தலைமேற் கொண்டு கௌரவித்தான்: (பின்பு அவர்களெல்லோரும்), மின்னைஉம் உடன் கொடுபோந்து - மின்னல் போன்ற இடிம்பையையும் உடனழைத்துக்கொண்டு சென்று, மேவு நீர் தன்னைஉம் கண்டு - (அங்குப்) பொருந்திய ஒரு நீர்நிலையையும் கண்டு, அதில் துளைந்து - அதில் மூழ்கி, (அதன்கரையில்), தங்கினார்-; (எ-று.) கீழ்ச் சூரியோதயங் கூறினவர், இங்கு, அவர்கள் காலைக் கடன் முடித்தல் கூறின ரென்க. நீராடியது கூறினமை, மற்றைக் கடமைகளுக்கும் உபலக்ஷணமாம். இடிம்பனைக்கொன்று இடிம்பையைப் பெற்றபின் சாலிகோத்திரசரஸைப் பாண்டவ ரடைந்தன ரென்று நூல்கள் கூறும். (434) 25.- அங்கு வியாசமுனி எழுந்தருள, பாண்டவர் உபசரித்தல். அத்தினத்தவர்வயி னவலநீக்குவான் மெய்த்தவப்பழமறை வியாதன்வந்தனன் பத்தியிற்சிறுவரும் பணிந்துபோற்றினார் முத்திபெற்றவரினு முற்றுஞ்சிந்தையார். |
(இ-ள்.) அ தினத்து - அந்நாளில், அவர்வயின் அவலம் நீக்குவான் - அவர்களுக்குநேர்ந்த வருத்தத்தை நீக்கும்பொருட்டு, மெய் தவம் பழமறைவியாதன் வந்தனன் - உண்மையான தவத்தை யுடையவனும் பழமையான வேதங்களை வகுத்தருளியவனு மாகிய வியாசமுனிவன் (அங்கு) வந்தருளினான்; (அதுகண்டு), சிறுவர் உம் - இளம்பிள்ளைகளான பாண்டவர்களும், முத்தி பெற்றவரின் உம் முற்றும் சிந்தையார் - மோக்ஷமடைந்தவர்களினும் (ஆனந்தம்) மிக்கமனத்தையுடையவர்களாய், பத்தியின் பணிந்து போற்றினார் - பக்தியோடு (அவனை) வணங்கித் துதித்தார்கள்; (எ-று.) அவலம் நீக்குதல் - துரியோதனனது சூழ்ச்சியால் நேர்ந்த மனவருத்தத்தைத் தணித்தல். மெய்த்தவம் - ஒழுக்கத்திலும் பயனிலும் தவறாத தவம். 'முந்துஞ் சிந்தையார்' என்றும் பாடம். (435) 26.- வியாசன் பாண்டவர்க்குக் கூறிய நன்மொழி. தனிவனமிகந்துநீர் சாலிகோத்திர முனிவனஞ்சிலபகல் வைகிமுந்துற மனனுறப்பார்ப்பன மாக்களாகியே இனிமையின்வேத்திர கீயமெய்துவீர். |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) நீர் - நீங்கள், தனி வனம் இகந்து - தனிமையான காட்டைக் கடந்து, முந்துற - முந்தி, சாலிகோத்திர முனி வனம் சில பகல் வைகி - இங்குள்ளசாலிகோத்திரனென்னும் முனிவனது வனத்தில் சிலநாள் இருந்து, (பின்பு), மனன் உற பார்ப்பனமாக்கள் ஆகி - (கண்டார் எவரும்) மனத்தால் நம்பும்படி பிராமண வேடங்கொண்டு, வேதத்திரகீயம் இனிமையின் எய்துவீர் - வேத்திரகீயத்தை இனிது சேர்வீராக; (எ-று.) தனிவனம் - மநுஷ்யசஞ்சார மில்லாத வனம், துரியோதனாதியரால் இன்னா ரென்று அறிந்து இடரிழைக்க வொண்ணாதபடி |