90.- பாண்டவரைவரும் கலியாணமண்டபஞ் சேர்தல். பாடுஞ்சுருதிமறைவாணரும் பாரிலுள்ள சூடுங்கனகமுடிவேந்தருந் தொக்குநிற்ப நீடுங்கதிர்மாமணித்தூண்க ணிரைத்தபத்தி ஆடுங்கொடிமண்டபமெய்தின ரண்டர்போல்வார். |
(இ-ள்.) பாடும்-ஸ்வரத்தோடு சொல்லுகிற, சுருதி-வேதங்களையுடைய, மறை வாணர்உம் - வைதிகபிராமணர்களும், பாரில் உள்ள - பூமியிலுள்ள, சூடும் கனகம் முடி வேந்தர்உம் - தரித்த பொன்மயமான கிரீடத்தையுடைய அரசர்களும், தொக்கு நிற்ப - திரண்டுநிற்க,-அண்டர் போல்வார்-தேவர்கள்போன்ற பஞ்சபாண்டவர்கள்,- நீடும் கதிர் மா மணி, தூண்கள் நிரைத்த பத்தி - நெடுந்தூரஞ்சென்றுவிளங்குகிற ஒளியையுடைசிறந்த இரத்தினங்கள் பதித்ததூண்களைவரிசையாகவைத்த ஒழுங்கையுடைய, ஆடும் கொடி மண்டபம் - அசைகின்றகொடிகள் கட்டிய மண்டபத்தை, எய்தினர் - அடைந்தார்கள்; (எ-று.)- 'கனமாமணி' என்றும்பாடம். 91.-தருமனுக்கும் திரௌபதிக்கும் நடந்த விவாகத்தை இதுமுதல் ஐந்து கவிகளிற் கூறுகிறார். குறிக்கும்பணிலமுதலாயிர கோடியாகப் பிறிக்குங்கருவியிடந்தோறும் பிளிறியார்ப்பச் செறிக்குங்கழற்காலறன்மைந்தனைச் செம்போன்வேதி எறிக்குங்கிரணமணிப்பீடம தேற்றினாரே. |
(இ-ள்.) குறிக்கும் பணிலம் முதல் - ஊதப்படுகிற சங்கவாத்தியம்முதலாக, ஆயிரம் கோடி ஆக பிறிக்கும் கருவி - மிகப்பலவாகப் பகுக்கப்படுகிற வாத்தியங்கள், இடம் தோறுஉம் பிளிறி ஆர்ப்ப - பலவிடங்களிலும் மிகுதியாக முழுங்க,-செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை - உறுதியாக அணிந்த வீரக்கழலையுடைய பாதத்தையுடைய 'தருமபுத்திரனை, செம்பொன் வேதி- சிவந்த பொன்னினாற் செய்யப்பட்ட விவாகவேதிகையிலுள்ள, எறிக்கும் கிரணம் மணி பீடம்அது -வெளிவீசுகிற கிரணங்களையுடைய இரத்தினங்கள் பதித்த ஆசனத்தில், ஏற்றினார்-இருக்கவைத்தார்கள்; இதற்குஎழுவாய், முன்நின்று மணத்தைநடத்தும் புரோகிதன் முதலியோர்: அடுத்தகவியில் "வலத்தில் வைத்தார்" என்பதற்கும் 94-ஆம் கவியில் "தீவலஞ்செய்வித்தார்" என்பதற்கும், இங்ஙனமே காண்க. கருவி - தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரப்புக்கருவி என நால்வகைப்படும். (566) 92. | இடத்தோளிவட்கும்வலத்தோளிவ் விறைவனுக்கும் திடத்தோடுரைத்தகுறியின்பயன் சேர்ந்துதோய விடத்தோடமுதங்கலந்தென்ன மிளிரும்வேற்கண் வடத்தோடுவிம்முமுலையாளை வலத்தில்வைத்தார். |
(இ - ள்.) இவட்கு இடம் தோள்உம் - இந்தத்திரௌபதியின் இடத்தோளும், இ இறைவனுக்கு வலம் தோள்உம்-இந்தத் தரும |