇழித்தற்கு உரியனல்ல
னென்க. திருமால் தூணில்தோன்றினது, நரசிங்காவதாரகாலத்தில்.

     சிவபிரான் மூங்கிலில் தோன்றிய கதை:- எல்லாம் அழியும்
பிரளயகாலத்தில் தமக்கும் அழிவுநேரிடுமென்று கவலையுற்று வேதங்கள் பலநாள்
சிவனைக்குறித்துத் தவம்புரிந்து அப்பிரானது தரிசனத்தைப்பெற்று 'பிரளய
காலத்தில் நீ தாமிரசபையில் நின்று செய்யுந் திருநடனத்தை நாங்கள்
தரிசிக்கவேண்டும்; பிரளயத்திலும் அழிவில்லாத அத்தலத்தில் நாங்கள்
மூங்கிலாய் நின்று எப்போதும் நிழலைச் செய்ய, நீ எங்களிடம்
முத்தாய்த்தோன்றி எங்களுக்குப் பிள்ளையுமாகவேண்டும்' என்று வரங்கேட்க,
சிவபிரான் அதற்கு இணங்கித் திருநெல்வேலியில் வேணுவனத்தில் மூங்கில்
முத்தாகி அம்மூங்கிலின்கீழ் எழுந்தருளியிருக்கின்றன னென்பதாம். இதனால்,
அத்தலத்துச் சிவபிரானுக்கு வேணுவன நாதனென்று திருநாமம்.

     ஏககாலத்தில் ஊர்வசியைக்கண்டு அவளிடங் காதல் கொண்ட மித்திரன்
வருணன் என்னுந் தேவர் இருவரது விருப்