பாண்டவர் அழிவை, குருகுலச்செல்வம் அழிந்ததெனக் குறித்தார்; செல்வம் - சிறந்தசந்ததி. பட்டு, புகுந்து - எச்சத்திரிபு. 135.- இச்செய்தியறிந்த துரியோதனாதியர் நிலை. கொட்பனற்சுடவிறந்தமை கேட்டலுங்குருக்கள் துட்பதத்துடனழுதிடுஞ் சுயோதனன்முதலோர் உட்பனித்துமேல்வெயிலுற வெதும்புநீரொத்தார் பெட்புறப்புவிமுழுவதும் பெறுங்கருத்துடையோர். |
(இ-ள்.) கொட்பு அனல் சுட - சூழ் தலையுடையதீ எரிக்க, இறந்தமை - (பாண்டவர்) இறந்த செய்தியை, கேட்டலும் - கேட்டறிந்தவுடனே, - துட்பதத்துடன் அழுதிடும் - கொடிய கோட்பாட்டோடு புலம்புகின்ற, சுயோதனன் முதலோர் குருக்கள் - துரியோதனன் முதலியகுருகுலகுமாரர்கள்,- பெட்பு உற புவிமுழுவதுஉம் பெறும் கருத்து உடையோர் - ஆசைமிகப் பூமிமுழுவதையும் பெறும் எண்ணத்தை யுடையவர்களாய், வெயில் உற உள் பனித்து மேல் வெதும்பும் நீர் ஒத்தார்- (மேலே) வெயில்படுகையில் உள்ளே குளிர்ந்து மேலேசுடும் இயல்பையுடைய நீரைப் போன்றார்கள்; துரியோதனாதியர் அகத்தில் மகிழ்ச்சிகொண்டு புறத்தில் தபிப்புக்காட்டினர் என்பதாம். அப்பொழுது அவர்கட்கு மகிழ்ச்சி இயற்கையும், சோகம் செயற்கையுமாய் நின்றமை, உவமையால் விளங்கும். துஷ்பதம் -வடசொல்.(409) 136.- உண்மையிற்பாண்டவர் எரிந்திடாமைப்பற்றிய கவிவர்ணனை. பொன்ன லங்கொள மெழுகினா லாலயம் புனைந்து துன்னு வெங்கதைப் படைமருச் சுதனையே சுடுவான் என்ன வாண்மைகொ லெண்ணினா னென்ணினுஞ் சுடுமோ வன்னி தன்பெயர் மருச்சக னென்பது மறந்தே. |
(இ-ள்.) பொன் நலம் கொள - (வெளியே)பொன்னுக்குஉரிய அழகு விளங்கும்படி, மெழுகினால் ஆலயம் புனைந்து - அரக்கினால் மாளிகையைச் செய்து, துன்னு வெம் கதை படை மருத் சுதனைஏ சுடுவான் - பொருந்திய கொடிய (சத்துருகாதினியென்னும்) கதாயுதத்தையுடைய வாயுகுமாரனாகிய வீமனையே சுடும்படி, எண்ணினான் - (துரியோதனன்) கருதினான்: (அங்ஙனங் கருதியது), என்ன ஆண்மைகொல் - என்ன ஆண்திறமையோ? எண்ணின்உம் - (அவ்வாறு அவன்) நினைத்தாலும், வன்னி - அக்கினி, தன் பெயர் மருத்தசகன் என்பது மறந்து - தனது பெயர் காற்றின் சகாயனென்பதை மறந்து, சுடும்ஓ - (அவ்வாயுகுமாரனை) எரித்திடுமோ? (எ-று.) துரியோதனனுக்கு நேரெதிரியான வீமன் தப்பியுய்ந்தன னென்ற உண்மையை, காற்றின் நண்பனான அக்கினிதேவன் அக்காற்றின் மகனை எரித்திடானென வருணித்தார்; இது - ஏதுத்தற்குறிப்பேற்றவணியின் பாற்படும். மருத்ஸு தன், மருத்ஸக: என்ற வடமொழிப்பெயர்கள் திரிந்தன. (410) வாரணாவதச்சருக்கம் முற்றிற்று. ------ |