27.- பரதமன்னவன் சிறப்பு. சுரசமூகமுஞ்சுராரிகள் சமூகமுஞ்சூழ விரசுபூசலின்வாசவ னடுங்கிவெந்நிடுநாள் அரசர்யாவருமறுமுகக் கடவுளென்றயிர்ப்பப் புரசைநாகமுன்கடவின னாகமும்புரந்தோன். |
(இ - ள்.) சுர சமூகம்உம் - தேவர்களின் கூட்டமும், சுர அரிகள் சமூகம்உம்-தேவர்களின்பகைஞரான அசுரருடைய கூட்டமும், சூழ - சுற்றிநிற்க, விரசு -(ஒருவரோடொருவர்) நெருங்கிச்செய்த, பூசலின் - பெரும்போரிலே, வாசவன் -இந்திரன், நடுங்கி-, வெந் இடும் நாள் - புறங்கொடுத்தோடினபோது,- அரசர் யாவரும்-,அறுமுகக்கடவுள் என்று அயிர்ப்ப - தேவசேனாபதியாகிய சண்முகமூர்த்தியோ என்றுஎண்ணிச் சந்தேகிப்ப, புரசை நாகம் முன் கடவினன் - கழுத்திடுகயிற்றையுடையயானையை முன்னே தூண்டிச் செலுத்தினவனாகி, நாகம்உம் புரந்தோன்-தேவலோகத்தையும் பாதுகாத்தான், (அந்தப்பரதன்);(எ-று.) இவன் இங்ஙன் வீரனாக இருந்ததனால்தான் இவன் வமிசத்தவர் பாரதரென்றும்,அவர்கள் செய்த போர் பாரதப்போர் என்றும் கூறப்படும். அசுரரை வென்று, சுரரைத்தேலோகத்தில் நிலைநாட்டியதனால், இவனுக்கு அறுமுகக்கடவுள் ஒப்பாவன். (35) 28.-அத்தியென்பவன் அவதரித்தல். முக்குலத்தினுமதிக்குலமுதன்மைபெற் றதுவென்று எக்குலத்தினிலரசும்வந் திணையடியிறைஞ்ச மைக்குலத்தினிற்புட்கலா வர்த்தமாமெனவே அக்குலத்தினிலத்தியென் பவனவதரித்தான். |
(இ - ள்.) முக் குலத்தின்உம் - (சூரிய சந்திர அக்கினியர் என்னும்) மூவரிடத்தினின்று தோன்றிய அரசவமிசம் மூன்றுக்குள்ளும், மதி குலம் - சந்திர குலமானது, முதன்மை பெற்றது - தலைமையை யடைந்தது, என்று-, எ குலத்தினில்அரசுஉம் - எந்தக் குலத்திலுதித்த அரசரும், வந்து-, இணை அடி - (தன்னுடைய)இரு தாள்களில், இறைஞ்ச - வணங்கிநிற்க,- மைகுலத்தினில் புட்கலாவர்த்தம் ஆம்எனஏ - மேகக்கூட்டங்களுள் புட்கலாவர்த்தம் சிறந்து தோன்றுவதுபோல, அகுலத்தினில் - அந்தப்பரதகுலத்திலே, அத்தி என்பவன் - ஹஸ்தியென்ற அரசன்,அவதரித்தான்- தோன்றினான்; (எ -று.) அத்தி =ஹஸ்தீ: இவன் ஸு ஹோத்ர னென்பானுடைய புத்திரன். புட்கலாவர்த்தம்மேகங்களுள் பொன்மழைபொழிவதென்ப. (36) 29.-அத்தியென்பவன் அத்தினாபுரியை யமைத்தல். கொண்டல்வாகனுங்குபேரனு நிகரெனக்குறித்துப் புண்டரீகன்முன்படைத்தவப் புரவலனமைத்தது எண்டிசாமுகத்தெழுதுசீ ரியக்கர்மாநகரும் அண்டர்தானமுழுவமைகூ ரத்தினாபுரியே. |
|