மாலைக்கு அருவியை உவமைகூறியதற்கு ஏற்ப, தோளையும் மார்பையும் மலையெனக்கொள்க, நீலகிரிபோல்நின்ற பூசுரன்' என்றதுங் காண்க. இவன் நின்ற நிலையைக் காண்கையிலேயே அரசர்கள் முகம் கருகுதலை இவனது மேனியின் நீலநிறம் மேல்விழுதலாற் கருகுவதுபோலுமென்ற கற்பனை தொனிக்க, 'தரணிபர் தம்முகம்கருக நீலகிரிபோல்நின்ற' என்றார். பூஸு ரன் - வடசொல், சாரம்=ஸாரம்: தேன்புஷ்பத்தின் சாரமாதல் காண்க. (532) 58.-அருச்சுனன் திரௌபதியோடும் உடன்பிறந்தாரோடும் செல்லல். அந்தரதுந்துபிமுழங்கச்சங்கமார்ப்ப வானகதுந்துபி புதல்வனாதியாக, வந்திருந்தபேரவையைமதியானாகி மாலையிடுபசுஞ்செம்பொன் மாலையோடும், சந்திரனு முரோகிணியுமென்னமுன்னர்த் தான்வளைத்த தடஞ்சிலைக்கைத்தலத்திலேந்தி, இந்திரசூனுவுமெழுந்தாங்கேகலுற்றா னிருபுறமுந்துணைவர்வர விணையிலாதான். |
(இ-ள்,) அந்தரம் துந்துபி முழங்க - வானத்தில் (தேவர்கள் முழக்கிய) துந்துபிவாத்தியம் ஆரவாரிக்க, சங்கம், ஆர்ப்ப - சங்க வாத்தியங்கள் ஒலிக்க, இந்திரசூனுஉம் - இந்திரனதுகுமாரனான அருச்சுனனும், ஆனகதுந்துபி புதல்வன் ஆதிஆக வந்திருந்த பேர் அவையை மதியான் ஆகி - வசுதேவகுமாரனான பலராமன்முதலாக வந்திருந்த பெரிய அந்தச்சபையிலுள்ளோரை மதியாதவனாய், மாலை இடுபசு செம் பொன்மாலையோடுஉம் - (தனக்கு) மணமாலையையிட்ட பசிய சிறந்தபொன்னலாகிய மாலைபோல் விளங்குகிற திரௌபதியுடனே, சந்திரன்உம்உரோகிணிஉம்என்ன -சந்திரனும் (அவன்மனைவியாகிய) உரோகிணிதேவியும்போல,முன்னர் தான் வளைத்த தட சிலை கைத்தலத்தில் ஏந்தி - முன்பு தான் வளைத்தபெரிய அந்தவில்லைக் கையிலெடுத்துக்கொண்டு, துணைவர் இரு புறம்உம் வர-(தனது) உடன்பிறந்தவர்நால்வரும் தனது இரண்டுபக்கத்திலும் உடன்வர, இணைஇலாதான் - ஒப்பில்லாதவனாய், ஆங்கு எழுந்து ஏகல் உற்றான் -அவ்விடத்தினின்று புறப்பட்டுச் செல்லத்தொடங்கினான்; (எ- று.) 'ஆனக துந்துபி புதல்வன்' என்பதற்கு - கண்ணன் என்று உரைத்தலும் ஒன்று 'ஆனகதுந்துபி முதல்வன்' என்றும் பாடமுண்டு; அப்பொழுது தனது நிசரூபத்தைமறைத்து வேற்று வடிவங் கொண்டிருத்தலால், கண்ணனையுமுட்பட மதியாதுசென்றான், வெளிப்படாதிருத்தல் வேண்டியென்க. வசுதேவர் பிறந்த காலத்தில்,தேவர்கள், பின்பு இவரிடத்துத் திருமால் கண்ணனாகத்திருவவதாரஞ் செய்வதையறிந்து,ஆனகம் துந்துபி என்கிற வாத்தியங்களை முழக்கினார்க ளாதலால், வசுதேவர்க்கு 'ஆனகதுந்துபி' என்று ஒருபெயராயிற்று. சீவசிந்தாமணியில் "செம்பொன்வரைமேற்பசும்பொன் னெழுத் திட்டதே போல்" என்ற இடத்து, ஆசிரியர் நச்சினார்க்கினியர் 'செம்மை பசுமை - தொடை முரண்; ஈண்டு வண்ணவேறுபாடு இன்று' என்றுஉரைத்தது, இங்கு 'பசுஞ் செம்பொன்மாலை' என்ற விடத்துங் கொள்ளத்தக்கது.பசுஞ்செம்பொன்மாலை - உவமையாகுபெயர். (533) |