பத்தால் அருகிலிருந்ததொரு குடத்தினின்று பிறந்தவர் அகஸ்தியரென அறிக. (அதனால், கும்பசம்பவர், கலசயோநி என்றபெயர்கள் அவர்க்கு வழங்கும்.) துரோணர் துரோணகும்பத்திற்பிறந்து அது காரணமாகப் பெயர்பெற்றமை, கீழ்க்கூறப்பட்டது. (கும்பசம்பவர், கலசயோநி என்று துரோணரை வழங்குதலும் உண்டு.) தேவர்கள் வேண்டியபடி சூரபதுமன் முதலிய கொடிய அசுரர்களை அழித்தற்பொருட்டு ஒரு குமாரனை யுண்டாக்கக்கருதிய சிவபிரானது திருமேனியினின்று வெளிப்பட்ட திவ்வியதேஜசை அக்கினியும் வாயுவும் கங்கையிற் செலுத்த, அதனது ஒரு மடுவாய் நாணற்காட்டை யடுத்துள்ள சரவணப்பொய்கையினின்று சுப்பிரமணியமூர்த்தி தோன்றினனென வரலாறு அறிக. கிருபர் நாணற்கட்டையிற் பிறந்தமை, முன்கூறப்பட்டது. நாணலிற் பிறந்ததனால், முருகனுக்கும் கிருபனுக்கும் 'சரஜந்மா ' என்று பெயர். உயர்ந்தோரை 'அடிகள்' என்றல், மரபு. அகத்தியர் கடல் குடித்த கதை:- இந்திரன் முதலிய தேவர்கள் தம் பகைவனாகிய விருத்திராசுரன் மற்றும்பல அசுரர்களுடனே கடலிற்புக்கு ஒளித்துக்கொண்டபோது, அகத்தியமகாமுனிவனையடைந்து பிரார்த்திக்க, அவன் அக்கடல்நீரைத் தனது ஒரு கையால் முற்றும் முகந்து பருகியருளி, உடனே ஒளித்திருந்த அவ்வசுரனை இந்திரன் கொன்றபின், தேவர்கள் வேண்டுகோளின்படி நீர்முழுவதையும் உமிழ்ந்தன னென்பதாம். (343) 70.-துரியோதனன் கர்ணனை அங்கதேசத்துக்கு அரசனாக்குதல். என்றுநல்லவுரையெடுத் தியம்பியேனையிழிவினோடு ஒன்றிநின்றவாடகத்தை யோடவைக்குமாறுபோல் அன்றுசூதன்மதலைதன்னை யங்கராசனாக்கினான் மின்றயங்குமுடிகவித்து வேந்தெலாம்வியக்கவே. |
(இ-ள்.) என்று நல்ல உரை எடுத்து இயம்பி - என்று இவ்வாறு நல்ல வார்த்தைகளை எடுத்துச்சொல்லி,- (துரியோதனன்),- ஏனை இழிவினோடு ஒன்றி நின்ற ஆடகத்தை ஓட வைக்கும் ஆறு போல் - மற்றையிழிந்தலோகம் முதலியவற்றோடு கலந்து நின்ற பொன்னைப் புடமிட்டுச் சுத்தமாக்குந் தன்மைபோல,- அன்று- அப்பொழுது, சூதன் மதலை தன்னை - தேர்ப்பாகன் மகனான கர்ணனை,- வேந்து எலாம் வியக்க- அரசர்களெல்லாருங் கொண்டாடும்படி, மின் தயங்குமுடி கவித்து - ஒளிவிளங்குகின்ற கிரீடத்தைச் சூட்டி, அங்கராசன் - அங்கதேசாபதியாக, ஆக்கினான்-; (எ-று.) 'அருச்சுனன் அரசனுடனேயே போர்செய்தற்கு உரியா னென்று கருதுகின்றதனால், அதன்பொருட்டு, கர்ணனை இக்கணத்திலேயே அரசனாக்குகிறேன்' என்று சொல்லித் துரியோதனன், மாசுநீங்கித் தூயதாய் ஒளிமிகும்படி பொன்னைப்புடமிடுதல்போல, தேர்ப்பாகன் மகனான கர்ணனை அவ்விழிவு தீர்ந்து பெருமையுறுமாறு முடிசூட்டினன். நல்லவுரை - கர்ணனுக்கும் தனக்கும் அனுகூலமான நீதிவார்த்தை. சிவபிரானால் எரிக்கப்பட்ட மன்மதனது அங்கம் விழுந்த இடம், அங்கதேசமாயிற்று. இழிவு ஆகுபெயர். |