பக்கம் எண் :

232பாரதம்ஆதி பருவம்

     தமையனைக் கொன்றபின்பும் காதல் கைவிஞ்சி 'என்னை இவன் மணப்பனோ,
மாட்டானோ?' என்று கவலைகொண்ட இடிம்பையின் நிலைமையை அப்போது
வீமன் கவனித்தா னென்க. காமத்துக்கு உரிய தலைவன் மன்மத னாதலால், 'மன்
மதனெரி' எனப்பட்டது; இச்சருக்கத்துப் பதினோராங்கவியில்
"அனங்கவெங்கனல்" என வந்ததுங் காண்க.                          (430)

21.-வீமன் இடிம்பையை மணம் மறுத்தல்.

மாய்ந்தவன்றுணைவிகேள் வதுவையின்னமும்
ஏய்ந்திலனெம்முனும் யாங்கண்மானிடர்
ஆய்ந்துகொண்முறைமையா லரக்கர்பாவைநீ
காய்ந்தமையறிதிமுன் கணையிராமனே.

    (இ-ள்.) மாய்ந்தவன் துணைவி - இறந்தவனான இடிம்பனது தங்கையே!
கேள்-: எம்  முன்உம் - எங்கள் தமையனும், இன்னம் உம் வதுவை ஏய்ந்திலன்
- இன்னமும் மணஞ்செய்திலன்;) (அன்றியும்,) யாங்கள் மானிடர் - நாங்கள்
மனிதர்; நீ அரக்கர் பாவை - நீ இராக்கதப்பெண்: முறைமையால் ஆய்ந்து
கொள் - (இவற்றை) முறைமையால் ஆராய்ந்து (நான்உன்னைமணஞ்செய்தல்
தகுதியன்றென்று) கொள்வாய்; (மற்றும்), முன் - முற்காலத்தில், கணை இராமன் -
அம்பு செலுத்தலில்வல்ல [க்ஷத்திரியவீரனான] ஸ்ரீராமபிரான், காய்ந்தமை -
(சூர்ப்பணகை யென்னும் இராக்கதப் பெண்ணை மணம்மறுத்து) வெறுத்ததனை,
அறிதி - அறிவாயாக; - (எ-று.)- என்று இடிம்பையை நோக்கி வீமன் கூறின
னென்க.

      'மாய்ந்தவன் துணைவி' என்ற விளி, உடன்பிறந்தவன் இறந்ததுபற்றி நீ
சோகிக்கவேண்டிய காலத்தில் அவனைக்கொன்ற என்னைக் காதலித்து
மணஞ்செய்யக் கருதுதல் அடாது என்ற  குறிப்பினது. 'தமையன்
விவாகமின்றியிருக்கையில் தம்பி விவாகஞ் செய்துகொள்ளலாகாது' என்ற
தருமசாஸ்திரக்கொள்கையை, 'வதுவை இன்னமும் ஏய்ந்திலன் எம்முன்' என
எடுத்துக் கூறினான். அரக்கரை மனிதர் மணக்கலாகா தென்பதை "வருத்த
நீங்கரக்கர் தம்மின் மானுடர் மணத்தல் நங்கை, பொருத்தமன் றென்று சாலப்
புலமையோர் புகல்வர்" என்ற இராமயணத்தாலும் அறிக. ராமலட்சுமணரைக்
காதலித்த சூர்ப்பணகை அங்கபங்கப் பட்டசெய்தி, ராமாயணத்திற் பிரசித்தம்.
                                                           (431)

22.- இதுவும், அடுத்தகவியும் - குளகம்: இடிம்பையை
  மணக்கும்படி வீமனுக்குக் குந்தி அநுமதி செய்தல்.

ஆசைகொளரக்கியோ டனிலன்காதலன்
பேசியகட்டுரை கேட்டபெற்றதாய்
ஓசைகொண்மைந்தரோ டுசாவிநண்பினால்
ஏசறவுரைத்தன ளினிமைகூரவே.

     (இ-ள்.) ஆசை கொள் அரக்கியோடு - (தன்மீது) காதல் கொண்ட
இடிம்பையுடனே, அனிலன் காதலன் - வாயுகுமாரனான