பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்273

(தனது) தோழியர் அடிக்கடி தேறுதல்கூறுதலால், தன் மனம் தளர்வு தீர்வாள்-
(பாண்டவர் அரக்குமாளிகையில் இறந்தனரென்று கேள்வியுற்றதனால்)
தன்மனத்திற்கொண்ட தளர்ச்சி நீங்குபவளும்,-(எ-று.)-கூர்வாள், தீர்வாள் என்ற
இரண்டும், 26-ஆம் கவியில்வரும் 'நுதலாள்' என்பதற்கு அடைமொழி: அடுத்த
இரண்டுகவிகளிலும் இவ்வாறே.

     இந்தக் குளகச்செய்யுள் திரௌபதியின் தன்மையைத் தெரிவிக்கும்,
ஆதிமுதல்திரௌபதி பாண்டவரிடம் காதல்கொண்டிருந்தமையும், அவர்க்கு
அபாயம்நேர்ந்ததென்று கேள்வியுற்ற பின்பும் அந்தஅன்பு குறையாதிருந்தமையும்,
இதில்நன்கு விளங்கும். சோதிடம் - சூரியன்முதலிய கிரகங்கள் அசுவினி முதலிய
நட்சத்திரங்கள் என்பவற்றின் சஞ்சாரத்தைக்கொண்டு பயன்வகுத்துக் கூறும் நூல்;
ஜ்யோதிஸ் - ஒளி.                                              (498)

24. திரௌபதி அருச்சுனன்மீது காதல்கொண்டிருத்தல்.

சூட்டியதொடையன்மாலைத் தோழியர்வைகறோறும்
தீட்டியபடங்களுந்தஞ் சிந்தையும்பொலிவுகொள்ளக்
கோட்டியசிலையினோடுங் கொடிமணித்தேரினோடும்
காட்டியகோலமன்றிப் பிறிதொன்றுங்காண்கிலாதாள்.

     (இ-ள்.) சூட்டிய-(கூந்தலிற்) சூட்டப்பட்ட, தொடையல்மாலை-தொடுத்த
பூச்சரங்களையுடைய, தோழியர் - தோழிகள், வைகல் தோறுஉம்-நாள்தோறும்,
தீட்டிய-எழுதிய, படங்கள்உம்-சித்திரப்படங்களும், தம் சிந்தைஉம்-
(அவற்றையெழுதிக்காட்டுகிற) அவர்களுடைய உள்ளக்கருத்துக்களும், பொலிவு
கொள்ள - மிகுதியடைய,--(அந்தப்படங்கள்பலவற்றுள்ளும்), கோட்டியசிலையினோடு
உம் கொடி மணி தேரினோடுஉம் காட்டிய கோலம் அன்றி-வளைத்தவில்லோடும்
கொடிகட்டிய அழகிய தேரொடும் காண்பித்த (அருச்சுனனுடைய)
வடிவமொன்றையேயன்றி, பிறிதுஒன்று உம் காண்கிலாதாள்-வேறு எந்த
வடிவத்தையும்ஆசையோடுபாராதவளும்,-

     திரௌபதிக்கு விவாகத்திற்குஉரிய பருவம் வந்தவளவிலே அவளுடைய
தோழிகள் அநேக அரசர்களின் உருவத்தைப் படத்திற் சித்திரித்து அவளுக்குக்
காட்டினராக, அவற்றுள் அருச்சுனனொருவனது உருவத்திலேயே திரௌபதி
அன்புநோக்கைச் செலுத்தினாளென்பதாம். அங்ஙன் மிகப்பல உருவங்களையெழுதிக்
காட்டுவாரது கருத்தும் அதற்கு ஏற்ப மிகப்பலவா மாதலால், 'படங்களுந்
தஞ்சிந்தையும் பொலிவுகொள்ள' என்றார். 'மாலை தோழியர்' எனவும்
பாடம்                                                       (499)

25.- 'அருச்சுனனையன்றிப் பிறரைமணஞ்செய்யேன்'
என்று திரௌபதி துணிவுகொண்டிருத்தல்.

ஆண்டெரிப்பிறந்தபோதே யன்பினாலெந்தைநேர்ந்த
பூண்டெரிமார்பனின்றிப் பொன்னவைபொலியத்தோன்றி
ஈண்டெரிமுன்னர்மன்ன ரிழிவுறவேட்டிலானேல்
மீண்டெரிபுகுவனென்னு மெண்ணமேவிளையுநீராள்.