ஒருபிறப்பாமென்பது நூற்கொள்கையாதலால், இருபிறப்பாள ரென்றது. அமுதென, விருந்தயின்று என்று பாடபேதங்கள். (446) 37.- அக்காலத்து அங்கு நடந்த ஓர்செய்தி கூறத் தொடங்கல்: கவிக்கூற்று பொன்னக ரணுகினர் போல நெஞ்சுறத் தந்நக ரெனும்படி தாயு மைந்தரும் இந்நக ரநேகநா ளிருந்த வெல்லையில் அந்நகர் புரிந்ததோ ராண்மை கூறுவாம். |
(இ-ள்.) தாய்உம் மைந்தர்உம் - குந்தியும் பாண்டவர்களும், தம் நகர் எனும்படி - தங்களுடைய (சொந்த) நகர மென்றுசொல்லும்படி, இ நகர் - இந்தவேத்திரகீயநகரத்தில், பொன் நகர் அணுகினர் போல நெஞ்சு உற - பொன்மயமான (தேவலோகத்து) அமராவதிநகரத்தை யடைந்தவர்கள் போல மனம்மகிழ, அநேகம் நாள் இருந்த எல்லையில்-, அ நகர் புரிந்தது ஓர் ஆண்மை -அந்நகரத்திற்செய்த ஒருவீரத்தை,கூறுவாம்-(யாம்) இனிச்சொல்லுவோம்;(எ-று.)- அதனை, இச்சருக்கம் முடியுமளவுங் காண்க. (447) வேறு. 38.-பாண்டவர் வசிக்கிற வீட்டுக்கு உரிய பார்ப்பனி ஒருநாள்புலம்புதல். மறையு முருவினொ டரிய குருகுல மகிபர் நெடுவன சரிதராய், உறையும் வளமனை யுடைய மடவர லுருகு பிரதைத னுயிரனாள், குறைவில்பொலிவினள் விரதநெறியினள் குழுவுநிதியினள் கொடுமையால், இறையு மொழிவற விருக ணறல்வர வெரிகொள் கொடியென வினையினாள். |
(இ-ள்.) அரிய குரு குல மகிபர் - அருமையான குருகுலத்து அரசர்களாகிய பாண்டவர்கள், மறையும் உறைவினொடு - மறைந்த வடிவத்துடனே [மாறுவேடங்கொண்டு], நெடு வனம் சரிதர் ஆய் - பெரிய காட்டிற் சஞ்சரிப்பவர்களாகி, உறையும் - (அவ்வூரில்) வசித்திருக்கிற, வளம் மனை - செல்வவளம்நிறைந்த வீட்டுக்கு, உடைய -உரிமையுடைய, மடவரல் - பெண்,- உருகு பிரதைதன் உயிர்அனாள் - (கருணையால்) மனமுருகுந்தன்மையுள்ள - குந்தியின் உயிர்போன்றவள்: குறைவு இல் பொலிவினள் - குறைவில்லாத [நிறைந்த]அழகுடையவள்; விரதம் நெறியினள் - நோன்புகளைத்தவறாமல் அனுட்டிக்கும் முறைமையுடையவள்: குழுவு நிதியினள் - மிகுதியாகத் திரண்ட செல்வத்தையுடையவள்; (அவள்), கொடுமையாள் - (பகாசுரனால்நிகழுங்) கொடுமைகாரணமாக,- இறைஉம் ஒழிவு அற இரு கண் அறல் வர - சிறிதும் இடைவிடுதலில்லாமல் (தனது) இரண்டு கண்களினின்றும் சோகநீர் சொரிய,- எரி கொள் கொடி என - தீப்பற்றிய பூங்கொடி போல, (தவித்து), இளையினாள்-வருந்தினாள்; துயருறுங் கணவனுடைய மடியிலிருக்கும் இருமக்களைத் தழுவிக்கொண்டு அந்தணி யழ, குந்திதேவி வினாவின ளென விவரம் காண்க. பாண்டவரோடு குந்தியைத் தன்மனையிலிருத்தி மிகவும் உபசரித்து வந்தமைபற்றிக் குந்தியினால் உயிர்போலப் பாவித்து மிகவும் அன்புசெய்யப்பட்டு நின்றவளென்பார், 'உருகு பிரதைதனுயிரனாள்' என்றார். |