பக்கம் எண் :

188பாரதம்ஆதி பருவம்

     குபேரன் முன்னொருகாலத்தில் கைலாசகிரியின் ஒருசாரலிலிருந்து
பெருந்தவஞ்செய்து சிவதரிசனம்பெற்று அப்பிரானருளால் அவனுக்கு
நண்பனாயினன். கொடையாளியாகுங்கர்ணனுக்கு - தனதனாகியகுபேரனும்,
கர்ணனுக்கு அரசு அளித்த ராசராசனான துரியோதனனுக்கு - குபேரனுக்கு
வரமளித்த தலைவனான சிவபிரானும் உவமை. முறைநிரனிறைப்பொருள்கோள்.
                                                              (346)

73.-கௌரவ பாண்டவர்களது திறங்கண்டு துரோணன்
மகிழ்தல்.

ஆனகாலையெண்ணுகின்ற வாயுதங்கள்யாவையும்
யானைவாசியிரதமான யானமுள்ளயாவையும்
சேனையோடுதெவ்வரைச்செகுக்கவல்லவீரமும்
மானவீரர்வல்லரென்று மறைவலாளன்மகிழ்வுறா.

இதுவும், மூன்று கவியும் - குளகம்.

     (இ-ள்.) ஆனகாலை - (இவையெல்லாம்)நிகழ்ந்த அப்பொழுது,-
மறைவலாளன் - வேதம்வல்லவனான துரோணாசாரியன்,- எண்ணுகின்ற
ஆயுதங்கள் யாவைஉம் - எண்ணப்படுகிற படைக்கலங்களெல்லாவற்றிலும்,
யானை வாசி இரதம் ஆன யானம் உள்ள யாவைஉம் - யானை குதிரை தேர்
ஆகிய வாகனங்களாயுள்ளவை எல்லாவற்றிலும், சேனையோடு தெவ்வரை
செகுக்கவல்ல வீரம் உம் - சேனையுடனே பகைவர்களை யழிக்கவல்ல
வீரத்திலும், மானம் வீரர் - மானத்தையுடைய இந்தவீரர்கள், வல்லவர் -
தேர்ந்தவர், என்று-, மகிழ்வு உறா- மகிழ்ச்சியடைந்து,- (எ-று)- 'இயம்ப' (75) என்ற
எச்சத்தைக் கொள்ளும்.

     ஆயுதங்கள்என்றது - அவற்றை உபயோகித்தலையும், யான மென்றது -
அவற்றைச் செலுத்துதலையுங்குறிக்கும்: இலக்கணை.                (347)

74.-துரோணன் அவர்களிடம் தனக்குஉரிய குருதட்சிணை
இன்னதெனல்.

வம்மினாதிகுருகுலந் தழைக்கவந்தமைந்தர்காள்
தம்மினாளையேயெமக் களிக்கநின்றதக்கிணை
எம்மினானொருத்தன்வேறி யாகசேனனென்றுளான்
நும்மினாடியவனையிம்பர் நோதல்செய்துகொணர்மினே.

     (இ-ள்.) ஆதி குருகுலம் தழைக்கவந்த மைந்தர்காள்- முதன்மை பெற்ற
குருகுலம் செழிப்படையும்படி வந்துதோன்றிய குமாரர்களே!-வம்மின் -
வாருங்கள்: எமக்கு அளிக்க நின்ற தக்கிணை - எமக்கு (நீங்கள்)
கொடுக்கும்படியுள்ள குருதட்சிணையை, நாளைஏ தம்மின்- நாளைக்கே
தாருங்கள்: (அத்தக்கிணை), வேறு- வேறு வகைத்து; (அது என்னவெனின்),-
யாகசேனன் என்று எம் இனான் ஒருத்தன் உளான் - யாகசேனனென்று
எம்பகைவனொருவன் இருக்கிறான்; அவனை-, நும்மில் நாடி - உங்களுள்
(யாவரேனும்) சென்று, நோதல் செய்து - (கொல்லாமல்) வருத்தி [போரில்
உயிருடனே தேரோடு பிணித்து], இம்பர் கொணர்மின் - இவ்விடத்திற்குக்
கொண்டுவாருங்கள்: (இவ்வளவே); (எ -று.)- 'என்றுஇயம்ப' என அடுத்த
கவியோடு தொடரும்.