பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்201

இதுவும், அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) பூதி நலம் திகழ் - செல்வமும் மற்றைநன்மையும் விளங்கப்பெற்ற,
பூரு - பூருவென்னும் அரசனது, குலத்திற்கு - வமிசத்திற்கு, ஆதிபன் ஆகி -
தலைவனாய், அனங்கனை வென்றோன் - (பெண்ணாசையை ஒழித்ததனால்)
மன்மதனை வென்றவனான வீடுமன்,நுண் நூல் ஓதிய - நுட்பமாகச்
சாஸ்திரங்களைக் கற்றறிந்த, கேள்வி - நூற்கேள்விகளையுமுடைய, உதிட்டிரன் -
தருமபுத்திரன், நீதியினால்உம் நிறைந்தனன் - நீதியாலும் நிறைந்தவன், என்னா -
என்று எண்ணி,- (எ-று.)- 'அளித்தான்' என வருங் கவியில் முடியும்.

     பூதி - ஐசுவரியம்: வடசொல். தன் தந்தை மகிழ்ந்து அளித்த வரத்தின்படி
அரசாட்சிச்செல்வத்துக்குத் தலைமைபூண்டதனால், பூரு, 'பூதி நலந்திகழ் பூரு'
எனப்பட்டான்.

     இதுமுதல் பதினான்கு கவிகள் - பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று
மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.       (369)

96.- வீடுமன் தருமபுத்திரனுக்கு இளவரசு முடி சூட்டுதல்.

மைந்தருடன்செயல் வழுவறவெண்ணிக்
குந்திபயந்தருள் குரிசிலையிவனே
இந்தநிலக்கினி யிளவரசென்றாங்கு
அந்தண்மதிக்குடை முடியொடளித்தான்.

    (இ-ள்.) மைந்தருடன் - (உடன்பிறந்தவனது) மக்களாகிய திருதராட்டிரன்
விதுரன் என்பவர்களோடு, செயல் வழு அற எண்ணி - செய்யவேண்டிய
காரியத்தைத் தவறில்லாதபடி ஆலோசித்து,- குந்தி பயந்தருள் குரிசிலை - குந்தி
அன்போடுபெற்ற தலைப்பிள்ளையான தருமனை (நோக்கி), இவன் ஏ இனி இந்த
நிலக்கு இளவரசு என்று-, ஆங்கு - அப்பொழுது, அம் தண் மதி குடை
முடியொடு அளித்தான் - அழகியகுளிர்ந்த பூரணசந்திரன்போன்ற
வெண்கொற்றக்குடையையும் கிரீடத்தையும் கொடுத்தான்; (எ-று.)- ஆங்கு -
அசையுமாம். நிலக்கு என்றதில், அத்துச் சாரியை தொக்கது.           (370)

97.- தருமபுத்திரன் குடையும் முடியும் பெற்று விளங்குதல்.

சந்தனுவின்றிரு மரபுதயங்கச்
செந்திருமேவரு சிறுவனுமப்போது
இந்துவொடாதப னிருவருமன்பால்
வந்துதழீஇமெய் வயங்கினனொத்தான்.

     (இ-ள்.) சந்தனுவின் திரு மரபு தயங்க - சந்தனுவினது மேன்மையான
குலம் விளங்க, செந் திரு மேவரு - செந்நிறமுடைய
திருமகளோடு[இளவரசாட்சிச்செல்வத்தோடு] கூடிய, சிறுவன் உம் -
இராசகுமாரனான தருமபுத்திரனும்,- அப்போது-, இந்துவொடு ஆதபன்
இருவர்உம் அன்பால் வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் - (குடையையும்
முடியையும் பெற்றதனால்) சந்திரனும் சூரியனுமாகிய இருவராலும் அன்போடு
வந்து தழுவப் பெற்று மேனி விளங்குபவன் போன்றான்; (எ-று.)