திரி - நடுவுநிலைமையில்லாத புரோசநனென்னும் பேருள்ள அறிவுடைய மந்திரியை, வருக என - வருவாயாகவென்று அழைக்க, வந்தான் - (அவன் அருகில்வந்து) சேர்ந்தான்; (எ -று.) பொதுமை - பகைவர் நண்பர் அயலார் என்னும் முத்திறத்தாரிடத்தும் தருமத்தின் வழுவாமல் ஒப்பநிற்கும் நிலைமை. 'மதியுடைமந்திரி' என்றது, வஞ்சனையாகத்தொழில் செய்தற்குஉரிய தந்திரங்களை அறிந்தவ னென்றவாறு. (381) 108.-திருதராட்டிர துரியோதனர் புரோசனனுடன் சதியாலோசனை செய்தல். வந்த வமைச்சனு மைந்தனு மற்றத் தந்தையு மங்கொரு தனிவயி னெய்திச் சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர் குந்தி மகாருயிர் கோடல் புரிந்தே. |
(இ-ள்.) வந்த அமைச்சன்உம் - வந்த மந்திரியான புரோசனனும், மைந்தன்உம் - இராசகுமாரனான துரியோதனனும், அ தந்தைஉம் - அவன் தந்தையான திருதராட்டிரனும், தீமைமனத்தோர் - கொடிய மனத்தை யுடையவர்களாய், அங்கு ஒரு தனிவயின் எய்தி - அவ்விடத்தில் [அரண்மனையில்] ஏகாந்தமான ஓரிடத்தை யடைந்து, குந்தி மகார் உயிர் கோடல்புரிந்து - பாண்டவர்களுடைய உயிரைக் கொள்ளவிரும்பி, சிந்தனைசெய்தனர்-; நகுலசகதேவர்களையும் சேர்த்து 'குந்திமகார்' என்றது குந்தி மாத்திரிக்குச் சொல்லிக்கொடுத்த மந்திரத்தின் பலத்தினாலேயே அவ்விருவரும் பிறந்தன ராதலாலும், குந்தியேவளர்த்து வந்தன ளாதலாலுமாம். மற்று - அசை. (382) வேறு. 109.-இரண்டுகவிகள் - குளகம். அவர்கள் செய்த துராலோசனைமுடிவு. ஆர ணாதிப ராரும் புகழ்வது நார ணாதியர் நண்ணுஞ் சிறப்பது தோர ணாதி துலங்குபொற் கோபுர வார ணாவத மாநக ரங்கணே. |
(இ-ள்.) ஆரண அதிபர் ஆர்உம் புகழ்வது - வேதங்கட்குத் தலைவர்களான அந்தணர்களெல்லோராலும் புகழப்படுவதும், நாரண ஆதியர் நண்ணும் சிறப்பது - திருமால் முதலிய தேவர்கள் எழுந்தருளிவாழும் மகிமையையுடையதும், தோரண ஆதி துலங்கு - தோரணம் முதலியவை விளங்கப்பெற்றதும், பொன் கோபுரம் - பொன்னாலாகிய கோபுரத்தையுடையதுமான, வாரணவதம் மாநகர் அங்கண்ஏ - வாரணவதமென்னும் பெரிய நகரத்தினிடத்திலே,- (எ-று.)- 'சென்றிருக்கத் திருவாய்மலர்க' என அடுத்தகவியோடு தொடரும். வாரணாவதம் - காசியென்ப. இதுமுதல் ஒன்பதுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (383) |