பக்கம் எண் :

திரௌபதி மாலையிட்ட சருக்கம்321

வேறு.

98.-பாண்டவரின் செய்தியை யறிந்த துரியோதனாதியர் மீண்டுவந்து
அவரோடு பொருதல்.

ஆண்டு மன்றல்பெற் றங்குரித் தாரிகற்
பாண்டு மைந்த ரெனுஞ்சொற் பரவலும்
தாண்டு வெம்பரித் தேர்த்தார்த்த ராட்டிரர்
மீண்டும் வந்தவர் மேல்வினை செய்யவே.

இதுவும், அடுத்த கவியும்-குளகம்.

     (இ-ள்.) 'இகல் பாண்டு மைந்தர்-வலிமையையுடையபாண்டுவின் குமாரர்கள்,
ஆண்டு - அவ்விடத்தில் (பாஞ்சாலநகரத்தில்), மன்றல் பெற்று-விவாகத்தைப்
பெற்று,அங்குரித்தார்-(மீண்டும்) முளைத்துத் தோன்றினார்கள்,' எனும்-என்கிற,
சொல்வார்த்தை, பரவலும்-(எங்கும்) பரவியவளவிலே,-தாண்டு வெம் பரி தேர்
தார்த்தராட்டிரர்-தாவிச்செல்லுகிறவேகமுள்ள குதிரைகள்பூண்ட தேரையுடைய
திருதராட்டிரன் பிள்ளைகள் (துரியோதனாதியர்), மீண்டும்உம் வந்து - திரும்பி
வந்து 'அவர்மேல் வினைசெய்ய - அப்பாண்டவர்கள்மேல் போரைத் தொடங்கிச்
செய்ய,-(எ-று.)- 'வென் கண்டது' என அடுத்த கவியோடு முடியும்.

     தார்த்தராஷ்ட்ரர் - வடசொல்; த்ருதராஷ்ட்ர னென்பதன்மேல் வந்த தந்தி
தாந்தநாமம்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும்-பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகியகலிவிருத்தங்கள்.

99.-துருபதன்சேனை துரியோதனன்சேனையை வெல்லல்.

சென்றசேனையுந் திட்டத்துய்மன்னுடன்
நின்றுசேனையு நேருறுபூசலில்
கொன்றசேனை யொழிகுரு சேனையை
வென்றசேனை வெகுண்டுவென்கண்டதே.

     (இ - ள்.) சென்ற சேனைஉம் - (துரியோதனாதியர் கொண்டு) சென்ற (கௌரவ)
சேனையும், திட்டத்துய்மன்னுடன் நின்ற சேனைஉம்-(துருபதகுமாரனான)
திருஷ்டத்யும்நனுடனே நின்ற(பாஞ்சால) சேனையும், நேர்உறு-(தம்மில்)
எதிர்த்துச்செய்த, பூசலில் - பெரும்போரில், கொன்ற சேனை ஒழி குரு சேனையை
-கௌரவசேனையில் கொல்லப்பட்ட பகுதியொழிய எஞ்சிநின்ற பகுதியை, வென்ற
சேனை வெகுண்டு வென் கண்டது-வெற்றி கொண்ட பாஞ்சால சேனை
கோபங்கொண்டு முதுகு கொடுக்கச்செய்தது; ( எ- று.)

     திட்டத்துய்மன் சேனைத்தலைவனாய்ப் போர்நடத்தியதனால்,
'திட்டத்துய்மன்னுடன் நின்ற சேனை' எனப்பட்டது.    திட்டத்துய்மன்னுடன்,-
விரித்தல், 'கண்டவே' என்றும் பாடம்.                               (574)