என்று கூறியருளினன். பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்துருவென்பதை இளமையிலேயே அறிந்து அதனாலும் முந்தினசன்மங்களின் தொடர்ச்சியாலும் மிக்கபகைமையைப் பாராட்டி எப்பொழுதும் அவ்வெம்பெருமானை நிந்திப்பதே தொழிலாகஇருந்தான். இவன், தான் கண்ணன் விஷயமாகப் பலவாறுகூறம் தூஷணைச்சொல்லையே அவனை வெல்லப் போர் தொடுக்கும் வலிய கருவியாகக் கருதியிருந்தனனென்பதுதோன்ற, 'கண்ணன் தன்னையவமதித்துக் கழறும் புன்சொற் கார்முகத்தைத் திண்ணென்கருத்தான்' எனப்பட்டான். (517) 43.-இது, சராசந்தனைக் குறித்தது. தார்வண்டிமிரத்தேனொழுகுந் தடத்தோள்வீரன்சராசந்தன் போர்வெஞ்சரத்தால்யாவரையும் புறங்கண்டன்றிப்போகாதான் சீர்வண்மதுராபுரிவிடுத்துத் துவராபதியிற்சென்றொதுங்கக் கார்வண்ணனையுநெடுங்காலம் வென்றானிவன்காணென்றாரே. |
(இ-ள்.) தார் - மாலையில், வண்டு இமிர - வண்டுகள் ஒலிக்க, தேன் ஒழுகும்-(அதனினின்று) தேன்வழியப்பெற்ற, தட தோள்-பெரிய தோள்களையுடைய, வீரன் - இந்தவீரன், போர் - போரில், வெம்சரத்தால் - கொடிய அம்புகளால், யாவரைஉம் - எதிரிகளெல்லோரையும், புறம்கண்டு அன்றி - முதுகுகொடுக்கச்செய்தல்லாமல், போகாதான் - (அப்போரினின்று) மீண்டுசெல்லாதவனான, சராசந்தன்-; கார் வண்ணனைஉம் - காளமேகம் போலும் திருநிறமுடைய கண்ணனையும், சீர் வள் மதுராபுரி விடுத்து துவராபதியில் சென்று நெடு காலம் ஒதுங்க - சிறந்த அழகிய மதுராபுரியைவிட்டுத் துவாரகையிற் போய் நெடுங்காலம் ஒதுங்கும்படி, வென்றான் - சயித்தவன், இவன்-; காண்- அறிவாய்; என்றார் - என்று (செவிலித்தாயர்) சொன்னார்கள்; (எ-று.) மகததேசத்து அரசனான பிருகத்ரத னென்பவன் மைந்தனில்லாக்குறையால் வனத்திற்சென்று சண்டகௌசிக முனிவனைவணங்கி வரம்வேண்ட, அவன் மாமரத்தின் கனியொன்றைக் கொடுக்க, அதனை அவ்வரசன் தன்மனைவியரிருவர்க்கும் பகிர்ந்து கொடுத்தான். அதனால் அவ்விருவரிடத்தும் பாதிபாதியாகக் குழந்தை பிறந்தது. அவற்றை அவன் ஊர்ப்புறத்தி லெறிந்து விடும்படிகட்டளையிட, அங்ஙனம் எறியப்பட்ட அப்பிளவுகளை அந்தக்கிராமதேவதையாகியஜரையென்பவள் இரவில் ஊர்வலம் வருகையில் கண்டு எடுத்துப் பொருத்திப்பிழைபித்து, தன்னாற் பொருத்தப்பட்ட காரணத்தால் ஜராசந்த னென்று பெயரிட்டுவளர்க்கும்படி அக்குழந்தையைத் தந்தையினிடம் கொடுத்துப் போயினள். அங்ஙனம்வளர்ந்து, அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில் அரசாண்டு செருக்குக் கொண்டுபற்பல அரசர்களைப் போரிற் கொன்று அநேக அரசர்களை வென்று சிறையில்வைத்திருந்த சராசந்தன், அஸ்தி, பிராஸ்தி யென்னும் தனது பெண்களிருவரைக்கண்ணனதுமாமனாகுங் கம்சனுக்கு மணஞ்செய்வித்திருந்தான். பின்பு கண்ணன்கம்சனைக்கொன்றது காரணமாகச் |