2.-வீமன்துணைவரையுந் தாயையும் கொண்டு ஒருவனஞ் சேர்தல். தோள்கரம்புறந்தன்னிலன்னையுந் துணைவர்நால்வருந்தொக்கு வைகவே, கோள்கரந்தபஃறலையராவெனக் குகரநீணெறிக்கொண்டு போயபின், தாள்களின்கதித்தாள்பறிந்துவீழ் தருவனத்ததோர்சாரன்மன்னினான், மூள்கடுங்கொடுஞ்சினவனற்கண்மா மும்மதக்களிற்னைய மொய்ம்பினான். |
(இ-ள்.) மூள் கடு கொடு சினம் - (மனத்திற்) பற்றியெழுகிற மிகக்கொடிய கோபத்தையும், அனல் கண் - அக்கோபாக்கினியைச் சொரிகிற கண்களையும், மும் மதம் - மூன்றுவகை மதங்களையுமுடைய, மா களிறு - பெரிய ஆண்யானையை, அனைய - ஒத்த, மொய்ம்பினான் - வலிமையையுடையவனான வீமசேனன்,- தோள் கரம் புறம் தன்னில் - (தனது) தோள்களிரண்டிலும் கைகளிரண்டிலும் முதுகு ஒன்றிலும், அன்னைஉம் துணைவர் நால்வர்உம் தொக்குவைக - (தனது) தாயான குந்தியும் (தனது) உடன்பிறந்தவர் நால்வரும் பொருந்தியிருக்க, கொண்டு - எடுத்துக்கொண்டு,- கோள் கரந்தபல் தலை அரா என - வலிமையோடு (புற்றினுள்ளே) மறைந்து செல்லுகிற பலதலைகளயுடையதொரு நாகம் போல, குகரம் நீள் நெறி - மலைக்குகைபோன்ற நீண்ட சுரங்கவழியாக, போய பின் - சென்ற பின்பு,- தாள்களின்கதி - (தனது) கால்களின் நடைவேகத்தால், தாள் பறிந்து வீழ் - அடிபெயர்ந்து கீழ்விழப்பெற்ற, தரு - மரங்களையுடைய, வனத்தது - காட்டினது, ஓர் சாரல் - ஒரு பக்கத்தை. மன்னினான்- சேர்ந்தான்; (எ-று.) மூன்றாம் அடி - வீமனது வலிமையையும் விசையையுங் காட்டும், உடன் பிறந்தவரின் தலைகளும் தாயின் தலையும் வீமன் தலையும் ஒருசேர விளங்குகின்றமையின், பஃறலையராவை உவமை கூறினார். பாலபாரதத்தை நோக்குமிடத்துச் சாரலென்றவிடத்துச் சரசு என்றுபாடமிருக்குமோ என்று கருதவேண்டியிருக்கிறது. குஹரம்-வடசொல், மும்மதம்-கன்னமிரண்டு, குறியொன்று ஆக மூன்றிடத்தினின்றும் பெருகுவன. புறந்தம்மில் என்றும் பாடம். (412) 3.-அங்கு இடிம்பி வந்து வீமனைச் சில வினாவுதல். அவ்வனத்தில்வாழரமடந்தையென்றையமெய்தவோரடலரக்கிவந்து, இவ்வனத்திலிந்நள்ளியாமநீயென்கொல்வந்தவாறிவர்கள்யாரெனச், செவ்வனத்திதழ்க்கூரெயிற்றெழுந் தெண்ணிலாவினிற்றிமிரமாறவே, வெவ்வனற்சுடர்க்கொத்தவோதியாள் வீமசேனனோடுரைவிளம்பினாள். |
(இ-ள்.) வெம் அனல் சுடர்க்கு ஒத்த - வெவ்விய அக்கினியின் சுவாலைக்குச் சமமான, ஓதியாள் - செம்பட்டமயிரையுடையவளான, ஓர் அடல் அரக்கி - வலிமையையுடைய ஒரு இராக்கதப் பெண்,- அ வனத்தில் வாழ் அரமடந்தை என்ற ஐயம் எய்த வந்து - அந்தக் காட்டில்வாழும் தெய்வமகளோ வென்று (பார்த்தவர்கள்) சந்தேகமடையும்படி (அருகில்) வந்து,- செம் வனத்து இதழ் கூர் எயிறு எழும் தெள் நிலாவினில் திமிரம் மாற - செந்நிறத்தையுடைய வாயிதழினுள் கூரிய பற்களினின்று வெளி |