தாய்பதம் தொழுக என சொல்லி - (தனது) உடன்பிறந்தவர்களைச் சிறந்த தாயாகிய குந்தியினது பாதங்களை வணங்குவீராக வென்று சொல்லி,- அணிகொள் கோயிலை - அழகுபொருந்திய அந்த மாளிகையை, தாதை நண்பனுக்கு இரை அளித்தான் - தனது பிதாவாகிய வாயுவினது சிநேகிதனான அக்கினிதேவனுக்கு உணவாகக் கொடுத்தான்; (எ-று.) எரித்தா னென்ற பொருளை 'தாதைநண்பனுக்கு இரையளித்தான்' என வேறு வாய்பாட்டாற் கூறினது, பிறிதினவிற்சியணி. தனது தந்தையின் ஒருநண்பனான வாசுகியினிடத்து அமிருதம் பெற்று உண்ட வீமன் அத்தகைய கடப்பாடுவழுவாமல் தனது தந்தையின் மற்றொரு நண்பனுக்கு உணவளித்தனனென ஒருவகைச் சமத்காரம் நிகழக் கூறுவார், 'தாதைநண்பனுக் கிரையளித்தான் இணையிலா வமுது உரகர்கோனிடை நுகர்ந்திருந்தான்' என்றார். தனது உடன்பிறந்தவர் நால்வரையும் தாயையும் ஒருங்கே உடன்கொண்டு வெளிச்செல்லக் கருதின னாதலின், தனித்தனி படுத்திருந்த அவர்களை ஒருங்கே தாயிருக்குமிடத்திற் சேர்த்தற்கு, 'தாய்பதந்தொழுக' என்றுசொல்லினான். (403) 130.- அரக்குமாளிகை எரிந்தொழிதல். முடியுடைத்தடங்கிரியினை முளிகழைதொறுமுற்று அடிநிலத்துறச்சூழ்வரு மாறுபோலழலோன் கொடிநிரைத்தபொற்கோபுரப் புரிசைசூழ்கோயில் இடியிடித்தெனவெடிபடச் சிரித்தெழுந்தெரித்தான். |
(இ-ள்.) அழலோன் - அக்கினிதேவன்,- முடி உடை தட கிரியினை - சிகரத்தையுடைய பெரியமலையை, முளி கழைதொறும் உற்று - (அதிலுள்ள) உலர்ந்த மூங்கில்களி லெங்கும்பொருந்தி, அடி நிலத்து உற - அடிப்பரப்பிலே பொருந்த, சூழ்வரும் ஆறு போல் - சூழ்ந்திடும் விதம்போல,- கொடி நிரைத்த பொன் கோபுரம் புரிசை சூழ் கோயில் - கொடிகள் வரிசையாகக் கட்டப்பட்ட அழகிய கோபுரத்தையுடைய மதில்சூழ்ந்த அந்த இராசகிருகத்தை, இடி இடித்து என வெடி பட சிரித்து எழுந்து எரித்தான் - இடியிடித்தாற்போலப் பேரொலியுண்டாக நகைத்து எழுந்து எரித்திட்டான்; மலையின் தாழ்வரையில் சுற்றிலுமுள்ள காய்ந்த மூங்கிற்காட்டில் தீப்பற்றி யெரிதல்போல், உயர்ந்த அம்மாளிகையைச் சுற்றிலுமுள்ள கொடிகள் கட்டிய மதில்களி லெங்கும் தீப்பற்றி யெழுந்து அம்மாளிகையை எரித்ததென்க. அங்ஙனம் எரிக்கையில் உண்டாகிற போரொலியையே வீரத்தெழுந்த வெகுளிநகையாகக் கற்பித்து வருணிப்பார், 'இடியிடித்தென வெடிபடச் சிரித்தெழுந்தான்' என்றார்; தற்குறிப்பேற்றம். (404) 131.- வீமன் துணைவரையுந் தாயையும் உடன்கொண்டு செல்லல். அக்கணத்திடையன்னையி லணுகியாங்கவரைத் தொக்கசித்திரத்தூணடித் துவாரமேவழியாப் பொக்கெனக்கொடுபோயகல் வனத்திடைப் புகுந்தான் முக்கணற்புதன்முனிந்தவூர் மூவரோடொப்பான். |
|