92.- மகனையும் மகளையும்பெற்றதனால் துருபதன் மனமகிழ்தல். முன்றோன்றியதன்குலமுதலான் முரட்போர்முனிக்குமுடிவுமவன் பிற்றோற்றியவக்கன்னிகையால் விசயன்றனக்குப்பெருநலமும் உற்றோர்ந்துள்ளமிகத்தருக்கி யுவந்தாங்கமைந்தானுயர்மகத்தால் பெற்றோன்பெற்றபேறுமகப் பெற்றார்தம்மிற்பெற்றார்யார். |
(இ-ள்.) உயர் மகத்தால் பெற்றோன் - சிறந்த யாகஞ்செய்ததனால் (இப்படிப்பட்ட பிள்ளைகளைப்) பெற்ற யாகசேனன்,- முன் தோன்றிய தன்குலம்முதலால் - முதலிற்பிறந்த தனது குமாரனால், முரண் போர் முனிக்கு முடிவுஉம் - வலிய போரையுடைய துரோணாசாரியனுக்கு அழிவுஉண்டாதலையும், அவன் பின் தோன்றிய அ கன்னிகையால் -அவனுக்குப்பின்புபிறந்தஅப் பெண்ணால், விசயன் தனக்கு பெரு நலம்உம் -அருச்சுனனுக்குச் சிறந்த இன்பமுண்டாதலையும், உற்று ஓர்ந்து - (கருத்தில்)ஊன்றி ஆராய்ந்து, ஆங்கு - அதனால், உள்ளம் மிக தருக்கி - மனம்மிகக்களித்து, உவந்து அமைந்தான் - மகிழ்ந்துநிரம்பிநின்றான்[திருப்திபெற்றான்]: பெற்ற பேறு-(அவன்) பெற்ற பாக்கியத்தை,மக பெற்றார் தம்மில் பெற்றார் யார் - பிள்ளைகளைப் பெற்றவர்களுள்அடைந்தவர் எவர்? துருபதன் தான் கருதியபடி பகைவெல்லுதற்கு மகனையும் மணம் முடித்தற்கு மகளையும் தகுதியாகப்பெற்றான் என்ற பொருளை, 'பெற்றபேறு மகப்பெற்றார் தம்மிற்பெற்றார் யார்' என்று விளக்கினார் (366) 93.-திட்டத்துய்மனுக்குத் துரோணன்வில்வித்தை முற்றக் கற்பித்தல். கரணமறுவற்றிலங்குதிறற் கலசோற்பவன்பாற்கனல்பயந்தோன் சரணமலர்தன்றலைக்கொண்டு தனுநூலெனக்குத்தருகென்றான் மரணமிவனாற்றனக்கென்ப துணர்ந்துங்குருவுமறாதளித்தான் அரணியிடத்திற்செறிந்தன்றோ வதனைச்செகுப்பதழலம்மா. |
(இ-ள்.) கனல் பயந்தோன் - அக்கினியிற் பெறப்பட்டவனான அக்குமாரன்,- கரணம் மறு அற்று இலங்கு - அந்தக்கரணமான மனத்தில் களங்கமில்லாது தூய்மையுடையவனாய் விளங்குகிற, திறல் - வல்லமையிற் சிறந்த, கலச உற்பவன்பால்-கலசத்தினின்று தோன்றியவனான துரோணாசாரியனிடத்தில் (சென்று), சரணம் மலர் தன் தலைக் கொண்டு- (அவனது) திருவடித் தாமரை மலர்களைத் தன் தலையின்மேற்கொண்டு [காலில் விழுந்து வணங்கி], எனக்கு தனுநூல் தருக என்றான் - 'எனக்கு வில்வித்தையைக் கற்பித்துக் கொடுப்பாயாக ' என்று வேண்டினான்; (வேண்ட,) குரு உம் - அந்தத் துரோணாசாரியனும், இவனால் தனக்கு மரணம் என்பது உணர்ந்துஉம் - இவனால் தனக்கு மரணம் நிகழுமென்பதை யறிந்தும், மறாது அளித்தான் - மறுக்காமல் (தனுர்வித்தையைக்) கற்பித்துக் கொடுத்தருளினான்; அழல் அரணியிடத்தில் செறிந்து அன்றுஓ அதனை செகுப்பது - நெருப்பு அரணிக்கட்டையினின்று பிறந்தன்றோ அதனை அழிப்பது! அம்மா - ஆச்சரியம்! (எ-று.) |