37.- கங்கையைக் காட்சியிற் கண்ட சந்தனுவின் ஐயம். வையகமடந்தைகொல் வரைமடந்தைகொல் செய்யபங்கயமலர்த் திருமடந்தைகொல் துய்யவண்கலைவிதச் சொன்மடந்தைகொல் ஐயமுற்றனனிவ ளார்கொலென்னவே. |
(இ - ள்.) வையகம் மடந்தை கொல் - (இவள்)பூமிதேவிதானோ? வரை மடந்தைகொல் - மலைமகளோ? செய்ய பங்கயம் மலர் திருமடந்தை கொல் - செந்நிறமுள்ளதாமரைமலரில் வீற்றிருக்கின்ற திருமகள்தானோ? துய்ய வள் விதம் கலை சொல்மடந்தை கொல் - வெண்ணிறமுள்ள செழிப்பான பலவகைப்பட்ட கலைகளுக்கும்உரிமை பூண்ட சொல்லுக்குஉரிய தெய்வமான சரசுவதிதானோ? (அல்லது), இவள்ஆர் கொல் - இவள் வேறு எவளா யிருப்பாளோ? என்ன - என்ற, (அந்தக்கங்கையின் பெண் தெய்வமான மகளைக்குறித்து), ஐயம் உற்றனன்- (சந்தனு)சந்தேகித்தான்; (எ-று.) மிக்க பொறுமையுடையாள் போலுதலால் 'வையகமடந்தை கொல்' என்றும், கற்புடையாள்போலத் தோன்றுதலால் 'வரை மடந்தைகொல்' என்றும், பேரழகுபெற்றுப்பாக்கியவதியாயிருத்தலால் 'திருமடந்தைகொல்' என்றும், பேரறிவுடையாள்போலத்தோன்றுதலால், 'சொல்மடந்தைகொல்' என்றும் ஐயுற்று, அன்னார் இங்கு வருவதற்குக்காரணந் தெரியாமையால், 'ஆர்கொலோ' என்று துணிவுபிறவாது கூறினான்சந்தனுவென்க. அகத்திணைக் கோவைகளில் முதலில் காட்சியும் பின்னர் ஐயமும்கூறப்படுவது போலவே, இங்கும் கீழ்ச் செய்யுளாற் காட்சியும், இச்செய்யுளால் ஐயமும்கூறப்பட்டன. (45) 38.- தெளிவும் வினாவுதலும். கண்ணிமைந்திருநிலங் காலுந்தோய்தலாற் பெண்ணிவன்மானுடப் பிறப்பினாளென எண்ணமுற்றவளரு கெய்தியாவர்செய் புண்ணியநீயெனப் புகழ்ந்துபோற்றினான். |
(இ - ள்.) கண் இமைத்து - கண்கள் இமைக்கப்பெற்று கால் உம் - பாதங்களும்,இரு நிலம் தோய்தலால் - பெரியபூமியிற் படிதலால், பெண்இவள் - பெண்ணாகியஇவள், மானுடம் பிறப்பினாள் - மனிதப் பிறவியைச் சேர்ந்தவள், என - என்று, (கண்டமாதின் திறத்தில்), எண்ணம் உற்று- (ஐயவறிவு நீங்கித் தெளிவான)எண்ணத்தையடைந்து, அவள் அருகு எய்தி - அவளுடைய சமீபத்திற் போய், நீ-,யாவர் செய் புண்ணியம் - யார் செய்த புண்ணியப் பயனாகத் தோன்றியவள்?" என -என்று, புகழ்ந்து போற்றினான்-; கண்ணிமைத்தல், பாதங்கள்பூமியிற்படிதல், அணிந்த மலர் மாலை வாடுதல் என்ற இன்னோரன்னவை, தேவரினும் மானிடர்க்குள்ள வேறுபாடுகளென்றறிக. 'தெய்வமகளோ?' என்று ஐயுற அவ்வளவு பேரழகு பெற்ற ஒருத்தி ஒருத்தற்கு மகளாகவாய்ப்பது புண்ணியப் பயனே யாதலால், 'யாவர்செய் புண்ணியம் நீ' என்றான், |