105. | ஒருதிறனிந்நக ருறைதரினொன்றாது இருதிறன்மைந்தரு மிகலுவர்மேன்மேல் அருகணுகாவகை யகலவிருந்தால் மருவுறுநண்பு வளர்ந்திடுமென்றே. |
(இ-ள்.) இரு திறன் மைந்தர்உம் - (துரியோதனாதியரும் பாண்டவருமாகிய) இரண்டு வகைப் புதல்வர்களும், இ நகர் - இந்த நகரத்தில், ஒரு திறன் உறைதரின் - ஒருசேர வசித்தால், ஒன்றாது - ஒற்றுமைப்படாமல், மேல்மேல் இகலுவர் - மேலும்மேலும் பகைமை கொள்வார்கள்; அருகு அணுகாவகை - (ஒருதிறத்தாரோடு மற்றொரு திறத்தார்) சமீபத்தில் நெருங்காதபடி, அகல இருந்தால்- (இரு திறத்தாரும்) தூரத்தில் வெவ்வேறாக இருந்தால், மருவுறும் நண்பு வளர்ந்திடும் - மனங்கலக்கிற சினேகம் (அவர்கட்குள்) வளரும், என்று-,- (எ-று.)- 'கூறலும்' என வருங்கவியோடு தொடரும். 'சேரவிருப்பிற் செடியும்பகை', 'அகலவிருக்கிற் பகையும் உறவாம்' என்பன - பழமொழிகள். ஒருதிறலென்றும் பாடம். (379) 106.- அதற்கு அவர்கள் கூறும் விடை. இம்மொழிகூறலு மிருவருமெண்ணித் தெம்முறையாயினர் சிறுபருவத்தே எம்முரைகொள்கல ரினியவர்மதியேது அம்மதியேமதி யாகுவதென்றார். |
(இ-ள்.) இ மொழி கூறலும் - இந்த வார்த்தையை (த் திருதராட்டிரன்) சொன்னவளவிலே,- இருவர்உம்- (விதுரன் வீடுமன் என்ற) இரண்டுபேரும், எண்ணி - ஆலோசித்து,- 'சிறு பருவத்து ஏ தெவ் முறை ஆயினர் - (துரியோதனாதியர்கள்) இளம்பிராயத்திலேயே பகைத்தன்மை கொண்டிட்டார்கள்; எம் உரை கொள்கலர் - எங்கள் வார்த்தையைக்கேட்டு நடக்கமாட்டார்கள்: இனி - இனிமேல், அவர் மதி ஏது அ மதிஏ மதி ஆகுவது - அவர்களறிவு எதுவோ அந்த அறிவே (அவர்கட்கு உரிய) அறிவாவது', என்றார்-; (எ-று.) 'எம்முறைகேளார்' என்றபாடத்துக்கு - நாங்கள் சொல்லும் நீதி முறைகளைக் கேட்கமாட்டார்களென்று பொருளாம். தெவ் + முறை = தெம்முறை: "தெவ்வென்மொழியே தொழிற்பெயரற்றே, மவ்வரின் வஃகான் மவ்வுமாகும்."அவர்மதிஏது அம்மதியே ஆகுவது: (இதனை நீ) மதி என்றுமாம். (380) 107.-பின்பு திருதராட்டிரன் புரோசனனென்னும் மந்திரியை வருவித்தல். விதுரனும்வார்கழல் வீடுமனுந்தம் இதயநிகழ்ந்த தியம்பியபின்னர்ப் பொதுமையிலாத புரோசனனென்னும் மதியுடைமந்திரி வருகெனவந்தான். |
(இ-ள்.) விதுரனும்-, வார் கழல் - நீண்ட வீரக்கழலையுடைய வீடுமனும்-, தம் இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் - தங்கள் மனத்தில் தோன்றிய கருத்தைச்சொன்னபின்பு, (திருதராட்டிரன்),- பொதுமை இலாத புரோசனன் என்னும் மதி உடை மந் |