உரைசால்பெருமை-கற்பினாலாகிய புகழ்ச்சி; "தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" என்றது காண்க. இதுமுதல் இருபத்தைந்து கவிகள்-பெரும்பாலும்மூன்றாஞ்சீர் மாங்கனிச்சீரும், மற்றையவை மாச்சீர்களுமாகிய கலிநிலைத்துறைகள். 74. | காதிற்கலந்தகடைக்கண்ணிதன் கற்புமன்பும் சோதித்தலுன்னித்தணியாத துவக்குநோயன் கோதித்தநெஞ்சன்பெருமூப்பினன் கூர்ந்துநாளும் வாதித்தலன்றிமகிழாமனை வாழ்வுபூண்டான். |
(இ-ள்.) (அவன்), காதில் கலந்த கடைக்கண்ணிதன் - காதையளாவிய கண்ணின்கடையையுடைய அம்மனைவியினது, கற்புஉம்-பதிவிரதாதருமத்தையும். அன்புஉம்-(தன்னிடம்அவளுக்கு உள்ள) அன்பையும், சோதித்தல் உன்னி-(தான்) பரிசோதித்தறியநினைத்து, தணியாத துவக்கு நோயன்-குறையாத (மிக்க) குட்டநோயைக்கொண்டவனும், கோதித்த நெஞ்சன்-(எப்பொழுதும்) கோபத்தையேகொண்டமனத்தையுடையவனும், பெருமூப்பினன் - முதிர்ந்த முதுமையையுடையவனுமாய்,-நாள்உம் - தினந்தோறும், கூர்ந்து வாதித்தல் அன்றி- மிகுதியாக (மனையாளை)வருத்தப்படுத்துதலேயல்லாமல், மகிழா- (ஒருபொழுதாயினும்) மகிழ்ச்சிக்குஇடமில்லாத,மனை வாழ்வு-இல்லறவாழ்க்கையை, பூண்டான்-மேற்கொண்டான்; அந்த மௌற்கலியன், அவளதுகற்பின் உறுதியையும், அன்பின்நிலையையும் சோதிக்கக்கருதி, மிகுந்த குஷ்டநோயும், அதனாற் சிதைந்த வடிவமும், மிக்க கிழத்தனமும், எப்பொழுதும், பெருங்கோபமும், உடம்பில் துர்க்கந்தமு முடையவனாகக் தன்னைக் காட்டியதோடு மனையாளை மிகவும் வருத்துதலுஞ்செய்தனன் என்பதாம். துவக்குநோய்- உடல்நோய்: த்வக் - வடசொல்; தோல்: உடம்புக்கு இலக்கணை. கோதித்த-க்ரோதம் என்ற வடசொல்லின் திரிபான கோதம்என்பதனடியாப்பிறந்த பெயரெச்சம். "குழைப்புறங்கடந்த செங்கண்" என்றார்போல, 'காதிற்கலந்த கடைக்கண்ணி' என்றார்; "கண் செவியுறப்போந் தகன்றனவே" என்றார் சிந்தாமணியாகும். (549) 75. | கச்சிற்கடங்காமுலையாளக் கணவனுண்ட மிச்சிற்புறத்துவிரல்வீழவும் வீழ்தன்மிஞ்சிக் குச்சித்தலின்றிநுகர்ந்தாள் கொடுங்காமநோய்கொண்டு இச்சித்தவின்பநுகராம லிளைத்தமெய்யாள். |
(இ-ள்.) கொடுங் காமம் நோய் கொண்டு இச்சித்தஇன்பம் நுகராமல் இளைத்த மெய்யாள்-கொடிய காமநோயைப் பொருந்தி விரும்பிய சிற்றின்பத்தை அனுபவியாமல்மெலிந்தஉடம்பையுடையவளான, கச்சிற்கு அடங்காமுலையாள்- கச்சுக்குஅடங்காத(பருத்த) தனங்களையுடைய அந்த நாளாயணி, அ கணவன் உண்ட மிச்சில் புறத்துவிரல் வீழஉம்-அந்தக்கணவன் உண்ட அந்நசேஷத்தில் (அவன்) கைவிரல்அழுகிவிழுந்துகிடக்கவும், குச்சித்தல் இன்றி- அருவருப்புக்கொள்ளுதலில்லாமல்,வீழ்தல் மிஞ்சி நுகர்ந்தாள்- விருப்பம்மிக்கு (அந்தச்சேடித்த அன்னத்தை) உண்டாள்;( எ- று.) |