பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்309

     மௌற்கல்யன் அங்ஙன் பலவாறு கொடுமைசெய்யவும் நாளாயணி அவன்பக்கல்
அன்புசிறிதுங்குறையாமல் பலவகை உபசாரங்களையும் வழுவாது நன்மனத்தோடு
புரிந்து முறைப்படி அவன் உண்டுமிகுந்த எச்சிலைத்தான் உண்டு
வாழ்ந்திருக்கையில்ஒருநாள் அவன்உண்ட மிச்சிலில் அவனுடைய கைவிரலொன்று
அற்றுவிழுந்துகிடக்கக் கண்டும் சிறிதும் அருவருப்புக்கொள்ளாமல் அவ்வுணவை
அன்போடு உண்டனளென்பதாம்.                                (550)

76.அன்பன்றெரிவைவழிபாடுகண் டார்வமெய்தித்
துன்பம்பயந்தபிணியாலழி தோற்றமாற்றித்
தன்பங்கையீசன்றிறைநல்கமுன் சாபம்வாங்கும்
வன்பன்றனக்குங்கிடையாத வடிவுகொண்டான்.

     (இ-ள்.) அன்பன்-கணவனான  அம்முனிவன், தெரிவை வழிபாடு கண்டு-(தன்)
மனைவி (தன்னை) வழிபட்டுவந்த விதத்தைப் பார்த்து, ஆர்வம் எய்தி-(அவளிடத்து)
அன்புபொருந்தி, துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி-துன்பத்தைத்தந்த
பெருவியாதியினால் இயல்பழிந்த தன்வடிவத்தை மாற்றி, ஈசன் முன் தன் பங்கை
திறை நல்க சாபம் வாங்கும் வன்பன் தனக்குஉம் கிடையாத வடிவு கொண்டான்-
சிவபிரான் முன்பு தன் வாம பாகத்தை(த்தன்மனைவியான பார்வதிக்கு)
உரியபொருளாகக் கொடுக்கும்படி (தன் கரும்பு) வில்லை வளைத்துப் போர்செய்த
வலிமையையுடைய மன்மதனுக்கும் பெறுதற்கு அரிய (மிக்க அழகையுடைய)
வடிவத்தைக் கொண்டான்; ( எ- று.)

     அங்ஙனம் அவள் நிலைகுலையாது வழிபட்டுவந்ததை அவன் பார்த்து மிகுந்த
திருப்பதிகொண்டு தனதுநோய்வடிவத்தை யொழித்துத் தவமகிமையாற் காமனினுஞ்
சிறந்த கட்டழகுடைய வடிவத்தைக் கொண்டனனென்பதாம். மன்மதன் சிவபிரான்
நெற்றிக் கண்ணினால் எரிபட்டானாயினும், பின்பு அக்கடவுள் பார்வதியினிடம்
காதல்கொண்டு அவளை மணம்புணர்ந்து அவளை என்றும் பிரியாது
அர்த்தநாரீசுவரமூர்த்தியாயினமைபற்றி, 'தன்பங்கை யீசன் திறை நல்க
முன்சாபம்வாங்கும் வன்பன்' என்றார். சிவபிரான் உமைக்குக் கொடுத்த
இடப்பாகம்,மன்மதனுக்குத் தோற்றுத்தந்த திறைப்பகுதியாகக் கற்பிக்கப்பட்டது.     
                                                           (551)

77.மின்னேயுனக்குமிகுகற்புடை மீனுமொவ்வாள்
இன்னேவரம்வேண்டுவவேண்டுக வீண்டையென்ன
நின்னேயமென்றும்பிரியாநலன் நேர்கவென்றாள்
தன்னேரிலாதமனைவாழ்விற் றவத்தின்மிக்காள்.

     (இ-ள்.) 'மின்னே - மின்னல்போன்றவளே! மிகு கற்பு உடைமீன்உம் -
மிக்கபதிவிரதாதருமத்தையுடைய நக்ஷத்திரரூபமுள்ள அருந்ததியும், உனக்கு
ஒவ்வாள்- நினக்கு(க் கற்பில்) நிகராகாள்; இன்னே - இப்பொழுதே, ஈண்டை
இவ்விடத்தில்,வேண்டுவரம் வேண்டுக-(நீ) விரும்பும் வரங்களை (என்னிடம்)
வேண்டிப்பெற்றுக்கொள்வாயாக,' என்ன - என்று (மௌற்கலியன் நாளாயணியை
நோக்கிச்)சொல்ல,- தன் நேர் இலாத மனை வாழ்வில் தவத்தில்