பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்25

31.-அந்தக்குலத்து உதித்தவனே 'குரு' என்பவன்.

பொருபெரும்படைத்தொழில்வயப் புரவிதேர்மதமா
மருவருந்தொழில்மன்னர்நீ தியின்தொழில்வளங்கூர்
சுருதியின்றொழின்முதலிய தொழிலனைத்தினுக்கும்
குருவெனும்புகழ்க்குருவுமக் குலத்திலங்குரித்தான்.

     (இ - ள்.) பொரு - போர்செய்யும், பெரும் படைத்தொழில் - மிக்க
சேனைகளின் தொழில்களிலேவல்லனவான, வயம் புரவி - வெற்றி பொருந்திய
குதிரையும், தேர் - இரதமும், மதம் மா - மதம் பொருந்திய யானையும், (ஆகிய
இவற்றுடனே), மருவுஅரு தொழில் மன்னர் நீதியின் தொழில் - கிட்டுதற்கு அரிய
போர்த்தொழிலிலே வல்ல அரசருடைய நீதியின் தொழின்முறையிலும், வளர் கூர்-
வளமைமிக்கவனாகி,- சுருதியின் தொழில் முதலிய தொழில் அனைத்தினுக்குஉம் -
வேதத்திற்கூறிய தொழில்முதலிய எல்லாத் தொழில்கட்கும், குரு - (இவன்)
குருவாவன்,எனும் - என்று சொல்லத்தக்க, புகழ் - புகழையுடைய, குருஉம்-குரு
என்றஅரசனும், அ குலத்தில்- அந்தக் குலத்திலே, அங்குரித்தான்-
தோன்றினான்; (எ -று.)

     அரசநீதித்துறையிலும் வேள்வித்துறையிலும் குருஎன்று சொல்லுமாறு
மிகச்சிறந்துநின்றனன், இந்தக்குரு என்ற சந்திரகுலத்தரச னென்க. சுருதியின்தொழில்
-வேதத்தில்விதித்திருக்கிற தொழில்: அஃதாவது - யாகஞ்செய்தல். குருஎன்று
அம்மன்னவன் பெயர்படைத்ததற்கு ஒருகாரணங் கற்பித்துக் கூறுவார் போன்று,
'மன்னர்நீதியின்றொழில் 'சுருதியின்றொழில் முதலிய தொழிலனைத்தினுக்குங்
குருவெனும்புகழ்க்குருவும்' என்றார். இவன் பிதா சவ்வருணன், வசிட்டமுனிவனருளால்இவனைப் பெற்றானென்ப.                    (39)

32.-குருமன்னவன் சிறப்பு.

வருகு லத்தவ ரெவரையும் வரிசையா லின்றும்
குருகு லத்தவ ரெனும்படி பேரிசை கொண்டான்
இருகு லத்தினு மாசறு தேசினா லிவனுக்கு
ஒருகு லத்தினும் முரைப்பதற் குவமைவே றுண்டோ.

     (இ - ள்.) (இவன்),- வரு- (தனக்குப்பின்னே) தோன்றிய, குலத்தவர் -
குலத்திலுள்ளவரான, எவரையும்-, வரிசையால் - சிறப்பாக, இன்றுஉம் -
இப்போதும்,குருகுலத்தவர் - குருகுலத்திலேபிறந்தவர், எனும்படி -
என்றுசொல்லும்படி, பேர் இசைகொண்டான் - மிக்ககீர்த்திபெற்றவன்: இரு
குலத்தின்உம்- (இந்தச்சந்திரகுலந்தவிரமற்றைச் சூரியகுலம் அக்கினிகுலம் என்ற
இந்த) இரண்டுகுலங்களிலேனும்,ஒருகுலத்தின்உம்- வேறுள்ள எந்த
ஒருகுலத்திலேனும், மாசு அறு தேசினால்-குற்றமற்ற தேஜசினால், இவனுக்கு-,
உவமை உரைப்பதற்கு - உவமையாகச்சொல்வதற்கு, வேறு உண்டுஓ -
வேறொருவர் உளரோ?

     இவன் தனக்குத் தானே ஒப்பாவனன்றி, இவனுக்கு உவமையாகச்
சொல்லத்தக்கவர் வேறு எந்தக்குலத்திலும் இல்லையென்ப