89.-நாடெங்கும் விழாக்கொண்டாடுதலும், திசைவிளங்குதலும். சங்கச்சங்கமிகமுழங்கச் சாந்தும்புழுகுமெறிந்தார்த்துத் துங்கக்கொடியுந்தோரணமுந் தொடையும்பரப்பிச்சோமகனாடு அங்கட்சயந்தனவதரித்த வமராவதிபோலார்வமெழத் திங்கட்குழவியுற்பவித்த திசைபோன்றனவெண்டிசையெல்லாம். |
(இ-ள்.) சோமகன் நாடு - சோமககுலத்தானான யாகசேனனது பாஞ்சாலதேசம்,- சங்கம் சங்கம் மிக முழங்க - சங்குக்கூட்டங்கள் மிகுதியாகஒலிக்க, சாந்துஉம் புழுகுஉம் எறிந்து ஆர்த்து - சந்தனக் குழம்பையும் புழுகெண்ணெயையும் (ஒருவர்மேல் ஒருவர்) வீசி ஆரவாரித்து, துங்கம் கொடிஉம் தோரணம்உம் தொடைஉம் பரப்பி - உயர்ந்த துவசங்களையும் தோரணங்களையும் மாலைகளையும் மிகுதியாக அமைத்து (அலங்கரித்து), அம் கண் சயந்தன் அவதரித்த அமராவதிபோல் - அழகிய கண்களையுடைய சயந்தன் [தேவேந்திர குமாரன்] அவதரிக்கப்பெற்ற அமராவதிநகரம்போல, ஆர்வம் எழ - அன்பு மிக,- எண் திசை எல்லாம் - எட்டும் திக்குகள்முழுவதும், திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன - இளம்பிறை உதிக்கப் பெற்ற திக்குக்கள்போலத் தாமாக விளங்கின; (எ -று.) இந்திரகுமரன் பிறந்தபொழுது அமராவதிநகரத்தில் தேவர்கள் களிப்புற்று விழாக்கொண்டாடியதுபோல, துருபதகுமாரன் தோன்றியபொழுது பாஞ்சாலநகரத்துச்சனங்கள் மகிழ்ச்சிமிக்கு விழாக் கொண்டாடினரென்பது மூன்றாமடியின்கருத்து. சாந்தும் புழுகும் போல்வனவற்றை மகிழ்ச்சிக்களிப்பால் ஒருவர்மேல் ஒருவர் தூவி உத்ஸவங் கொண்டாடுதல் இயல்பு. சங்கம் என்பது - சங்கைக் குறிக்கும்போது சங்கமென்றவடசொல் திரிந்ததும், கூட்டத்தைக் குறிக்கும்போது ஸங்க மென்ற வடசொல் திரிந்ததுமாம். (363) 90.-பின்பு திரௌபதி தோன்றுதல். பின்னுங்கடவுளுபயாசன் பெருந்தீப்புறத்துச்சுருவையினால் மன்னுங்கடலாரமுதென்ன வழங்குசுருதியவிநலத்தான் மின்னுங்கொடியுநிகர்மருங்குல் வேய்த்தோண்முல்லைவெண்முறுவல் பொன்னும்பிறந்தாள் கோகனகப் பூமீதெழுந்தபொன்போல்வாள். |
(இ-ள்.) பின்னும் - அதன்பின்பும், கடவுள் உபயாசன் - தெய்வத் தன்மையையுடைய உபயாசனென்னும் அம்முனிவன், பெருந் தீப்புறத்து- பெரிய யாகாக்கினியிலே, சுருவையினால் - சுருவை யென்னும் ஓமத்துடுப்புக்கருவியைக்கொண்டு, மன்னும் கடல் ஆர் அமுது என்ன வழங்கு - பெருமைபொருந்திய பாற்கடலில் தோன்றிய அருமையான அமிருதம்போல ஆகுதிசெய்த [மிகஇனியதேவருணவாகிய], சுருதி அவி - வேதமுறைமை தவறாத அவிர்ப்பாகத்தினது, நலத்தால் - நற்பயனால்,- மின்உம் கொடிஉம் நிகர் மருங்குல் - மின்னலையும் பூங்கொடியையும் போன்ற இடையையும், வேய் தோள் - மூங்கில் போன்ற தோள்களையும், முல்லை வெள் முறுவல் - முல்லையரும்பு போன்ற வெண்மையான பற்களையுமுடைய, பொன்உம் - பொன்போல் |