பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்257

64.-வீமன், மாளிகைக்குவந்து பந்து மித்திரரோடு அளவளாவுதல்.

வாசமாமணிவிளக்கெடுப்பவிவன் வந்துதாமுறையுமனைபுகுந்து,
ஈசனோடுமையெனத்தவம்புரியு மிருவர்தாள்களுமிறைஞ்சியே,
நேசமானவருளன்னையைத்தொழுதுதம்முனைத்தொழுதுநெஞ்சுறத்,
தேசினோடிளைஞர்தொழமகிழ்ச்சியொடுதழுவினான்முறைமைதி
                                             கழவே.

     (இ-ள்.) வாசம் - வாசனையுள்ள [நறுநெய்கொண்டு ஏற்றிய], மா மணி
விளக்கு - சிறந்த அழகிய விளக்குகளை, எடுப்ப - (நகரத்தார் எங்கும்) ஏற்ற,
இவன் - வீமன், வந்து-, தாம் உறையும் மனை புகுந்து- தாங்கள் வசிக்கும்
வீட்டிற்புக்கு,- முறைமை திகழ - (அவரவர்க்கு உரிய) முறைமை விளங்க,-
ஈசனோடு உமை என தவம் புரியும் இருவர் தாள்கள்உம் இறைஞ்சி- சிவபிரானும்
பார்வதி தேவியும் போலத் தவவொழுக்கத்தைநடத்துகிற அவ்வீட்டு அந்தணனும்
அவன் மனைவியுமாகிய இருவருடைய பாதங்களையும் நமஸ்கரித்து, நேசம்
ஆன அருள் அன்னையை தொழுது - அன்புமிக்க கருணையையுடைய தன்
தாயாகிய குந்திதேவியை வணங்கி,-தம்முனை தொழுது-தமையனாகிய தருமனை
வணங்கி, இளைஞர் தேசினோடு நெஞ்சுஉற தொழ - (தனது) தம்பியர்
பெருமையோடு மனப்பூர்வமாக (த் தன்னை) நமஸ்கரிக்க, மகிழ்ச்சியொடு
தழுவினான் - சந்தோஷத்தோடு (அவர்களைத்) தழுவினான்;(எ-று.)

     இல்லறத்தில் நின்றபடியே நல்லொழுக்கத்தை மிக்கசிறப்பாக நடத்துதற்கு
ஈசனும் உவமையும் உவமைகூறப்பட்டனர். ஈசன் -
எல்லாஐசுவரியமுமுடையவன். பார்வதி ஐந்துபிராயமான வளவிலே பரமசிவனை
மணம்புரிதற்குத் தவஞ்செய்யவிரும்பியவளாய்த் தன் கருத்தைப் பெற்றோர்க்குத்
தெரிவிக்கையில், 'உ! மா [அம்ம! வேண்டா] ' என்று கூறினமையால், அவளுக்கு
உமையென்று பெயராயிற்று.                                  (474)

65.- நகரத்திலிருந்த பலரும் வீமனைப் பாராட்டியமை.

அகம லர்ந்துமுனி யாசி சொற்றிடவு மன்னை யார்வவுரை
                                        கூறவும்,
முகம லர்ந்துரிய துணைவ ராண்மைநிலை மொழியவுஞ்
                             சமரமொய்ம்பனைச்,
சகம லர்ந்ததிரு வுந்தி மால்கொலிவ னென்று மற்றுள
                                    சனங்களும்,
மிகம லர்ந்துபுன லோடை யிற்குழுமி நனிவி யந்திசை
                                   விளம்பினார்.

     (இ-ள்.)- சமரம் மொய்ம்பனை - போர்வீரனானவீமனை,- முனி -
(இருந்தவீட்டிற்குஉரிய) அந்தணன், அகம்மலர்ந்து - மனங் களித்து, ஆசி
சொற்றிடஉம் - வாழ்த்துக்கூறவும்,- அன்னை - தாய் [குந்தி], ஆர்வம் உரை -
அன்பைத்தெரிவிக்கும்பேச்சுக்களை, கூறஉம் - சொல்லவும்,- உரிய துணைவர் -
உரிமைபூண்டசகாயரான உடன்பிறந்தோர், முகம்மலர்ந்து - முகமலர்ச்சிகொண்டு,
ஆண்மை நிலைமொழியஉம் - பராக்கிரமச்செயலைப்பாராட்டிக் கூறவும்,-
மற்றுஉள சனங்கள்உம் - மற்றும் அந்நகரத்திலிருந்த சனங்களெல்லாம்,- 'இவன்-,
சகம் மலர்ந்த திருஉந்தி மால்கொல்-உலகத்தைவெளிப்படுத்திய
அழகியநாபியையுடைய திருமாலோ? ' என்று - என்றுசங்கித்து, மிக மலர்ந்து -
மிகவும் மனம்