பாங்குடைப்பதியில்வாழும் பார்ப்பனமாக்களோடும் தாங்கருங்கொடியகானந் தம்மனத்தேரிற்போனார். |
(இ-ள்.) ஆங்கு அது நிகழ்ந்த மாற்றம் - அவ்விடத்தில் [பாஞ்சாலநகரத்தில்] அந்தச்சுயம்வரம் அமைந்த செய்தியை, வந்தோன் அந்தணன் ஒருவன் ஈங்கு இவர்க்கு உரைப்ப - (அங்கு நின்று) வந்தவனாகிய ஒருபிராமணன் இவ்விடத்தில் [வேத்திரகீயத்தில்] இருக்கிற இந்தப்பாண்டவர்க்குச் சொல்ல,- மைந்தர் ஐவர்உம் யாய்உம் கேட்டு - குமாரர்களாகிய பாண்டவர் ஐவரும் அவர்கள் தாயான குந்தியும் (அச்சொல்லைச்) செவியுற்று,- பாங்கு உடை பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடுஉம் - அழகுள்ள அவ்வூரில் வாழ்கிற பிராமணர்களுடனே (புறப்பட்டு), தாங்கு அரு கொடிய கானம் - பொறுத்தற்கு அரிய கொடுமையையுடைய காட்டு வழியிலே, தம் மனம் தேரின் போனார் - தங்கள்மனமாகிய தேரிற் சென்றார்கள்; (எ-று.) ஒருவர் பலவிடத்தும் திரிதற்குத் தேர் துணையாவதுபோல மனத்தைப் பலவிடத்தும் செல்லும்படி ஆசை செய்தலால், அவ்விருப்பத்துக்கு 'மநோரதம்' என்று வடமொழியிற்பெயர்: அச் சொற்பொருளைத் தழுவி, தம்இச்சைப்படி விரைவாகச்சென்றார்க ளென்றபொருளில் 'தம்மனத்தேரிற்போனார்' என்றார்: திரௌபதியைத் தாம்பெறலாகுமென்றகாதல்தூண்டச் சென்றனரென்று கருத்து. இக்கருத்தை யுட்கொண்டு, அந்தணவடிவத்தோடு மறைந்துவசிக்கிற இவர்கள், திரௌபதிவிவாககாலத்தில் நடக்கும் போசனத்தையுண்டு அங்குக்கொடுக்கிற தட்சிணையைப்பெற்று அங்குநிகழும் பலவகைவிநோதங்களைக் கண்டு மகிழலா மென்ற கருத்துடன் புறப்பட்ட அந்தணர்களுடனே பிரயாணமாயின ரென்க. தாங்கு - முதனிலைத்தொழிற்பெயர். 'ஐவரும்யாவுங்கேட்டு', 'தாங்களும்' என்று பிரதிபேதம். (479) 5.- அவ்வனத்தில் பாண்டவரெதிரில் வியாசமுனிவன் வந்து தோன்றல். சாரதந்திரத்தின்மிக்க தபோதனன்சதுர்வேதங்கள் பாரதந்தன்னோடைந்தாம் படியினாற்பகர்ந்தமூர்த்தி நாரதமுனியையொப்பா னராதிபர்நடந்துசெல்லும் நீரதநெறியில்வாவிநிறைந்தநீரென்னநின்றான். |
(இ-ள்.) சாரம் தந்திரத்தில் மிக்க - சாரமான நூலறிவிற் சிறந்தவனும், தபோதனன் - தவத்தையே செல்வமாகவுடையவனும், சதுர் வேதங்கள் - நான்கு வேதங்கள், பாரதந்தன்னோடு ஐந்துஆம் படியினால் - பாரதத்தோடு சேர்ந்து ஐந்தாகும்படி, பகர்ந்த - (அவ்வேதங்களைவகுத்துப் பாரதத்தைச்) சொல்லியருளிய, மூர்த்தி - பெரியோனும், நாரதமுனியை ஒப்பான் - நாரதமுனிவனை யொப்பவனுமாகிய வியாசமுனிவன்,- நர அதிபர் நடந்துசெல்லும் நீரதம் நெறியில் - அரசர்களாகிய அப்பாண்டவர்கள் நடந்துசெல்லும் நீரற்ற அக்காட்டுவழியில், வாவி நிறைந்த நீர் என்ன - குளத்தில் நீறைந்தநீர்போல, நின்றான்; (எ-று.) |