பக்கம் எண் :

310பாரதம்ஆதி பருவம்

மிக்காள். தனக்கு ஒப்பில்லாத இல்லறவாழ்க்கையிலிருந்து செய்யுந்தவத்திற்
சிறந்தவளான அவள், நின் நேயம் என்றுஉம் பிரியாநலன் நேர்க என்றாள் -
உனதுஅன்பு எந்நாளும் நீங்காமையாகிய நல்லவரத்தை (எனக்கு) உடன்பட்டுத்
தருவாயாக 'என்று (கணவனை வரம்) வேண்டினாள் (எ - று.)

     அவன் மிக்க அன்போடு அவளைக் கொண்டாடி 'நினக்கு வேண்டும் வரம்
வேண்டுவாயாக' என்று சொல்ல, அவள் வேறொருவரத்தையும் வேண்டாமல் 'உன்
அன்பு எப்பொழுதும் நீங்காதாகுக' என்று வேண்டினள் என்பதாம்.      (552)

78.குன்றுந்நதியும்மரனும்பைங் கொடியுமாகித்
துன்றுந்துணையாய்ப்பலயோனிக டோறுமெய்தி
நின்றுஞ்சரித்துமரும்போக நெடிதுதுய்த்தார்
என்றும்பிரியாதிருவோரு மிதயமொத்தே.

      (இ-ள்.) (அவன் அங்ஙனம் வரங்கொடுத்தபின்பு), -இருவோர் உம்-
(கணவனும்மனைவியு மாகிய) அவ்விருவரும், 'இதயம் ஒத்து-மனங்கலந்து,
குன்றுஉம் நதிஉம்மரன்உம் பைங்கொடிஉம் ஆகி-மலையும் (அதனைச்சார்ந்து
பெருகுகிற) நதியும்மரமும் (அதன்மேற்படரும்) பசியபூங்கொடியுமாய்,
துன்றும்துணை ஆய் பலயோனிகள் தோறும் எய்தி - இங்ஙனமே இன்றியமையாது)
பொருந்திய துணையாகிப்பலவகையுருவங்களிற் பொருந்தி, நின்றுஉம் சரித்துஉம் -
(ஓரிடத்து) நின்றும்(பலவிடங்களிற்) சஞ்சரித்தும், என்றுஉம் பிரியாது -
எப்பொழுதும் (ஒருவரையொருவர்) பிரியாமல், நெடிது - நெடுங்காலம், அரு
போகம்-அரிய இன்பத்தை,துய்த்தார் - அனுபவித்தார்கள் (எ - று.)

     அவன் குன்றாக வடிவுகொள்ள இவள் நதியாகவடிவுகொண்டு அதனைச்
சார்ந்தும், அவன் மரவடிவுகொள்ள இவள் கொடிவடிவு கொண்டு அதனைத்
தழுவியும், இவ்வாறு பற்பல யோனிபேதங்களிற் புக்கு அவ்விருவரும் சுகானுபவஞ்
செய்தன ரென்க.                                               (553)

79.இந்தப்பிறப்பினலமெய்தி யிறந்தபின்னும்
சிந்தித்தவண்ணமிவளிந்திர சேனையாகி
அந்தப்பதியையடைந்தாண் மற்றவனுமஞ்சி
வந்தித்ததொல்லையருமாதவ மன்னிநின்றான்.

     (இ-ள்.) இந்த பிறப்பில் - (நாளாயணயாகிய) இந்தச்சன்மத்திலே, நலம்
எய்தி-(இப்படிப் பலவாறு) இன்பத்தை அனுபவித்து, இறந்த பின்னும்-, இவள்-,
சிந்தித்தவண்ணம்-நினைத்தபடியே, இந்திரசேனை ஆகி-(அடுத்தபிறப்பில்)
இந்திரசேனை யென்பவளாய், அந்த பதியை அடைந்தாள் -(முன்பிறப்பிற்
கணவனான) அந்த மௌத்கலியனையே அடுத்தாள்; (அப்பொழுது) அவனும்-,
அஞ்சி- (முத்திப்பேரின்பத்தில் விருப்பத்தால் இவளைச்சேர்ந்து சிற்றின்பம்
நுகர்தற்குப்) பயந்து, வந்தித்த தொல்லை அரு மா தவம் மன்னி நின்றான்-
(கடவுளை)வணங்கிச் செய்கிற தொன்றுதொட்டு வருகிற அரியபெரிய
தவவொழுக்கத்திற்பொருந்திநின்றான்; (எ- று.) மற்று - வினைமாற்று.