பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்207

110.சென்றிருக்கத் திருவாய்மலர்கென
ஒன்றுபட்டு மகன்றொழுதோதினான்
அன்றுதொட்டுயி ரன்னவமைச்சனால்
நன்றுபட்டதந் நன்னகரெங்குமே.

     (இ-ள்.) சென்று இருக்க - போய் வசித்திருக்கும்படி, திருவாய் மலர்க -
(பாண்டவர்க்கு) கட்டளை கூறியருள்வாயாக, என - என்று மகன் -
துரியோதனன், தொழுது ஓதினான் - (தன் தந்தையான திருதராட்டிரனை)
வணங்கிச் சொன்னான்; ஒன்றுபட்டு - (அதற்கு அவன்) உடன்பட,
அன்றுதொட்டு - அன்றைத்தினம்முதல், அ நல் நகர் எங்குஉம் - சிறந்த அந்த
வாரணாவதநகரமுழுவதும், உயிர் அன்ன அமைச்சனால் - (திருதராட்டிரனுக்கும்
துரியோதனனுக்கும்) உயிர் போன்ற மந்திரியான அப்புரோசனனால்,
நன்றுபட்டது-நன்றாகப் புதுப்பிக்கப்பட்டது; (எ-று.)                (384)

111.-வாரணாவதநகரம் விசேஷமாக
 அலங்கரிக்கப்பட்டமை.

சிற்பநூலிற் றிருந்தியமாக்களாற்
பொற்பமைந்து பொலிந்ததப்பொன்னகர்
கற்பகாடவி யல்லதுகண்டவர்
அற்பமென்ன வமராவதியையே.

    (இ-ள்.) கண்டவர் - பார்த்தவர்கள், கற்பக அடவி அல்லது -
கற்பகச்சோலையொன்றினா லல்லாமல், (மற்றையவற்றால்), அமராவதியை அற்பம்
என்ன - (தேவலோகத்து) அமராவதிநகரத்தை (இந்நகரத்தினும்) இழிவானது
என்று சொல்லும்படி,- அ பொன் நகர் - (இயல்பிலேயே) அழகுடைய
அவ்வாரணாவதநகரமானது,- சிற்பம் நூலில் திருந்திய மாக்களால் -
சிற்பசாஸ்திரத்திற் கைதேர்ந்த மனிதர்களால், பொற்பு அமைந்து பொலிந்தது -
(புதுப்பக்கப்பட்டுச்) செயற்கையழகு பொருந்தி விளங்கிற்று; (எ - று.)

     கற்பகச்சோலையையுடைமை ஒன்றே யன்றி மற்றைப்படி செல்வவளம்
முதலிய எவற்றாலும் அமராவதி வாரணாவதத்தினுந் தாழ்ந்ததே யென்று
கண்டவர் சொல்லும்படி அப்பொழுது அந்நகரம் புதுப்பிக்கப்பட்ட தென்பதாம்.
இக்கவி - உயர்வுநவிற்சியணி.                               (385)

112.-திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதஞ் செல்லச்சொல்லுதல்.

அறத்தின்மைந்தனுக் காங்கொருநாளவைப்
புறத்திருந்து புகன்றனன்காவலன்
திறத்துநின்னிளை யோரொடுஞ்சென்றுதோள்
மறத்தினாற்றனி வாழுதியென்னவே.

     (இ-ள்.) ஆங்கு - அதன்பின்பு, ஒரு நாள் - ஒருதினத்தில், காவலன் -
திருதராட்டிர மகாராசன்,- அவைப்புறத்து இருந்து - சபையில் வீற்றிருந்து,
அறத்தின் மைந்தனுக்கு - தருமபுத்திரனை நோக்கி, 'திறத்து நின்
இளையோரொடும் - வல்லமையுடைய உன் தம்பிமார்களுடனே, சென்று - போய்,
தோள் மறத்தினால் - புயவலிமையினால், தனி வாழுதி - தனித்து
(வாரணாவதநகரத்தில்) வாழ்வாயாக', என்ன - என்று, புகன்றனன் -
சொன்னான்; (எ-று.)