79.-துரியோதனாதியர் பின்னிட அருச்சுனன்துருபதனை அகப்படுத்தல். தூறுகொண்டுகணைபொழிந்து சோமகேசர்பொருதலால் நூறுகொண்டகுமரர்தங்க ணகரிமீளநோக்கினார் மாறுகொண்டுவிசயன்வீசு வண்ணவாளிவலையினால் வீறுகொண்டெதிர்ந்தமன் விலங்கரீடுபட்டதே. |
(இ-ள்.) சோமக ஈசர் - சோமக குலத் தலைவர்கள், தூறு கொண்டு - கூட்டமாகத் திரண்டு, கணை பொழிந்து - அம்புமழையைச் சொரிந்து, பொருதலால் - போர்செய்ததனால்,- நூறு கொண்ட குமரர் - நூறு என்னும் எண்ணைக் கொண்ட குருகுல குமாரர்களான துரியோதனாதியர், தங்கள் நகரி மீள நோக்கினார் - (தோற்று முதுகுகொடுத்துத்) தங்கள் நகரத்துக்குத் திரும்பிப் போனார்கள்; மாறு கொண்டு விசயன் வீசு - பகைமைகொண்டு அருச்சுனன் வீசிய, வண்ணம்வாளி வலையினால் - மேன்மைபெற்ற அம்புகளாகிய வலையினால், வீறுகொண்டு எதிர்ந்த மன் விலங்கர் - மிக்கபெருமிதங்கொண்டு வந்து எதிர்த்த யாகசேனராசனாகிய சிங்கம், ஈடுபட்டது - அகப்பட்டுக்கொண்டது; (எ-று.) எண்ணில் மிக்கிருப்பினும் ஆற்றலில் மிக்கிலர் என்ற இகழ்ச்சி விளங்க, 'நூறுகொண்டகுமரர் தங்கள்நகரி மீள நோக்கினார்' என்றார். ஈடுபட்டது என்பதற்கு - வலியழிந்தது என்ற பொருளும் உண்டு. வாளிவலையினால் மன்விலங்கர் ஈடுபட்டது - உருவகவணி. விலங்கு - விலங்கர் என, மென்றொடர்க் குற்றியலுகரத்துக்கு 'அர்' வந்தது. (353) 80.-அருச்சுனன் யாகசேனனைக் கட்டிக் குருவின்முன் கொணர்தல். தகப்படுஞ்சராசனத் தனஞ்சயன்கைவாள்வெரீஇ அகப்படுந்தராதிபன்ற னற்றவில்லினாணினான் மிகப்படுந்தடங்கொடேர் மிசைப்பிணித்துவிசையுடன் நகப்படுஞ்செயற்கைசெய்து குருவின்முன்னர்நணுகினான். |
(இ-ள்.) தக படும் சராசனம் - தகுதியாகப் பொருந்திய [பெருமைபொருந்திய] வில்லையுடைய, தனஞ்சயன் - அருச்சுனன்,- கை வாள் வெரீஇ - (தனது) கையிற்கொண்ட படைக்கு அஞ்சி, அகப்படும் - அகப்பட்டுக்கொண்ட, தரா அதிபன் தன் - யாகசேனராசனது, அற்ற வில்லின் நாணினால் - (தனது அம்புகளால்) துணிபட்ட வில்லின் நாணியைக் கொண்டே, மிக படும் தட கொள் தேர்மிசை பிணித்து - மிகுதியாகப்பொருந்திய பெருமையைக் கொண்ட(தனது) தேரிலே கட்டி, நகப்படும் செயற்கை செய்து- (பலராலும் அவமதித்துச்) சிரிக்கப்படுஞ் செய்கையைச் செய்து, விசையுடன் - வேகத்தோடு, குருவின் முன்னர் நணுகினான் - துரோணன் முன்னிலையில் வந்தான்; (எ -று.) அவன்கையில்நாணைக்கொண்டே அவனைக் கட்டின னென, அருச்சுனனது திறத்தை எடுத்துக் கூறினார். வாள் - இங்கு ஆயுதமென்றபொருளது. இனி, 'தராதிபன்றனைத் தன்வில்லினாணினால்' என்றும் பாடமுண்டு. (354) |