81.-துரோணன் யாகசேனனைப் பரிகசித்தல். முறுவல்கொண்டுகண்டசாப முனியுநாணவெம்மைநீ உறுவதொன்றுமுணர்கலா துரைத்தபுன்சொலறிதியே மறுவிலந்தணாளன்யானு மன்னனீயும்வாசவன் சிறுவன்வென்றுனைப்பிணித்த சிறுமையென்னபெருமையோ. |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) கண்ட சாபம் முனிஉம் - (அருச்சுனன் துருபதனைக் கட்டிக்கொணர்ந்ததைக்) கண்ட வில்லாசிரியனான துரோணாசாரியனும், முறுவல் கொண்டு - இகழ்ச்சிச்சிரிப்புக் கொண்டு, (அவனை நோக்கி), 'நீ-, உறுவது ஒன்றுஉம் உணர்கலாது - பின்புநேரும் பயனைச் சிறிதும் அறியாமல், நாண எம்மை உரைத்த - வெட்கப்படும்படி எம்மை அவமதித்துப்பேசிய, புல் சொல் - இழிமொழியை, அறிதிஏ - அறிவாயன்றோ? யான்உம் மறு இல் அந்தணாளன்- நானும் குற்றமற்ற பிராமணன்: நீ உம் மன்னன் - நீயும் க்ஷத்திரியன்: வாசவன் சிறுவன் வென்று உனை பிணித்த சிறுமை - இந்திரனது மகன்[அருச்சுனன்] உன்னைச் சயித்துக் கட்டினஎளிமை, என்ன பெருமைஓ- (உனக்கு) என்னபெருமையோ! (எ-று.)- 'முறுவல் கொண்டு' என்றது, அடுத்த கவியில் வரும் 'என்ன உயிரும் வாழ்வும் உதவினான்' என்பதைக் கொண்டு முடியும். 'மறுவிலந்தணாளன் யானும் மன்னன்நீயும்' என்றது - க்ஷத்திரியனென்று பெருமைபாராட்டிய உன்னை அந்தணனென்று உன்னால் இகழப்பட்ட யான் மாணாக்கனைக்கொண்டு வென்று கவர்ந்து சபதத்தை நிறைவேற்றிக் குறைவற்றவனான திறத்தைப் பார் என்று அவன்மனத்தில் உறைக்க ஏசியவாறாம். தனக்கு அடைமொழி கொடுத்துக்கூறி, அவனுக்கு 'மன்னன் நீயும்' என்று வாளாகூறினதில், நீ சொன்ன வாய்மைதவறி இங்ஙனந் தோல்வியுமுற்று க்ஷத்திரியாதமனாயினை யென்ற இகழ்ச்சிதோன்றும். (356) 82.-துரோணன் துருபதனுக்கு உயிர்வாழ்க்கையோடு பாதியரசும்அளித்தல். அன்றெ னக்கு நீயி சைந்த வவனி பாதி யமையுமற்று இன்று னக்கு நின்ற பாதி யான்வ ரைந்து தருகுவன் குன்றெ னக்கு விந்தி லங்கு கொற்ற வாகு வீரனே உன்ற னக்கு வேண்டு மென்ன வுயிரும் வாழ்வு முதவினான். |
(இ-ள்.) 'குன்று என குவிந்து இலங்கு - மலைபோலந் திரண்டு விளங்குகிற, கொற்றம் வாகு - வெற்றிபொருந்திய தோள்களையுடைய, வீரனே-! நீ அன்று எனக்கு இசைந்த - நீ முன்பு எனக்குத் தருவதாக உடன்பட்ட, அவனி பாதி - பாதியிராச்சியம், அமையும்- (எனக்குப்) போதும்: மற்று நின்ற பாதி - (எஞ்சிநின்ற) மற்றொரு பாதி யிராச்சியத்தை, இன்று-, உனக்கு-, யான்-, வரைந்து தருகுவன் - பங்கிட்டுக் கொடுப்பேன்; (அன்றியும்), உயிர் உம் வாழ்வுஉம் உன்தனக்கு வேண்டும் - உன் உயிரும் வாழ்க்கையும் உனக்கு இருக்கவேண்டும்,' என்ன - என்றுசொல்லி, உதவினான் - (அம்மூன்றையும் துரோணன் அவனுக்குக்) கொடுத்தான்; |